ஈழத்து சௌந்தரராஜன் காலமானார்
பிரபல பக்தி திரை இசைப்பாடகர் ஈழத்து சௌந்தரராஜன் என அழைக்கப்படும் வைரப்பிள்ளை விஜயர்த்தினம் வெள்ளிக்கிழமை (08) அதிகாலை காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 82 ஆகும்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கைச் சேர்ந்த இவர் 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழக திரை இசைப்பாடகர் ரி. எம். சௌந்தரராஜனின் குரல் வளத்தை கொண்ட இவர், தனது 15 ஆவது வயதில் பாடத் தொடங்கினார்.
1965ம் ஆண்டு தமிழகப் பாடகர் சௌந்தராஜன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்விலே பாடுவதற்காக வந்தவேளை பாடகர் சௌந்தரராஜன் தங்கியிருந்த இடத்துக்கு சென்று அவரைச் சந்தித்து அவர் பாடிய பக்தி இசைப்பாடல்கள் சிலவற்றை பாடிக்காட்டினார். அவருக்கு முன்னால் பாடிய முதல் பாடல் “முருகா நீ வரவேண்டும்” என்ற பக்திப்பாடலாகும்.
ஈழத்து பாடகர் பின் பாடலைக்கு கேட்டு அசந்து போன டி எம்.எஸ் சௌந்தராஜன் ஹாட்லிக் கல்லூரி மேடையிலேயே சில பாடல்களைப் பாட அனுமதி வழங்கியதுடன் விஜயரத்தினத்திற்கு ஈழத்து சௌந்தராஜன் என்ற பட்டத்தை சூட்டியிருந்தார்.
அன்றிலிருந்து ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்டு வரும் விஜயரத்தினம் வடக்கில் உள்ள அத்தனை இசைக்குழுக் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடல்களை மேடைகளில் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பேரபிமானத்தை பெற்றிருந்தார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக மேடைகளில் பாடி வந்த இவர் ரி.எம்.எஸ் பக்தி இசை திரை இசைப்பாடல்களை மனதில் பாடமாகவே வைத்திருந்தார்.
வடமராட்சி வல்லிபுரக் கோயில் உள்ளிட்ட வல்வெட்டித்துறை, சுதுமலை, ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களுக்கென உருவாக்கப்பட்ட பக்தி பாடல்களை பாடியுள்ளார். சுமார் 20 ஆண்டுகள் அவர் மேடையில் பாட முடியாத வேளையிலும் வீட்டில் இருக்கும் வேளை பாடல்களை பாடிக்கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.