எங்களிடமும் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் முடிந்தால் அனுபவமுள்ள 10 பேரின் பெயரை கூறுங்கள்
அனுபவம் வாய்ந்தவர்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவாராக இருந்தால், அவரிடம் இருக்கும் அனுபவம் உள்ள 10 பேரின் பெயரை முடிந்தால் வெளியிடுமாறு சவால் விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசியல் அதிகாரம் பல இடங்களில் நிலைகொண்டுள்ளது. அரசியலமைப்புக்கமைய அரசியல் அதிகாரம் ஜனாதிபதி பதவியை சூழவும், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையை சூழவும் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகளிடமுமே இருக்கின்றது. ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தியிடம் சிறியளவிலான அதிகாரமே இருக்கின்றது. மூன்று அமைச்சர்களை கொண்ட சிறிய இடத்திலேயே எமது அதிகாரம் உள்ளது. ஆனால் எங்களுக்கென பெரும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவாக்கத்தை பாதுகாக்க வேண்டும். ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும். வறுமை நிலைமையை இல்லாதொழிக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றத்தை செய்ய வேண்டும். இதனை ஏற்படுத்த ஜனாதிபதி பதவியும் மற்றும் சிறிய அமைச்சரவையும் போதுமானது அல்ல. இதற்காக பாராளுமன்றத்தில் பலமான அதிகாரத்தை வழங்கி பாராளுமன்றத்தில் திசைகாட்டிகளால் நிரப்ப வேண்டும்.
இதேவேளை நாட்டை தவறான பாதைக்கு கொண்டு சென்றவர்கள் எமது அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்ல தங்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு சிலர் கூறுகின்றனர். இதேவேளை பாராளுமன்றத்திற்கு அனுபவம் உள்ளவர்களை அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியாயின் அவரிடம் இருக்கும் அனுபம் கொண்ட 10 பேரின் பெயர்களை கூறுமாறு சவால் விடுக்கின்றேன். அப்போது நாங்கள் எவ்வாறான அனுபவங்களை அவர்கள் கொண்டுள்ளனர் என்பதனை எங்களால் கூற முடியும். ஆனால் எங்களுடன் இருப்பவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தாலும் அரசியலில் அனுபவம் உள்ளவர்களே. நாங்கள் அரசியலுக்கு தரத்தை கொண்டு வருவோம்.
நாங்கள் பொருளதார விடயங்களை கட்டியெழுப்புவதுடன் நாட்டில் இருந்து போதைப் பொருளை ஓழிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நடவடிக்கைக எடுப்போம். அனைவரும் சட்டத்தின் முன்னால் சமம் என்ற நிலைமையை உருவாக்குவோம். வரி செலுத்தாது இருப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
இப்போது குடும்ப மற்றும் பரம்பரை அரசியலுக்கு முடிவு கிடைத்துள்ளது. பொதுமக்களின் ஆட்சி உருவாகியுள்ளது. சிலருக்கு எதிர்பார்க்காதது நடந்துள்ளது. கவலையில் இருந்துகொண்டு 3 வாரம், 3 மாதம், 6 மாதங்களில் இந்த அரசாங்கம் விழும் என்று கூறிக்கொண்டு மனதை தைரியப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு வலிக்கின்றது என்பதற்காக மக்களுக்கு வலிக்கவில்லை. ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். மக்கள் இந்த அரசாங்கம் வீழ்வதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றார்.