“சாபத்திடல் ” …. கதை – 1 …. குதிருக்குள் கிடக்கும் சங்கதிகள் – சிறுகதைத் தொடர் … மீனாசுந்தர்
படிப்பின் வாசனையறியாத இந்தக் குடும்பத்திலிருந்து நான் ஆசிரியராக வருவேனென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனக்குமது பெரும் வியப்பாகத்தானிருந்தது. ஆனால் என் தந்தை மட்டும் மிகுந்த நம்பிக்கையோடு என்னைப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருப்பாராம். என் பிள்ளை கல்வியில் ஆளாகி ஊரின் முன்பு விசுவரூபமெடுத்து நிற்பான் என்பதைப் போல, பள்ளிக்குச் செல்லும் சமயங்களில் என்னை முன்விட்டு பின்னால் அப்படி விழுங்க விழுங்க பார்த்து ரசிப்பாராம்.
அப்பா உற்சாகமாய் இருக்கும் சமயங்களில், “எனக்கொரு மகன் பிறப்பான்.. அவன் என்னைப் போலவே இருக்க மாட்டான்..” என்று எம்ஜிஆரின் பாடலை மாற்றிப் பாடிக் காட்டுவாராம். அம்மா அடிக்கடிச் சொல்லியதுண்டு. எனது கல்வியின் மீது அப்பாவுக்கு ஒரு தீராக் காதலிருந்தது. ஒவ்வோர் அசைவிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர் என் கூடவேயிருந்தார். நான் வீட்டுப்பாடம் செய்யும் நேரத்தில் அவர் வீட்டிலிருந்தால் எனதருகில் வந்து ஆசையுடன் அமர்ந்து கொள்வார். புத்தகங்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்வார். புதிய புத்தகத்தைப் பிரித்து அதற்குள் முகத்தை புதைத்து, கண்களை மூடி அதன் புத்தம்புது காகித வாசனையை நாசி விடைக்க ஆழ்ந்து இழுத்து லயிப்பார். தாழாத ஆசையுடன் புதிதாக திருமணமானவன் மனைவியை வாஞ்சையுடன் தழுவுவதைப் போல.
படிக்கிற காலக்கட்டத்தில் எனக்கு ஆசிரியத் தொழில் பற்றிய சிறு எண்ணமும் இருந்ததில்லை. படித்து என்னவாகப் போகிறாயென்று லெச்சுமி டீச்சர் ஒருமுறை கேட்ட போது கூடப் பலரையும் போல நான் ஆசிரியராவேனென்று சொன்னவனில்லை. மின்விசிறி சுழல வங்கிப்பணியில் எப்போதும் சொகுசாக அமர்ந்திருப்பவர்கள் மீது எனக்கொரு ஏக்கமிருந்தது. கடவுளிடம் வரம் வாங்குவதைப் போல வந்தவரனைவரும் வரிசையில் கால்கடுக்க நின்று பவ்யம் காட்டுவதையும், பெரும் பதிவேடுகளைப் புரட்டிக் கணக்கெழுதி அவ்விபரத்தை வாடிக்கையாளரின் சேமிப்புப் புத்தகத்தில் பதிவு செய்வதையும், பணத்தை எண்ணி புத்தகத்திற்குள் வைத்துத் தருவதையும் பார்க்கையில் என்னவொரு கம்பீரம் அந்த அலுவலருக்கென நினைத்துக் கொள்வேன். வரிசையில் நின்ற சமயங்களில் நான் பலமுறை அதை ரசித்திருக்கிறேன்.
கோட்டூரில் பிறந்து வளர்ந்தேன் என்றாலும் அருகிலுள்ள ஊர்களுக்குக் கூடச் செல்லும் வாய்ப்பு அமையாதவன் நான். மன்னார்குடி, திருத்துறைப்புண்டி, திருவாரூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஊர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பேருந்து முகப்பில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். நாச்சிக்குளத்திலிருக்கும் என் அத்தை வீட்டிற்கு பள்ளி விடுமுறையில் சிலமுறை சென்றிருக்கிறேன். எனக்குத் தெரிய முப்பது கிலோ மீட்டர் தாண்டி சென்ற பெரும் பயணம் அதுவொன்று தான் என்றால் எனது பயண வரைபடத்தை அனுமானித்துக் கொள்ளுங்கள்.
பள்ளிப்படிப்பு ஐந்தாம் வகுப்போடு உள்ளுரில் முடிவுக்கு வந்திருந்தது. அதற்கு மேல் உள்ளுரிலிருக்க அப்பா அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் நாளடைவில் பழகிவிட்டிருந்தது. விடுமுறைக்கு ஊர்ப்பக்கம் வருவதோடு சரி. அந்த நாட்களுமே ஊரிலிருக்க பிடிக்காமல், எப்போது விடுதிக்குச் செல்லலாமென்று தோன்றுமளவிற்கு விடுதி வாழ்க்கை பழகிவிட்டிருந்தது. நாங்கள் வசித்த தெருவிலிருந்தவர்கள், உள்ளுர் பள்ளிக்குச் சென்றவர்களென எவரும் கல்வியில் கரை கண்டதாகத் தெரியவில்லை. எங்கள் தெருவில் கல்லூரிவரை சென்று ஆசிரியர்க் கல்வியும் முடித்து வந்திருக்கிறேன் என்றால் நானொருவன் தான். அப்பா தான் அதற்கு முழுமுதற் காரணம். படிப்பு விஷயத்தில் அப்பா போட்ட கணக்கு தப்பாகவில்லை. அப்பாவின் கணக்கு எந்த விஷயத்தில்தான் தோற்றுப் போயிருக்கிறது? விவசாயத்திலும் சரி, குடும்பத்திலும் சரி அப்பா போட்ட கணக்குளனைத்தும் அட்சரச்சுத்தம்.
பணி நியமனத்திற்கான கடிதத்தை அஞ்சலகர் கொடுக்கும் போது எனக்குக் கைகள் நடுங்கின. அப்பாவிற்கும், திண்ணையில் படுத்திருந்த தாத்தாவிற்கும் ஏனோ கண்கள் கலங்கின. அம்மா வாய் மலர்ந்து சாமியறையிலிருந்த தெய்வத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டாள். நாசியின் மேல் சிதறி விழுந்த துகள்களை எனது கண்களைப் பொத்தியவாறு அம்மா ஊதிவிட்டு, கையோடு கடிதத்தை வாங்கிப்போய் சாமி படத்திற்கடியில் வைத்து கண்களை மூடி நின்றாள். பிறகு எடுத்து வந்து திரும்பவும் எனது கைகளிலேயே கடிதத்தைத் திணித்துப் பெருமிதத்துடன் என்னைப் பார்த்தாள். எந்த ஊர்ப் பள்ளியில் பணியென்ற ஆவல் அத்தனை முகங்களிலும் துளிர்த்து நிற்க, கடிதத்தின் இதழ்களை மெல்ல பிரித்தேன் நான்.
“எந்த ஊருய்யா போட்டிருக்கு? அம்மாதான் முதலில் கேட்டாள்.
“அட..பக்கத்துலதாம்மா. குன்னியுர்”
“என்னடா சொல்றே, உண்மையாவா?”
“ஆமாம்மா..இதோ பாரேன்”
“ஆமா.நானென்ன நாலெழுத்துப் படிச்சாருக்கேன், தெரியறதுக்கு?”
அம்மாவின் வெற்றிலைப் புன்னகையில் அப்படியொரு வசீகரம். அன்றைக்கு மகிழ்ச்சியில் அம்மா மேலும் அழகாகத் தெரிந்தாள்.
“நான் ரொம்ப பயந்து கிடந்தேன். பரவாயில்ல. பக்கத்திலேயே போட்டிட்டாங்களே”
அப்பா அங்கலாய்த்த போது நான் நினைத்துக் கொண்டேன்
“படிக்கிற காலத்துல தூரமா வெரட்டி வெரட்டி அடிச்சிங்க. இப்ப மட்டும் பக்கத்துலயே இருக்கணுமா?”
அப்பா அந்த மகிழ்ச்சியுடனேயே வயலுக்குக் கிளம்பிப் போனார். ஒருவார காலத்திற்குள் பணியில் இணைய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. படுத்திருந்த தாத்தாவின் கண்களில் மட்டும் ஒரு தவிப்பும், பிரகாசமும் பரவி நிற்க, சிறிது இடைவெளிக்குப் பின் கேட்டார்.
“குன்னியுரு பள்ளிக் கூடமா போட்டிருக்கு?”
“ஆமா தாத்தா?”
“நீ அங்கதான்டா வேல பார்க்கணும். என் மனசு நெறஞ்சிப் போயிருக்கு”
அதைச் சொல்லும்போது முகத்தில் அப்படியோர் உணர்வின் பிரவாகம். சற்று நேரத்தில் தாத்தா கண்களை மூடிப் படுத்துக் கொண்டாலும் அவரின் இதழ்களில் அன்றலர்ந்த புத்தம்புது மலரின் தத்ரூபம். தாத்தாவிற்கு இப்படிப் பெருமிதம் பொங்கி வழிய என்ன காரணமென்ற குழப்பம் எனக்குள் பூஞ்சையாய்ப் படர்ந்தது. அதற்குள்ளாகவா தூங்கிப் போய் விட்டார்? குறட்டைச் சத்தம் கேட்டது. உறங்கும் நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாமென வந்து விட்டேன்.
கோட்டூர் தேனாம்பிகைத் தியேட்டரில் அன்று புதுவசந்தம் படம் போட்டிருந்தார்கள். வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அன்றிரவு நண்பன் கதிரவனுடன் படத்திற்குச் சென்று விட்டேன். படம் முடிந்து வீட்டிற்கு வந்து படுத்த பின்னும் ஏனோ தூக்கம் பிடிக்கவில்லை. தாத்தாவின் நினைவுகள் படுத்தத் தொடங்கின? குன்னியுர் என்றதும் “என் மனசு இப்ப நெறஞ்சிருக்குடா..” என்று வாயார சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் என்னவிருக்கிறது? ஏதோவிருக்கிறது அப்படித் தானே? அன்றைய இரவு எனக்குச் சிவராத்திரியானது.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டேன். சான்றிதழ்களைச் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டேன். தைக்கக் கொடுத்திருந்த புத்தாடைகளை வாங்கிவந்து வைத்துவி்ட்டேன். தஞ்சாவுர் சென்று மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதிக் கடிதத்துடன்தான் பணியிலிணைய பள்ளிக்குச் செல்ல முடியும். அது தான் உத்தரவு. கடிதத்தை எடுத்தும் பத்திரப் படுத்தியும் கொண்டேன். மதியவேளையில் தாத்தாவுடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.
“தாத்தா நாளைக்கி வேலையில சேரப் போறேன்”
“ரொம்ப சந்தோசம். பெயிட்டு வா கண்ணு”
“ஏன் தாத்தா குன்னியுர்ன்னதும் உங்க முகத்துல அவ்வளவு பூரிப்பு?”
“முதல்ல வேலையில சேரு. அப்பறம் சாவகாசமா எல்லாத்தையும் பேசலாம்”
“ஏதோ காரணமிருக்கு. எனக்குத் தெரிஞ்சிக்கிடாம தலையே வெடிச்சிடும் போலருக்கு”
“அதைத் தெரிஞ்சி நீ என்ன செய்யப் போற?”
நியாயமான கேள்வி தான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
“குன்னியுருக்கு நீங்க போயிருக்கீங்களா? நல்ல ஊரா தாத்தா?”
கேட்ட என்னைச் சிறிது நேரம் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு சொன்னார்.
“பள்ளிக் கூடம் எங்கருக்குன்னு தெரியல. அக்ரஹாரத்துல இருக்கறதா கேள்விப் பட்டேன்”
நான் மௌனத்தைக் கவசமாக்கி நின்றிருந்தேன்.
“எங்கருந்தாலும் பரவாயில்ல. அக்ரஹாரத்த ஒருமுறை விசாரிச்சிப் பாத்திட்டு வா. அங்க அரண்மனை மாதிரி ஒரு சிதைஞ்ச கட்டிடம் இருக்கும். அதையும் பாத்திட்டு வா. அப்பறமா நான் சாவுறத்துக்குள்ள அதை ஒருமுறை அழைச்சிட்டுப் போயிக் காட்டு”
தாத்தா பீடிகை மேல் பீடிகையாகப் போட்டுக் கொண்டேயிருந்தார்.
“ஏன் தாத்தா? அக்ரஹார அரண்மனை வீட்டுல அப்படி என்னதான் இருக்கு?”
“அங்கதாம்டா உன் தாத்தனைக் கட்டி வச்சி அடிச்சாங்க”
என்னது? அடிச்சாங்களா? நான் துடித்தேன்.
“இங்கப் பாரு தழும்ப. தோலு உழண்டு எலும்பு முறிஞ்ச என் கைய“
இடது தோள்பட்டையில மணிக்கட்டுக்குக் கீழாக நீளவாக்கில் சடைப்பூரான் அளவிற்குத் தழும்பு கிடந்தது.
“என்னாச்சு தாத்தா? எதுக்கு அடிச்சாங்க?”
அடுக்கடுக்கான கேள்விகளை நிதானமாக எதிர்கொண்டு தாத்தா சொன்னார்.
“வேலையில சேர்ந்துட்டு ஊரைச் சுத்திப் பாத்துட்டு வா. அப்ப சொன்னாத் தான் உனக்கு எல்லாமும் புரியும்
தஞ்சையிலிருந்து மன்னார்குடி வழியாக குன்னியுரை அடைந்து பணியில் இணைந்திருந்தேன். தினமும் குன்னியுர் செல்வது வழக்கமாகியிருந்தது.
கோட்டூரிலிருந்து பள்ளிக்குச் செல்ல எட்டு கிலோமீட்டர் தூரமிருக்கலாம். ஆனால் ஊருக்குள் நுழைவதற்கு முன்பு முள்ளியாறு நீர் தளும்ப ஓடிக் கொண்டிருந்தது. அதைத் தாண்டினால்தான் பள்ளிக்குச் செல்ல முடியும். ஆற்றைக் கடக்க மூங்கில் தட்டியடித்து பாலம் போட்டிருந்தார்கள். மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு பாலத்தில் நடக்க பயிற்சி வேண்டும் போலிருந்தது. இடவலமாய் ஊஞ்சலைப் போல அப்படியோர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது பாலம்.
தாத்தா சொன்னது போலவே பள்ளிக்கூடம் ஊரின் வடக்கு எல்லையிலிருந்தது. அக்ரஹாரக் கடைசியில் பள்ளி பெரிய அரசமரத் துணையுடன் நின்றிருந்தது. பக்கத்தில் கரைபொலிஞ்சான் குளம். பின்புறமாய் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசேலென்றிருக்கும் நெல் வயல்கள். எங்கும் நீரின் அரசாட்சி. குளுகுளு காற்றின் தழுவல்.
புதிய இடமென்ற பதட்டம் எதுவுமில்லை. ஆசிரியர்களில் சிலர் தெரிந்தவர்களாக இருந்தனர். அருகருகேயுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் விரைவிலேயே இயல்பாகிப் போனோம். எனக்குத் தாத்தா சொன்ன வார்த்தைகளின் நினைவாகவே இருந்தது. பள்ளியிருந்த தெருவின் நடுவில் பள்ளிக்கு முன்னதாகவே அந்த அரண்மனை வீடு இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது பார்த்திருக்கிறேன். கோட்டூலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வயல்களுக்குப் போகும் போது பார்த்தால் மேற்கில் மிக உயர்ந்த கட்டிடமொன்று தெரியும். எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமளவிற்கு உயர்ந்து நின்ற அதன் ஆகிருதி எண்ணி வியப்பிலாழ்த்தும். அங்கே போக முடியுமாவென உலக அதிசயம் போல் யோசித்திருக்கிறேன். அந்த அரண்மனை வீடுதான் தாத்தா குறிப்பிட்டுச் சொன்னதென்று இப்போது புரிந்தது.
அன்று பள்ளி முடிந்ததும் தெற்குப்பக்கம் கடைசியிலிருந்த கழிப்பறைக்குச் சென்றேன்.
கழிப்பறையின் பின்புறம் மாட்டுவண்டி செல்லுமளவிற்கு அகல தடமொன்று பயன்பாடற்று கிடந்தது. புல்லும் பூண்டுகளும் மண்டிக் கிடந்தன. தடத்தின் தலைப்பகுதி தெற்குக் கடைசியிலிருந்த உழுகுடி மக்கள் வசிக்கும் தெருக்களிலிருந்து தொடங்கி அரண்மனை வீட்டின் பின்புறம் ஒரு பர்லாங் தூரத்தில் கடந்து குளத்தைத் தாண்டி வயல்காட்டிற்குள் சென்று கொண்டிருந்தது. ஒரு காலத்தில் மிகப் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றிற்று.
நிதானமாக அக்ரகாரத் தெருவில் நடந்தேன். தெருவில் ஒரேயோரு பிராமணக்குடி மட்டும் மிச்சமிருந்தது. அருகிலிருந்த சிவன் கோவிலைப் பராமரித்துப் பூசை செய்ய ஒரு குருக்கள் குடும்பம் குடியிருந்தது. வீடுகளைப் பிராமணர்கள் விற்றுவிட்டு நகரங்களுக்குக் குடி பெயர்ந்திருந்தார்கள். அக்ரஹாரம் இப்போது பெயரில் தானிருந்தது. அடையாளங்கள் முற்றிலும் மாறியிருந்தன.
பிராமணக்குடிகளின் வீடுகள் சிதைந்து, அங்குக் குடியேறியிருந்தவர்களால் வசதிக்குத் தக்க மாற்றிக் கட்டப்பட்டிருந்தன. அரண்மனை வீட்டை சம்பந்தப்பட்டவர்கள் விற்கவில்லையா அல்லது எவரும் வாங்க முன்வரவில்லையா என்பதை அனுமானிக்க முடியவில்லை. தெருவின் மையத்தில் நின்றவாறு இடப்புறமாய் விழிகளை உயர்த்திப் பார்த்தேன்.
அரண்மனை வீடு மொத்தமும் சிதிலமாகிக் கிடந்தது. திண்ணைப் பகுதியில் கட்டியணைக்க முடியாத தேக்குமரத் தூண்கள் எப்போது விழுமோவென்ற நிலையில் நின்றிருந்தன. சுவர் பகுதி இடிபாடுகளின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு மேடும் பள்ளமுமாய் வெயிலிலும் மழையிலும் காற்றிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் காட்சி தந்தது. தாய் நிலையைப் பார்க்க பிரமிப்பாயிருந்தது. அதிக வேலைப்பாடுகள் மிகுந்த நிலை. பராமரிப்பின்றி அழிந்து நிற்பது மனதுக்குக் கஷ்டமாகவிருந்தது. மரங்களில் செதுக்கப்பட்டிருந்த சிறுசிறு சிற்பங்களில் ஆண் பெண் தெய்வங்களின் உருவங்கள். நுட்பமான மலரலங்கார வேலைகள். மிச்சமிருந்த சுவரின் பிடிமானத்தில் நிலை கீழே விழாமல் நின்று கொண்டிருந்தது. தூசு தும்பட்டைகளும் ஒட்டடைகளும் தோரணம் கட்டியதைப் போலப் படர்ந்து ஆடிக் கொண்டிருந்தன.
வீட்டின் மேற்கூரையில் தடிமனான தேக்குமரச் சட்டங்கள் அழுக்கடைந்து படுத்த நிலையிலிருந்தன. மாடி அறைகள் இடிந்தும் இடியாமலும் அந்தரத்திலேயே நின்றிருந்தன. சிறுசிறு பட்சிகள் வசதியுடன் வாழ்வதற்குரிய இடமாக அது மாறிப் போயிருந்தது. நான் பார்த்த சமயத்தில் குருவிகள் மாடியறையிலிருந்து கிரீச்சிட்டவாறே மேலாய்ப் பறந்தன. அந்தப் பகுதிக்கே அவ்வீடு உயர்ந்ததென்பதால் இரண்டாம் தளமும் கட்டடத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. மேற்கூரையில் வேயப்பட்டிருந்த கேரள ஓடுகள் எப்போது விழுவோமெனத் தொற்றிக் கொண்டிருந்தன. நின்று பார்ப்பவர்களுக்கு அவை மிகுந்த அச்சத்தை மௌனமாய் அறிவித்துக் கொண்டிருந்தன.
அன்னாந்து பார்க்கவே எனக்குக் கழுத்து வலித்தது.
“என்ன பாக்கறீய்ய்ய ?” குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன்.
சுருக்கங்களால் போர்த்தப்பட்டு வாழ்வதைப் போன்ற ஒரு வயதான மூதாட்டி. உடம்பு தளர்ந்திருந்தாலும் மனது தளரவில்லை என்பதைப் பிசிறில்லாத, அவரின் குரல் அடையாளப்படுத்திற்று.
“சும்மாதாம்மா. நான் தான் நம்மூரு பள்ளிக்கூடத்துக்குப் புதுசா வந்திருக்கற வாத்தியாரு. இங்க முன்னபின்ன வந்ததில்ல. இந்த வீட்ட பாத்தேன். அசந்து நின்னுட்டேன்”
“குடியிருக்க தோதுபடுமான்னு பாக்கறியளா?”
கிழவி சிரித்தாள். எகத்தாளம் பிடித்த கிழவியாய் இருப்பாள் போலிருக்கிறதென்று நினைத்துக் கொண்டேன். பிறகு அவளே பேசினாள்.
“இதெ வீடுன்னு சொல்லாதிய. நாசக்காரப் பயலுவருந்த பாழடைஞ்ச மண்ணு இது”
“சரி தான். அந்தக் காலத்துலியே எப்படி வாழ்ந்திருக்காங்க பாருங்க”
“என்னத்த வாழ்ந்தானுவொ? ஒழுங்கா வாழ்ந்திருந்தா இந்த மண்ணுல ஒரு வௌக்கெரியாதா? செஞ்சதெல்லாம் அக்கிரமம், அதர்மம், கொடும தான?”
“பராமரிச்சி வச்சிருந்தா ஒரு வௌக்கு எரியும்ல?”
கிழவியைக் கோபப்படுத்த வேண்டுமென்றே கேட்டேன். கிழவி வெடித்தாள்.
“எரியும்..எரியும்.. வயிறுதான்ய்யா எரியும். விளக்கெங்க எரியும்? எத்தனை ஊம சனங்களோட வயித்தெரிச்ச இதுக்குள்ள பொதஞ்சி கெடக்குன்னு தெரியுமா?“
“ஏம்பாட்டி அவ்வளவு கொடுமைக்காரவுங்களா அவிங்க?”
“அடேங்கப்பா…சொல்ல முடியாது சாமி. இன்னிக்கி நெனச்சாலும் எங்கொடலு கொதிக்கும்ய்யா”
“கொஞ்சம் சொல்ல முடியுமா பாட்டி?”
“சொன்னா மனசு ஆறாதுய்யா. இங்க நின்னு பார்க்காதியோ. பாத்தா ஒங்களயும் அந்தப் பாவம் தொத்திக்கிடும். கொஞ்சம் நஞ்சம் பாவமா செய்திருக்கானுவொ பாவிக. போயிடுங்க”
கிழவிக்குக் கண்கள் பொலபொலவென்று கொட்டத் தொடங்கி விட்டன. என்ன நினைத்தாளோ அதற்கு மேல் ஒற்றை வார்த்தை பேசவில்லை. மூக்கை உறிஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
எப்படியிருந்திருக்கும் இந்த அரண்மனை வீடு?. எவ்வளவு ஆங்காரமாய் ஓங்கி ஒலித்திருக்கும் அதிகாரக் குரல்கள்? எல்லாம் எங்கே போயின? வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி காலம் வித்தைக் காட்டுகிறது?
இடிபாடுகளுக்கிடையே முளைத்துச் செழித்திருந்த எருக்கங் குத்துகளும், காட்டத்திச் செடிகளும் கருவேலங் குத்துகளும் அடர்வனமாய்ப் பார்வைக்குப் பட்டன. விழியை எடுக்க மனமில்லாமல் அவை காற்றிலாடும் மாய ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டே நின்றேன். இடவலமாய் அசைந்து அசைந்து கிழவியைப் போல அதுவும் என்னை விரட்டுவது போலிருந்தது. நான் அங்கிருந்து அகன்று மிதிவண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.
வீட்டை அடைவதற்குள்ளாகவே தவிப்பாய் இருந்தது. தாத்தாவைத் தான் முதலில் தேடினேன். மெல்லிய புன்னகை மிளிர தாத்தா,
“பள்ளிக் கூடம் புடிச்சிருக்கா? என்றார்.
“நல்லாருக்கு தாத்தா. நீங்க சொன்ன மாதிரி அக்ரஹாரத்தில தான் பள்ளிக் கூடமிருக்கு”
“இப்ப நீ ராசா மாதிரி பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்திருக்கியே.. அந்தப் பாதையில அப்ப சாதாரண மக்க யாரும் போக முடியாது”
“ஏன் தாத்தா?”
“அக்ரஹாரத்துக்குப் பக்கம் போற உரிமை நம்ம சனங்களுக்கு அப்ப இல்ல”
“பிறகு எப்படி அந்தப் பக்கமிருக்கற வயலுக்குப் போவீங்க?”
பள்ளிக்கூடத்துக்குப் பின்னால ஒரு மண்தடம் போவுதா?”
“ஆமா..”
“அது தான்ய்யா எங்களுக்கான பாதை”
நான் யோசனையாகத் தாத்தாவைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
“எதாவது சேதி சொல்லணுன்னா கங்காணிக்கிட்டவோ, கணக்குப் பிள்ளைகிட்டவோ தான் சொல்லிவுடணும்”
“அவங்க சரியா போயிச் சொல்லிடுவாங்களா?”
“நம்ம மேல ஏதும் கோபமில்லன்னா ஒழுங்கா போயிச் சேரும். இல்லன்னா பாதிய அவிங்களாவே திரிச்சிடுவானுங்க”
“திரிச்சிருக்காங்கன்னு எப்படித் தெரியும்?”
“அன்னிக்கி சாயந்தரமே நம்மள அளச்சிட்டு வரச் சொன்னாங்கன்னு ஆளு வரும்”
நான் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“அரண்மனை வீட்டுக்குப் பின்னாலருக்கிற மாட்டுக் கொட்டகைப் பக்கமா போயி நிக்கணும். அதுவரை என்ன விசியம்ன்னே தெரியாது
“……………………………………………………………………..”
“திடீர்ன்னு ரெண்டு ஆளுங்க வந்து கையயுங் காலையும் புடிச்சிக் கட்டுவானுங்க. பக்கத்துல வெட்டி வச்சிருக்கற புளிய விளாரால அடிக்க ஆரம்பிச்சிடுவானுங்க”
“அடிக்கிறது யாரு?”
“அவிங்களும் நம்ம சொந்தக்காரனுங்க தான். என்ன செய்ய முடியும்? மேலருந்து சொல்றதைத் தான் எல்லாரும் செய்யணும்”
“இது எதுக்காவ அடிச்சது?” தாத்தாவின் தழும்பைப் பார்த்துக் கேட்டேன்.
“வேல செய்யிற இடத்துல வேலய செய்யாம தொழிலாளிச் சங்கம் கட்டுறத்துக்கு ரகசியமா பேசினேன்னு கங்காணி போட்டுக் கொடுத்துட்டான்”
“உங்கக் கிட்ட எதுவுமே கேட்கலயா?”
“நான் நிதானமில்லாம மயங்கி கெடந்தேன். கட்டவுத்து விடுறப்ப ஆண்ட அதட்டலா சொன்னாரு.”
“வேல செய்யிற எடத்துல வேலய மட்டும் பாக்கணும். சங்கம் கட்டுறன்னு எதவாது செஞ்சா உன் சங்க அறுக்க வேண்டிருக்கும். அதுவுமில்லாம உம் பையன பள்ளிக் கூடத்துக்கு அனுப்பனும்ன்னு வேற பேசியிருக்க? பக்கத்துலருக்கிற பயலுவ மனசயும் கலைச்சிருக்க”
தாத்தா சொல்ல சொல்ல எனக்குக் கண்கள் பொறித் துளிகளாய் உதிர்ந்தன.
“அடிப்பட்டவன வச்சியே மத்தவங்கள பயமுறுத்துவாங்கெ.
“………………………………………………………………..”
“மக்க எப்படித் தான் சகிச்சிக்கிட்டாங்க?” கேட்டேன்.
“என்னப்பா செய்ய முடியும்? அவங்க வச்சது தான் சட்டம். நேர்ல பேச முடியாது. பொண்டுகளும், ஆம்பளகளும் மனசுக்குள்ளயே கரிச்சி கொட்டிட்டு அடங்கிப் போயிடுவாங்க”
நான் பேயறைந்தது போல நின்றேன். வெளியில் ஏதோ சத்தம் கேட்டது. மக்கள் திமுதிமுவென ஓடினார்கள். என்னவென்று காணும் ஆவலில் நானும் ஓடினேன். யாரோ இருவருக்குச் சண்டை நடப்பதை ஊகிக்க முடிந்தது..
தெருக் கடைசியில் கூட்டம். நெருங்கிச் செல்கையி்ல் புரிந்தது. சுப்ரமணியன் வீட்டிற்கும், காளிமுத்து வீட்டிற்கும் நெடுநாட்களாய் வேலிப் பிரச்சினை. உள்காந்தல். அடிக்கடி இப்படி நிகழ்வது வாடிக்கை. கால் முடமான சுப்ரமணியனிடம் மல்லுக்கு நிற்கும் காளிமுத்துவை யாரும் கண்டிக்க முடியாது. அவன் உடல்வலு மிக்கவன். மாலையில் தினமும் போதையில் திட்டிக் கொட்டுவான். அன்றைய பிரச்சினையில் சுப்ரமணியன், விந்தி விந்தி நடந்து போய் காளிமுத்துவிடம் நியாயம் கேட்டிருக்கிறான். காளிமுத்துவை அலேக்காகத் தூக்கி தூரமாய் எறிந்து விட்டான் காளிமுத்து. சுப்ரமணியன் மனைவி சோலச்சி ஊரே அதிரும்படி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“உடம்பு முடியாத எம் புருசன தூக்கி எறியறியே… உன்ன மாரி சரிசமமான ஆளுகிட்ட உன் வீரத்த காமிக்க வேண்டியது தான? நான் வயிறெரிஞ்சி சொல்லுறென். நீ நாசமா போவ. உன் கையி காலு வௌங்காம போவும். உன் குடும்பம் நாசமா போவும். உன் வீடுருக்கிற எடத்துல வௌக்கெரியாம அவிஞ்சிப் போவும். வெள்ளெருக்கும் அத்தியும் மொளக்கிம். பாம்பும் பல்லியும் பூரானும் குடியேறப் பாழடஞ்சி போவும்…நான் சொன்னது பலிக்கலன்னா நான் ஒருத்தனுக்கு முந்தி விரிச்ச பொம்பள இல்ல ஆமா”
சோலச்சி மண்ணையள்ளி தூற்றியவாறு பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். இயலாதவர்கள் சாபம் பலித்து விடுமோ என்னவோ?!
எனக்குள் அரண்மனை வீட்டின் பாழடைந்த காட்சிகள் தோன்றின. யார் யாரோ வரிசைகட்டி தேம்பினார்கள். யார் யாரோ மண்ணள்ளி தூற்றிக் கொண்டிருந்தார்கள். எவரெவரோ வயிறெரிந்து சாபம் விட்டார்கள். யாரோ “உன் வீடு வௌக்கெரியாம அவிஞ்சி போவுமென்று” கதறினார்கள். செழித்திருந்த வெள்ளெருக்கும் காட்டத்தியும் வேக வேகமாய் காற்றிலாடின. பாம்புகளும் பூரான்களும் விஷப் பூச்சிகளும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின. வவ்வால்கள் தலைகீழாய்த் தொங்கின. எட்டுக்கால் பூச்சிகள் ஊர்ந்தன. கோட்டான்கள் ஊளையிட்டன. பேய் பிசாசுகள் கொண்டாட்டாய் ஆட்டம் போட்டன.
எத்தனை ஊமைச்சனங்களின் வயிறெரிச்சலோ? கொடும் சாபமோ?!
அந்தக் கணத்தில் எனக்குள் யாரோ உரத்துக் கூவினார்கள்.
தொடர்புக்கு மீனாசுந்தர்,
234 ஏ, எம்ஜிஆர் நகர், திருநகர்( அஞ்) பழனி – 624601பேசி 7010408481 – 9442510251
கதையைப் பிரசுரித்த அக்கினிக்குஞ்சு இதழிற்கு நன்றியும் அன்பும். உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தொட அமைந்த இவ்வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன்.
மிகவும் அருமையாக இருந்தது அண்ணா வாசித்து முடித்ததும் அழுகை வந்து விட்டது, மருத நில மக்களின் வாழ்வியலையும் வலிகளையும் கண்முன் காட்சிப்படுத்தியிருக்கிறது
சாபத்திடல் என்னும் சிறுகதை வாசிக்கும்போதே முன்னோர்களின் நிலையை எண்ணி இருதயம் கனக்க வைத்தது.
“ஆணவம் அழிவிற்கு இட்டுச் செல்லும்” என்பதை உணர்த்துகிறது.
எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, அங்கெல்லாம் சாபங்கள் நிறைந்திருக்கும்.
சாபம் ஆதிக்க வர்க்கத்தினரின் மீது பாதிக்கப்பட்டவர்களால் விதிக்கப்பட்ட விதி.
ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளின் மீது,ஊமைச்சனங்கள் வயிறெரிச்சலோடு விடும் சாபம்! கொடும் சாபம்!
வாசகர் வட்டத்திற்காக கருத்து செறிவு மிக்க பெரும் வரலாற்றினை சிறுகதையாக அளித்த பேராசிரியர்.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இச்சிறுகதை எனக்கு ஊட்டிய உரங்கள்:
‘வலிகளை மறைத்து வாழ்ந்ததால்தான் வசந்தம் வழிகாட்டியது’.
மேட்டுக்குடிகள் நிலமற்ற எளியமக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைகையினை துண்டாடிய காலத்தைப் பதிவு செய்யும் படைப்பாக இருக்கிறது. இன்று பல்வேறு வடிவங்களில் ஆதிக்க வன்மத்தின் நிகழ்ச்சிநிரல் மாறுபட்டிருந்தாலும் அவை இன்றளவும் தொடரத்தான் செய்கிறது. அதனின் நீட்சியாகத்தான் இந்த படைப்பில் வரும் கிழவன் ஆதிக்க குடிகளால் தனக்கு நேர்ந்த இழிநிலையை இன்னும் தழும்புகளாக உடலில் பதியவைத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஒரு இழிகொடுமையினை கல்வியின் மூலமாகத்தான் நேர்செய்ய முடியும் என்ற சமூக கணக்கினை இங்கு படைப்பில் பார்க்க முடிகிறது. இழிவின் பிறப்பிடமாக இருந்த இடத்தில் வௌலால்கள் தலைகிழாக தொங்கிகிடப்பதும், பாம்புகளும் பூராண்களும் புழங்கி கிடப்பதும், விளைந்த எருங்கஞ் செடிகள் காற்றுக்கு அசைந்து கொடுப்பதை இணைந்து கிடக்கும் விளக்கினைக்கொண்டு குறியீடுகளாகவும் படிமங்களாகவும் காட்டியிருக்கும் இந்த கதை எல்லோரும் வாசிக்க கூடிய படைப்பாகவே பார்க்கிறேன்.
சிறுகதையின் பின்புலம் கண்ணீரை வரவழைக்கிறது.
தொடர்ந்து பணி சிறக்க எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
வாசித்து என்னுடன் பலரும் உரையாடினீர்கள். காவிரிப் படுகை நிலப்பரப்பைச் சேர்ந்த சிலர் கதையை வாசித்துக் கண்ணீர் விட்டதாகத் தெரிவித்தீர்கள். எழுத்தால் உங்கள் மனங்களைத் தொட்டதில் பெருமகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம். மிக்க நன்றி.
தஞ்சை மாவட்டத்தில் ஆண்டான் அடிமை முறை நிலவிய கொடுங்காலத்தையும், வாயிருந்தும் பேச முடியாமல் வதைபட்ட மக்களின் தயரத்தையும் ஆவணப்படுத்திய கதை. மனம் நெகிழ்கிறது. காலெ வெள்ளத்தில் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் சென்ற சிறுகதை வித்தகர் பேரா. மீனா சுந்தருக்கு வாழ்த்துகள்
தஞ்சை மாவட்டத்தில் ஆண்டான் அடிமை முறை நிலவிய கொடுங்காலத்தையும், வாயிருந்தும் பேச முடியாமல் வதைபட்ட மக்களின் தயரத்தையும் ஆவணப்படுத்திய கதை. மனம் நெகிழ்கிறது. காலெ வெள்ளத்தில் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் சென்ற சிறுகதை வித்தகர் பேரா. மீனா சுந்தருக்கு வாழ்த்துகள்