பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியோர் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது
கடந்த காலங்களில் பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியல் களத்தில் ஒருபோதும் வன்முறையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
சிலருக்கு வேதனையளிக்கும் தீர்மானங்களுக்கும் எடுக்கப்படும். இதற்குப் பலமிக்கதொரு நாடாளுமன்ற அவசியமாகிறது.
அனுபவமிக்கவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூறுபவர்களும், புதிய முகங்களையே அனுப்ப வேண்டும்.
ஏனெனில், நாடு எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பிறகு புதிய திசையில் செல்ல காத்திருக்கிறது.
எமக்கு வாக்களிக்காதவர்களே இன்று தேங்காய் விலை அதிகரித்துள்ளதாகக் கூச்சலிடுகின்றனர்.
நாம் குறுகிய காலத்தில் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்வோம் என அவர்களுக்குக் கூற விரும்புகிறேன்.
தாஜூதீன், லசந்த, எக்னெலிகொடவை கொன்றவர்கள் தேடப்படுகின்றனர். அவர்களால் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியாது. அவர்களை நிச்சயமாகச் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
அதேநேரம், கடனுதவி அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த இந்தியா, தற்போது நன்கொடையின் அடிப்படையில் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.