மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்!; சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது.
அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது.
அதன் பின்னர் மூச்சு பயிற்சியினால் தாக்குப்பிடித்த அர்ச்சனா, குழியில் இருந்து வெளியேறி கிராம மக்களின் உதவியுடன் தப்பியுள்ளார்.
பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிந்து (34) என்ற பெண்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. தனது கணவருக்கும் அர்ச்சனாவுக்கும் உறவு இருக்குமோ என பிந்து சந்தேகமடைந்துள்ளார்.
இதனால் சதீஷ் என்ற துப்பறியும் நபரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர் அர்ச்சனாவிடம் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரின் நம்பிக்கையை பெற்ற சதீஷ், கடந்த அக்டோபர் 23ஆம் திகதி அர்ச்சனாவை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் சதீஷின் நண்பர்கள் சிலர் காரில் ஏறியுள்ளனர்.
காட்டுப்பகுதியில் அர்ச்சனாவை அவர்கள் தாக்கியபோது, மூச்சுப்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற அவர் இறந்துபோல் நடித்துள்ளார். அதனால் அவர்கள் புதைத்துவிட்டு சென்றதும் அர்ச்சனா அங்கிருந்து தப்பித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் பிந்து, சதீஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்தது பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.
ஆங்கிலப்படமான ‘கில் பில்’யில் கதாநாயகியை உயிருடன் மண்ணில் புதைத்துவிடுவார்கள். அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தப்பிப்பார். அதேபோல் யோகா ஆசிரியையும் தப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.