நிக்கி ஹாலேவுக்கு அரசில் இடமில்லை
வாஷிங்டன்: ” அமெரிக்காவில் அடுத்து அமையும் அரசில் இடம்பெற, ஐ.நா.,விற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹாலே மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை அழைக்கவில்லை,” என அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிகார மாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே, புதிய அரசில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து, டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். நிக்கி ஹாலேவும், மைக் பாம்பியோவும் புதிய அரசில் இடம்பெறுவார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற வேண்டும் என நிக்கி ஹாலே மற்றும் மைக் பாம்பியோவை அழைக்க மாட்டேன். முந்தைய அரசில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை மறக்க முடியாது. நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா தாக்குதலுக்கு எதிராக பதிலடிகொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது. இந்த உதவியை குறைக்க வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், நிக்கி ஹாலே மற்றும் மைக் பாம்பியோ ஆகியோர் உக்ரைனுக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடனை சந்திக்கிறார் டிரம்ப்
இதனிடையே அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் வரும் புதன்கிழமை அன்று அதிபர் அலுவலகமான ஓவல் மாளிகையில் ஜோபைடனை சந்தித்து பேச உள்ளார்.