மாற்றத்தை நாம் விரும்பினால் அதை முன்வைப்போரை ஆதரிப்பதே காலத்தின் தேவை
International Network Melbourne, Australia
சர்வதேச வலையமைப்பு ஊடக அறிக்கை – 10 November 2024
மாற்றத்தை நாம் விரும்பினால் அதை முன்வைப்போரை ஆதரிப்பதே காலத்தின் தேவை
கடந்த காலத்திலேயே புதைந்து நின்று, நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், வருங்காலத்தையும் தொலைத்துவிடுவோம்.
அன்பார்ந்த இலங்கைவாழ் தமிழ் மக்களே!
மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கும் இவ்வேளையில், மகத்தான ஜனநாயகக் கடமையை நீங்கள் செய்யவிருக்கும் தருணத்தில், எம் எண்ணக்கருக்கள் சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகிறோம்.
ஈராண்டுகளுக்கு முன் நாட்டில் சர்வாதிகாரம் தவறி, பொருளாதாரம் முன்னெப்போதும் காணாதளவு வீழ்ச்சியடைந்து, மக்களெழுச்சி ஆட்சிமாற்றத்தைத் தோற்றுவித்தபோது, அதில் தமிழர் தாயக மக்களின் பங்கு மிகச்சிறிதளவே இருந்தது. அந்த இருண்ட அத்தியாயத்திலிருந்து இனவாத அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்து, சமத்துவத்தை வளர்த்து, ஊழலை ஒழித்து, நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று இலங்கையர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்குகின்றவராக புதிய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தோன்றினார்.
வருடைய தெரிவிலும் தமிழர் தாயகத்தினர் அவர்தம் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு காரணமாக சொற்ப ஈடுபாடே காட்டினர். இந்த நிலைப்பாடு பொதுத்தேர்தலிலும் தொடரவேண்டுமா?
தமிழ் மக்களின் தேவைகளும் கவலைகளும் பற்பல. அவர்கள் நாளாந்த வாழ்வில் மலிந்திருக்கும் வலிகள் தீர்க்கப்பட வேண்டும், சுமைகள் குறைக்கப்பட வேண்டும். தேசியம் மட்டுமே பேசிப்பேசி, அதை அடையாது போனதுக்கு காரணம் தேடுவதும், எதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையின்றித் தள்ளிப்போடுவதும், தேர்தல் காலங்களில் மட்டும் கோஷ அரசியல் செய்வதும், அதன்பின் செய்வதென்ன என்று திட்டமிடாது பயணிப்பதும் ‘தமிழ்த் தேசியத்தை’ முன்னெடுத்துச் செல்லாது.
ஒரு காலத்தில் 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த யாழ் மாவட்டம் மக்கள் தொகை வீழ்ச்சியால் இப்போது 6 ஆகக் குறைந்துள்ளது. கற்றவர்களும் இளைஞர்களும் வகை தொகை இன்றி வடகிழக்கில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க, முதியோர் தனிமையில் வாடுவதும், உழைப்போர் ஏழ்மையில் உழல்வதும், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தவிப்பதும் நீடித்துக்கொண்டே போகிறது.
இச்சூழலில், தென் இலங்கையில் ஏற்படும் கணிசமான அரசியல் மாற்றங்களையும், மக்களிடையே குறிப்பாக இளைய சமுதாயத்தவர்களிடம் அரும்பிவரும் முற்போக்கு சிந்தனைகளையும் கருத்தில் கொண்டு, மாற்றத்தை எதிர்பார்த்துக் கைகட்டி நில்லாது அதை உருவாக்குவதில் கைகொடுப்பவர்களாகவும், முழு நாட்டின் நன்மைக்கும் பங்காளிகளாகவும் நம்மை ஆக்கிக்கொள்வதே இவ்வாரத் தேர்தலில் தமிழர் நமக்குள்ள தலையான பொறுப்பாகும்.
நேர்மையிலும் இன ஒற்றுமையிலும் வேரூன்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி ஊடாக ஒற்றுமை மற்றும் அதிகாரமளித்தல் மூலம் (empowerment) இலங்கையர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு பாதையை வழங்குகிறார். இதைப் புரிந்துகொண்டு நம் பாதையை சற்று திருத்திக்கொண்டால், சிறுகச்சிறுக தமிழர் தாயகத்தை பொருளாதாரத்தில் மேம்படுத்துவது மட்டுமன்றி தமிழர் அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம்.
மேலும், இனவிகிதாசார மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டமிட்ட குடியேற்றங்கள் தமது ஆட்சியில் இடம்பெறாது என்றும், தமிழ் மக்களுடனான அரச தொடர்பாடல் அனைத்தும் தமிழிலேயே செய்யப்படும் என்றும், அனைத்து இன மக்களும் தமது அடையாளங்களுடனும் தமக்கான கலாச்சாரங்களுடனும் கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவோம் என்றும் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சிறுத்தை தன் புள்ளிகளை ஒருபோதும் மாற்றாது என்று இருந்துவிடாது, சிங்களம் தமிழர்க்கு ஒன்றுமே தராது என்று சொல்லிக்கொண்டே அரசியலில் பிழைக்காது, கிடைக்கும் சந்தர்ப்பத்தை நன்குணர்ந்து சரியாகப் பயன்படுத்தினால், நம் மக்களின் தலைவிதியை நாம் மாற்றியமைக்கலாம். “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” அல்லவா.
ஈற்றில், ‘மக்களுக்காகவே’ தேசியம் அன்றி ‘தேசியத்துக்காக’ மக்கள் அல்ல. அன்றாட வாழ்வுடன் திண்டாடிக் கொண்டிருப்போரின் நிலையை மாற்ற ஒரு இடைவெளி தேவை. அந்த இடைவெளிக்கு சற்று இடம் கொடுங்கள்.
பொருளாதார மாற்றத்தால் அதை நிரப்ப வழிவிடுங்கள். புதிய, இளைய சமுதாயம் புதிய மாற்றுவலிகளால் அதை சீர்படுத்த உதவுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உலகத்தை நம்பியும் பூகோள அரசியலில் தங்கியும் இனியும் வாழாது, புதிய உலக ஒழுங்கு எது என்பதைப் புரிந்து, யதார்த்த அரசியலில் (Realpolitik) பயணிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. மக்களை மனதில்வைத்து, இதய சுத்தியுடனும் ஆற்றலுடனும் செயலாற்றி, காலத்தின் தேவையுடன் பயணிக்க வல்லவர்களைத் தெரிந்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். உங்கள் பொன்னான வாக்குகளை மேலும் பெறுமதியானதாக மாற்றுங்கள்.
நன்றி, வணக்கம்.
ராஜ் சிவநாதன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர் (WTSL), மெல்பன்
மின்னஞ்சல்: rajasivanathan@gmail.com
அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா.