வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள்; வீடியோவால் சிக்கிய பெங்களூரு தம்பதி!
வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்த போட்டோ, வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி போலிசில் சிக்கினர்.
பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள எம்.எஸ்.ஆர்., நகரில் சாகர் குருங்,37, மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி வசித்து வந்தனர். சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சியை சேர்ந்த இவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர். சாகர் குருங் ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அவரது மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவருக்கு வீட்டில் இருப்பதற்கு போர் அடித்துள்ளது. இவர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு ஆக்டிவாக இருக்க முடிவு செய்தார். அவர் தனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரீல்ஸ் போட்டு வந்தார். காலப்போக்கில், அவர் தனது வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் அவருக்கு பிடிப்பதையும் வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் வீட்டு தோட்டத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.
வீட்டில் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது அவர் வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது போலீசார் கவனத்திற்கு சென்றது. உடனடியாக போலீசார் தம்பதியை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
தகவல் கிடைத்ததும், நாங்கள் தம்பதியின் வீட்டில் சோதனை செய்தோம். ஆரம்பத்தில், கஞ்சா செடி குறித்த எங்கள் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஆய்வு செய்ததில் இரண்டு தொட்டிகளில் இருந்து செடிகள் பிடுங்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தோம். விசாரித்ததில், கஞ்சா வளர்த்ததை ஒப்புக்கொண்ட தம்பதியினர், 54 கிராம் எடையுள்ள செடிகளை வீசிய குப்பைத் தொட்டியைக் காட்டினார்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றினோம்.
தம்பதியினர் தங்கள் வீட்டு வாசலில் போலீசாரைப் பார்த்து, கஞ்சா செடிகளை அவசரமாக அகற்றி, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனை செய்யும் நோக்கத்தில் தம்பதியினர் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவேற்றப் பயன்படுத்திய மொபைல் போனை போலீசார் கைப்பற்றி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.