வவுனியாவில் தேர்தல் பரப்புரையில் முறுகல்!
வவுனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் மீது கேள்விகளை கேட்டு பொது மகன் ஒருவர் முரண்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, குருமன்காடு சந்தியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கி செல்வம் அடைக்கலநாதன் பரப்புரை செய்து வந்தார். இதன்போது அவர் வைரபுளிங்குளத்தில் இருந்து பண்டாரிக்குளம் செல்லும் பாதை சந்தியில் நின்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது பண்டாரிக்குளத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் அவ்வீதி வழியாக வருகை தந்திருந்தார். செல்வம் அடைக்கலநாதன் நிற்பதை அவதானித்ததும், அவ்விடத்திற்கு வந்து இந்த பண்டாரிக்குளம் வீதி 5 வருடமாக குன்றும் குழியுமாக இருந்த போது எங்கு போனீர்கள்? ஏன் இப்ப வாறீர்கள்? போதை மாத்திரை பிரச்சனையின் போது எங்கே போனீர்கள்? போதைப் பொருள் கடத்தினீர்களா? இப்ப ஏன் வாறீர்கள்? என சராமரியாக கேள்விகளை கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டார்.
இதன்போது செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு கருத்து கூறிவிட்டு அமைதியாக அவ்விடத்தில் இருந்து வெளியேறினார். அவருடன் வந்தவர்கள் குறித்த இளைஞனை சமாதானப்படுத்த முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை.