முச்சந்தி

‘வான்படை முதல் வண்ணமிகு கலைத்துறை வரை’ – டெல்லி கணேஷ் கடந்து வந்த பாதை

இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் கரங்களால் குட்டுப்பட்ட திரைக்கலைஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திரம், நகைச்சுவை என பன்முகத் தன்மை கொண்ட தனது பண்பட்ட நடிப்பாற்றலால் உயர்ந்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்த அற்புத திரைக்கலைஞர் இன்று நம்மோடு இல்லை. சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. சினிமாவில் டெல்லி கணேஷ் கடந்து வந்த பாதை இங்கே உங்களுக்காக…

Image 1342762விமானப்படை வீரர்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு என்ற ஊரில், 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ல் பிறந்தார். இவரது இயற்பெயர் கணேசன். 1964ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர் 1974ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இடையிடையே அங்கே “தக்ஷிண பாரத நாடக சபா” என்ற நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களிலும் நடித்தார்.

நாடகம் டூ சினிமா

நடிகர் ‘சோ’வின் “மனம் ஒரு குரங்கு”, நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் “ஒரு பொய்”, “தீர்ப்பு” போன்ற பிற நாடகக் குழுக்களின் நாடகங்களையும் வாங்கி, அதிலும் நடித்து அரங்கேற்றம் செய்தும் வந்தார். பின்னர் சென்னை வந்த இவருக்கு, டெல்லியில் இவரோடு மேடை நாடகங்களில் நடித்து வந்த டிடி சுந்தர்ராஜன் என்பவரின் மூலம் நடிகர் ‘காத்தாடி’ ராமமூர்த்தியின் அறிமுகம் கிடைத்து. அதன் வாயிலாக “டௌரி கல்யாணம்” என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். நடிகர் டெல்லி கணேஷ். இதுவே சென்னையில் இவர் நடித்த முதல் மேடை நாடகம் ஆகும்.

1977ல் இயக்குநர் கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “பட்டினப்பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். அதுவரை வெறும் கணேஷ் என்று இருந்த இவரது பெயரையும் டெல்லி கணேஷாக மாற்றியவர் கே பாலசந்தர்.

எம்ஜிஆர் கைகளால் விருது

1979ல் இயக்குநர் துரை இயக்கிய “பசி” திரைப்படத்தில் ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியாக சென்னை பாஷை பேசி, தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி அனைவரது மனங்களையும் வென்றார். இவரது நடிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசு சிறந்த நடிகருக்கான விருதினை அன்றைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் கரங்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டார். கே பாலசந்தர் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த “சிந்து பைரவி” படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியா வண்ணம் தனது இயல்பான நடிப்பால் உயர்ந்து நின்றார்.

1980களில் “எங்கம்மா மகாராணி”, “தணியாத தாகம்” போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். நாயகனாக இவர் நடித்து வெளிவந்த அந்த ஒரு சில படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால் மீண்டும் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றி நடித்தார்.

கமலின் ஆஸ்தான நடிகர்Image 1342764

குறிப்பாக நடிகர் கமல்ஹாசனோடு இவர் இணைந்து நடித்த பல படங்கள் இவருக்கு நல்ல பெயரையும், ரசிகர்களிடம் ஒரு நெருக்கத்தையும் உருவாக்கியது. “நாயகன்”, “அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காம ராஜன்”, “தெனாலி”, “அவ்வை சண்முகி” போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். கடைசியாக கமல் நடிப்பில் வெளியான ‛‛இந்தியன் 2” படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடனும் “பொல்லாதவன்”, “புதுக்கவிதை”, “எங்கேயோ கேட்ட குரல்”, “மூன்று முகம்”, “சிவப்பு சூரியன்”, “ஸ்ரீராகவேந்திரர்” என்ற ஏராளமான படங்களில் நடித்த பெருமையும் இவருக்குண்டு.

இயக்குநர் கே பாலசந்தர் தொடங்கி, ஏறக்குறைய தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி மற்றும் இன்றைய இளம் இயக்குனர்கள் வரை அனைவரோடும் பணிபுரிந்த இவர், இயக்குநர் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் திரைப்படங்களில் நடிக்காதது துரதிர்ஷ்டமே.

டப்பிங் கலைஞர்

நடிகர் விஷ்ணுவர்த்தன், சிரஞ்சீவி, கிரிஷ்கர்னாட், நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன், ரவீந்தர் போன்ற நடிகர்களுக்கு பின்னணி பேசியதன் மூலம் ஒரு டப்பிங் கலைஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் நடிகர் டெல்லி கணேஷ்.

Image 1342765மகனை ஹீரோவாக்கினார்

வெள்ளித்திரை தவிர சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தனது மகன் மகாதேவனை நாயகனாக்கி “என்னுள் ஆயிரம்” என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்.

ஒரு நீண்ட நெடிய வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் 400க்கும் அதிகமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த கலைஞன் இன்று தனது பூலோக பயணத்தை முடித்துவிட்டு இறைவனின் நிழலில் இளைப்பாற சென்றுவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.