இலங்கை

அநுரவின் சித்தாந்தத்தை வரவேற்கின்றோம் ஆனால் அதன்படி அவர்கள் நடக்கினறார்களா? என்பது கேள்விக்குறி

சுயேச்சை குழுக்கள் எந்தவிதமான பிரயோசனங்களும் அற்றவை. அந்த சுயேட்சை குழுக்கள் பற்றியோ அல்லது அதில் போட்டியிடுபவர்கள் பற்றியோ நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை. இதில் சிங்கள கட்சிகளின் பின்னணியே காணப்படுகின்றது. அதில் இருக்கக்கூடிய வேட்பாளர்கள் கணவன், மனைவி, பிள்ளைகள் என உள்ளார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்றிரவு அராலியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

களத்தில் இருக்கும் கட்சிகள் என்ற வகையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள்தான் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்யக்கூடிய கட்சிகளாக காணப்படுகின்றன. இவர்களில் யார் பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி, தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுப்பார்கள் என்பதுதான் இங்கே விடயம்.

தற்போது புதிய ஒரு ஜனாதிபதி வந்திருக்கின்றார். அவர் தன்னை ஒரு இடதுசாரி என கூறுகின்றார். மக்கள் எல்லோரும் சமத்துவமாக வாழ வேண்டும். மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது எனக் கூறுகின்றார். அவர் கூறுகின்ற சித்தாந்தம் உண்மையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் அந்த சித்தாந்தத்தின்படி அவர்கள் நடக்கிறார்களா என்பது தான் கேள்வி.

அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகின்றது. தமிழ் மக்களுக்கு அவர் தந்த உறுதி மொழிகள் பல. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்றார்கள். ஆனால் இப்போது நீக்க வேண்டிய தேவை இல்லை என்கின்றார்கள். அதுபோல தான் மாகாண சபை தேர்தல் இப்போது அவசியம் இலலை. நாட்டினுடைய பொருளாதார பிரச்சினைகள் தான் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

தமிழ் மக்கள் 30 வருட காலமாக இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காக போராடி, மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது இன்னுயிர்களை இழந்து இருக்கிறர்கள். 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் தமது இன்னுயிர்களை இழந்து இருக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இன்று யுத்தம் முடிவுக்கு வந்தாலும் கூட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே காணப்படுகின்றன.

வடக்கு கிழக்கு என்பது யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். இந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான பெண்கள் கணவன்மார் இல்லாமல் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக தாங்களே குடும்ப சுமைகளை சுமக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு அல்லது யுத்தத்தால் அழிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பிரத்தியேகமான ஏதாவது திட்டங்களை கொண்டு வந்து இந்த பெண்களுக்கு நிரந்தர ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியதாகவோ, அல்லது இளைஞர்களுக்கு ஒரு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவோ வடக்கு கிழக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை.

ஆகவே வந்திருக்கக் கூடிய புதிய ஜனாதிபதி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இருக்கின்றது. வருகின்ற தேர்தல் என்பது அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஒரு முக்கியமான தேர்தல். ஏனென்றால் அவர்களுக்கு பாராளுமன்றில் மூன்றே மூன்று ஆசனங்கள் தான் இருந்தன. அதில் இப்போது ஜனாதிபதியாக வந்தவர் ஒருவர். இப்போது பிரதமராக இருப்பவர் ஒருவர். இப்போது அமைச்சராக இருப்பவர் ஒருவர்.

225 பாராளுமன்ற ஆசனங்களில் குறைந்தபட்சம் 113 ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெரும்பான்மை இருந்தால் தன் பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றலாம். பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டங்களை கொண்டுவர முடியும். அந்த வரவு செலவுத் திட்டங்கள் வெற்றியடைந்தால்தான் இந்த நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.

ஆகவே இந்த மூன்று பேர் என்பவர்கள் வருகின்ற தேர்தலில் 113 பேராக மாற்றப்பட வேண்டும். சிங்கள மக்கள் பெருவாரியாக வாக்களித்தால் தான் அவர்களுக்கு இவ்வாறு பெரும்பான்மை கிடைக்கும். அவர்களுக்கு அவ்வாறு கிடைக்கிறதோ இல்லையோ நாங்கள் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பலமான அணியாக சென்றால் தான் இவ்வாறான ஒரு அணியுடன் தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுடைய அபிவிருத்திகள் தொடர்பாக அவர்களுடன் பேச முடியும். அவர்களிடமிருந்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.