தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள்!; தமிழ் சிவில் சமூக அமையம்! Tamil Civil Society Forum
பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?
(14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு)
ஜனாதிபதித் தேர்தல் 2024ம் என்.பி.பி எனும் தேசிய மக்கள் சக்தியும் அதன் மூலாதாரமான ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியும்
கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை சிறீலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதோ, சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது அவற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டினதோ வேட்பாளரையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதே வழக்கம்.
ஆனால் இம்முறை, ஜேவிபியின் பிடியிலுள்ள கூட்டு முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜேவிபியின் தலைவருமான திரு அனுர குமார திசாநாயக்கவைச் சிங்கள மக்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். இது தமிழ் மக்கள் சிலரின் மத்தியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்களை இடதுசாரிகள் எனக் கூறிக் கொள்ளும் ஜேவிபி, அதற்கு முரணாக சிங்கள பௌத்த பேரினவாதத்தைத் தமது நடைமுறை அரசியலாகக் கொண்டவர்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள். ஜேவிபி ஆரம்பம் முதலே தமிழ் மக்களை, குறிப்பாக மலையகத் தமிழர்களை சிறீலங்காவின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கான முகவர்கள் எனத் தமது உறுப்பினர்களுக்குப் போதித்து வருபவர்கள்.
ஜேவிபி இரண்டு தடவைகள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றவர்கள். பின்னர் 1990களில் தேர்தல் அரசியலில் காலடி வைத்தது. அதன் பின்பும் தமிழ் மக்கள் மீதான போர் உட்பட இன அழிப்பு செயற்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவும் பங்களிப்பும் வழங்கி வருகின்றது. சிறீலங்கா அரசு மற்றும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கிடையில் அரிதாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடப்பட்ட இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அனைத்துக்கும் எதிராக சிங்கள மக்களிடையே எதிர்ப்பலைகளை உருவாக்கி வந்துள்ளது. ஜேவிபி தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் இணைப்பைப் பிரித்தது. சுனாமிப் புனர்வாழ்வுச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட சுனாமிக் கட்டமைப்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு எதிராகவும் வன்னியில் அதன் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு எதிராகவும் நீதிமன்றம் வரை சென்று அக்கட்டமைப்பையும் இல்லாமலாக்கியது.
சிறீலங்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவு
சிறீலங்கா 2022ல் பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான அனைத்துத் தேவைகளுக்கும் நீண்ட வரிசைகளில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. ஆயினும் பல அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலைமை நிலவியது. சிங்கள தேசத்துடன் வலிந்து பிணைக்கப்பட்டுள்ளதால் தமிழர்களும் இந்தப் பொருளாதார நெருக்கடியில் தவிர்க்கவியலாதவாறு சிக்கித் தவித்தனர். ஏற்பட்ட நெருக்கடிகளால் விரக்தியடைந்த சிங்கள மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளிலிறங்கினர்.
கட்சிகள் குறிப்பாக,ஜேவிபியின் தே.ம.சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்றனவும்; அரசியல் விழிப்புணர்வும் ஆர்வமும் கொண்ட தன்னார்வ அமைப்புகளும் தொழிற் சங்கங்களும் செயற்பாட்டாளர்களும் சிங்கள மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவர்களில் சிலரின் நோக்கம் அரகலயவின் வேகத்தை (momentum), தமது நலன்களுக்காக கையகப்படுத்துவது. இதனூடாக தமது தேர்தல் நலன்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் ‘இதுவரை ஆட்சியில் இருந்த சகல அரசியல்வாதிகளின் ஊழல்களால் மட்டும்தான் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டுள்ளது’ என்ற கருத்தை தேசிய மக்கள் சக்தி சிங்கள மக்கள் மத்தியில் நம்பக் கூடிய வகையில் உருவாக்கியது.
பொருளாதாரப் பேரழிவின் உண்மையான காரணங்கள்
சிங்கள பௌத்த பேரினவாதம் தீவு முழுமையையும் சிங்கள பௌத்த மக்களுக்கு வாக்களிக்கப்பட்டது என நம்புகின்றது. இப்பேரினவாதச் சிந்தனைக்கு அமைய இத்தீவின் யதார்த்தமான பல்லினத் தன்மையை மறுப்பதுடன் ஏனைய தேசிய இனங்களின் இருப்பையும் நியாயமான உரிமைகளையும் மறுதலித்து இன அழிப்பைப் புரிகின்றது. ஆட்சிகள் மாறிய போதும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலின்படியே சிறீலங்காவின் சகல துறைகளும் கடந்த எண்பது வருடங்களாக இயங்கி வருகின்றன.
இன அழிப்பு நோக்கில் ஆட்சியை நடாத்தியமையால் பாரிய நிதி விரயம்,பொருளாதார மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளின் இழப்பு,அதனால் அரசியல் மற்றும் நிதித் தேவைகளுக்காக நட்டத்தில் விற்கப்பட்ட தேசிய வளங்கள். அவற்றுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கவே கூடாது என்ற ஓர்மத்தில் 30 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்திய ஆயுதப்போருக்காக பெருமளவு வளங்கள் விரயமாக்கப்பட்டதுடன் பாரிய அழிவுகளும்,பாரிய மனித வள இழப்புகளும் (இறப்புகள்,அங்கவீனம்,வெளியேற்றம்) ஏற்பட்டன. இவற்றின் திரட்டிய விளைவாக பொருளாதாரம் பேரழிவுக்குட்பட்டது.
இவ்வாறு பேரினவாதத்தால் அபாயகரமான அளவில் நலிவடைந்து வந்த பொருளாதாரத்திற்கு பேரினவாத மயமாக்கப்பட்ட நிர்வாகத்தின் இலஞ்சமும் ஊழலும் அதன் விளைவான வினைத் திறனின்மையும் மேலதிக சுமைகளாயின. ஆனாலும் இலஞ்சம்,ஊழல் வினைத் திறனின்மை என்பன பேரினவாதக் கதையாடல்களின் மூலம் சிங்கள மக்களிடமிருந்து மூடி மறைக்கப்பட்டது. அவர்களும் பேரினவாதக் கவர்ச்சியினால் கவனம் செலுத்தாதிருந்தனர்.
பொருளாதார வீழ்ச்சியின் மீட்பர்களாக நம்பப்படும் தேசிய மக்கள் சக்தி
பொருளாதாரப் பேரழிவுக்கு காரணம் ஊழலும் இலஞ்சமும் மட்டுமே என நம்பும் சிங்கள மக்கள் அதற்கு காரணமானதென தாம் நம்பும் பழைய அரசியற் தலைவர்களாலோ அவர்களது கட்சிகளாலோ பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தம்மை மீட்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இதுவரை ஆட்சியில் அமர்ந்திராததும்,அதனால் ஊழற் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிராததும்,அரகலயவில் போராட்டக்காரர்களுடன் தோள் கொடுத்து நின்றதுமான தே.ம.சக்தியைப் பாரம்பரியத் தலைமைகளுக்கான மாற்றாகவும் பொருளாதாரப் பேரழிவின் மீட்பர்களாகவும் ஜேவிபி முன்னிறுத்தியது. சிங்கள மக்களுள் கணிசமானோர் இதை நம்பிக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துமுள்ளனர்.
அரகலயவில் வேறு பல கட்சிகளும் தனி நபர்களும் உழைத்திருந்தாலும்,அரகலயவின் மொத்த விளைச்சலையும் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகத்தை முன்வைத்து ஜேவிபி கையகப்படுத்திக் கொண்டது.
தே.ம.சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியும் பொதுத் தேர்தலும்
தேசிய மக்கள் சக்தியினூடாக ஜே.வி.பி ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுக் கொண்டதும் சூட்டோடு சூடாகப் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பாகத் திரண்ட சிங்கள மக்களின் ஆதரவையும் ஜனாதிபதிப் பதவியில் இருப்பவரின் கட்சி என்பதால் உருவாகக் கூடிய சாதகமான நிலையையும் பயன்படுத்தவும் தமது ஆட்சியின் பலவீனங்கள்,வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை அம்பலமாவதற்கான காலத்தை வழங்காமலும் தேர்தலைச் சந்திக்க விரும்பி தே.ம.சக்தி பொதுத் தேர்தலை உடனடியாக அறிவித்தது.
தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு
கடந்த எண்பது வருடங்களாக சிறீலங்கா அரசினதும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களதும் மூலாதார இயக்கு கொள்கையாக (Basic driving principle) இருப்பது சிங்கள பௌத்த மேலாண்மைக்கான அவாவே. இதற்காகவே அரசும் ஆட்சியாளர்களும் தமிழ் இன அழிப்பை பிரதான வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளனர்.
அரசானது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு குடியேற்றங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பினைத் தொடர்கிறது. தமிழ் மக்களின் மொழி,கல்வி,பண்பாடு,வரலாறு,பொருளாதாரம்,இயற்கைச் சூழல் மற்றும் வளங்களை சிதைக்கிறது. தமிழர்களை கொல்லுதல்,சித்திரவதை செய்தல்,காணாமற் போகச் செய்தல்,பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் தனி மனிதர்களினதும் குடும்பங்களினதும் வாழ்க்கையை சீரழித்தல் என தமிழ் மக்களின் இருப்பைச் சவாலுக்கு உட்படுத்துகிறது. அதீத இராணுவப் பிரசன்னம்,தமிழர்களையும் பிரதேசங்களையும் திட்டமிட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் புறக்கணிப்பது,தமிழ் மக்களின் நலன்களுக்குப் பாதகமான அபிவிருத்திகளை (மன்னார் காற்றாலை,கடலட்டைப் பண்ணை போன்றன) மட்டும் தமிழ் நிலங்களில் பலவந்தமாக நிறைவேற்றுவது,திட்டமிட்ட போதைவஸ்துப் பரவலாக்கம் என தம்மாலியன்ற அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை எப்போதும் தொடர்கின்றது.
இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு சிங்கள அரசும் தமிழ் அழிப்பு வேலைத் திட்டங்கள் எதையும் கைவிட்டதில்லை. அதற்கேற்றவாறு ஆட்சியாளர்கள் மாறினாலும் தமிழ் இன அழிப்புத் தொடர்வதற்கு ஏற்றவகையில் அரச இயந்திரம் சிங்கள பௌத்த பேரினவாத இயந்திரமாக வலிமையாகக் கட்டமைக்கப்பட்டும் உள்ளது.
தற்காப்புக் கவசமாக தமிழ்த் தேசியமும் தீர்வாக தேசிய அபிலாசைகளும்
தமிழ் மக்கள் இன அழிப்பிலிருந்து தமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காகத் தமக்கு உரித்தான தேசிய அடையாளங்களையும் தேசிய உரிமைக் கோரிக்கைகளையும் தமக்கான தற்காப்புக் கவசமாக முன்னிறுத்தினர்.
இன அழிப்பின் விளைவாக விழிப்படைந்த தமிழ் மக்கள் தனியான மொழி,உரித்தான தாயகம்,தனித்துவமான வரலாறு மற்றும் பண்பாடு,பொருளாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளமையின் அடிப்படையில் தாம் ஒரு தனியான தேசிய இனம் என்ற உரிமையைக் கோரி எழுச்சியுற்றனர். இன அழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழிமுறையாக தேசிய இனம் என்பதால் தமக்கு உரித்தாகும் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சிக்கான அரசியல் முறைமை ஒன்றைத் தீர்வாகக் கோரிப் போராடத் தொடங்கினர்.
இன்றுவரை தமிழ் மக்கள் எப்போதும் தமிழ்த் தேசிய அடையாளத்தையும் தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் விட்டு விலகியதில்லை. அதுவே தமிழ் மக்களின் இருப்புக்கான போராட்டத்தின் ஆதாரமாக,அடிநாதமாக,இயக்கு சக்தியாக உள்ளது.
சிறீலங்காவின் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித் தன்மையானது சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கே எப்போதும் ஊழியம் செய்யும் என்பதனாலும் அதன் ஒரு அங்கமான 13ம் திருத்தத்தின் மூலமான மாகாண சபை முறைமை தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான வலிமை கொண்டதல்ல என்பதனாலும் எமக்கான அரசியற் தீர்வில் இவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை எனத் தமிழ் மக்கள் மீள மீள வலியுறுத்தி வருவதற்கும் இதுவே காரணமாகும்.
சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மத்தியில் இன அழிப்பின் விளைவாகத் தோன்றிய நாம் இன அழிப்புக்கு உள்ளாகின்றோம் என்ற விழிப்புணர்வையும்,தமிழ்த் தேசிய அடையாள அரசியலின் வளர்ச்சியையும்,தமிழ் மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் கண்டு அஞ்சுகின்றது. இந்த விழிப்புணர்வு தமது இன அழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு அபாயமானதென அரசு கருதுகின்றது. தமிழ் மக்களின் விழிப்புணர்வை அற்றுப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காக மூளைச் சலவை செய்யும் பல வேலைத் திட்டங்களை பல்வேறு வழிமுறைகளூடாக அரசு முன்னெடுத்து வருகின்றது.
ஆனாலும் இன்றுவரை இடம்பெற்ற பொதுத் தேர்தல்களின் போதெல்லாம் தமிழ் மக்கள் தமது ஒற்றைக் கொள்கையான தமிழ்த் தேசியத்தின்பால் அணி திரண்டு வாக்களிப்தே வழமை. ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சி,பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி,பின்னர் 1989 பொதுத் தேர்தலில் வெளிச்ச வீட்டுச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஈழப்புரட்சி அமைப்பு,நீண்ட இடைவெளியின் பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆசியுடன் கூட்டாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,இன்று பல்வேறு தரப்புகளாகச் சிதறியுள்ளபோதும் தமிழ்த்தேசியத்தை தமது கொள்கை எனக் கூறும் முன்னாள் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகள் என,தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியாக நிற்பவர்கள் என தாம் நம்புபவர்களுக்கே இதுவரை வாக்களித்து வருகின்றார்கள்.
தேர்தல் தொடர்பாக முடிவு செய்வதில் தமிழ் மக்கள் மத்தியில் தடுமாற்றம்???
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இதுவரை கட்டிக் காத்த தமிழ்த் தேசிய அடையாளம் மற்றும் அபிலாசைகள் பற்றிக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் காட்ட பல்வேறு சக்திகள் தீவிரமாக முயற்சிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் வெளிப்படுத்தியுள்ள கணிசமான மாற்றம்,ஊழலை ஒழிப்பதன் மூலம் நாட்டைச் சுபீட்சமடையச் செய்வோம் என்ற கோசம் மற்றும் வழமையான அனைவரும் சமம்,அனைவருக்கும் அபிவிருத்தி போன்ற கோசங்களை முன்வைக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரங்களால் சிலர் தடுமாறுகின்றார்கள். 2009ன் பின் நடந்த பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகக் காட்டி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்களால் தமிழர் தாயகத்திற்கு எந்த விதமான பாரிய அபிவிருத்தியையும் கொண்டு வர முடியாமல் உள்ளமைக்கு அப்பிரதிநிதிகளது திறமையின்மையே காரணம் என்று பரப்பப்படும் யதாரத்தமற்ற கருத்துகளை நம்புவதாலும் இதுவரை காலமும் தேசியத்திற்கான வாக்கைப் பெற்று வென்றவர்கள் சிலரது ஒழுக்கமற்ற,தமிழ்த் தேசியத்திற்குப் பிறழ்வான நடத்தைகளாலும் தமிழ்த்தேசியத்திற்கான கட்சிகள் என நம்பப்படும் கட்சிகளினுள் அதிகரித்து வரும் பிளவுகளாலும் சிலர் விரக்தியுற்றுள்ளமையால் தடுமாறுகின்றார்கள். இன்னும் சிலரோ தமது நண்பர்,உறவினர் தேர்தலில் நிற்கிறார் நேரில் வந்து வாக்குக் கேட்டுவிட்டார் என்பதற்காக முடிவெடுப்பதில் தடுமாறுகின்றார்கள். இவர்களே இத்தனை காலமாக தியாகங்களால் கட்டிக் காத்துவந்த தமிழ்த் தேசியத்தைத் காப்பதற்காக வழமைபோல் வாக்களிப்பதா அல்லது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வாக்களிப்பதா எனக் குழம்பி நிற்கின்றனர்.
புற்றீசல் போல முளைத்துள்ள சுயேட்சைக் குழுக்கள்
2009ன் பின் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில் அரசால் பெரும் எண்ணிக்கையில் சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்படுவது வழமையாகிவிட்டது. இம்முறை இக் குழுக்களின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இவர்களுள் பலர் வழமைபோல் தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் அரசால் களமிறக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்கள் இதுவரை தமிழருக்கோ தமிழ்த் தேசிய அரசியலுக்கோ எந்த வகையிலான பங்களிப்பையும் நல்காதவர்கள் அல்லது எதிரிகள்,ஆனால் தேர்தலில் வென்று தமிழ்த் தேசியத்தைத் தாமே காக்கப் போவதாக சிலரும் இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைக்காத அபிவிருத்திகளையெல்லாம் தாம் பெற்றுத் தரப் போவதாக சிலரும் கூறி வாக்குக் கேட்கின்றனர்.
வேறு சிலர் சில சமூகப் பணிகளைச் செய்ததனாலும் நிவாரணங்களைக் கொடுத்ததனாலும் சமூக ஊடகங்களில் பிரபல்யமாக உள்ளதாக நம்புவதாலும் தேர்தலில் தம்மால் வெற்றி பெற முடியும் என அப்பாவித்தனமாக நம்பி,தமக்கெனத் தனியான சுயேட்சைக் குழுக்களை உருவாக்கிக் களமிறங்கியுள்ளவர்கள். சிலர் புலம்பெயர் தமிழரின் நிதியைக் கையாடுவதற்கான ஒரு வழியெனவும் இன்னும் சிலர் புகலிடக் கோரிக்கைகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை பிரகாசமாக்குவதற்காகவும் சுயேட்சைக் குழுக்களாகக் களமிறங்கியுள்ளனர்.
இவர்கள் பலர் தனிப்பட்ட தமது நண்பர்கள்,பாடசாலைச் சமூகத்தவர்கள்;,உறவினர்கள்,ஊரவர்,ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் எல்லோருமே தமிழ்த் தேசிய அபிலாசைகளையெல்லாம் கைவிட்டுவிட்டுத் தமக்கு வாக்களிப்பர் என நம்புகின்றனர்.
சிறிய அளவில் தோன்றியுள்ள தடுமாற்றத்தை விரிவாக்குவதற்கான சதி
தமிழ் மக்கள் சிலரிடையே தோன்றியுள்ள இந்தத் தடுமாற்றத்தால் தமிழ் இன அழிப்புச் சக்திகளும் இவர்களின் கைக்கூலிகளும் அதிகார அடிவருடிகளும் ஊக்கம் பெற்றுள்ளனர். ஏற்கனவே தமிழ் மக்களை தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம் செய்வதற்காக மூளைச் சலவை செய்துவரும் இச்சக்திகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தியும்,சிறிய அளவில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இத்தடுமாற்றத்தை மேலும் பரவலாக்குவதற்காகப் பல்வேறு சதி நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றனர்.
இதற்காகப் பலநூறு சமூக வலைத் தளங்களும் பிரச்சாரகர்களும் புதிதாக உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் தாயத்தில் தே.ம.சக்தியின் திட்டம்
தமிழ்த் தேசிய அரசியல் நீக்கம்,தமிழ் வாக்குகளைச் சிதறடிப்பது போன்ற நோக்கங்களிற்கு மேலதிகமாக தே.ம.சக்தி தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள சிறிய குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி,தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து ஒரு சில ஆசனங்களையாவது பெற்றுத் தமது பாராளுமன்றப் பெரும்பான்மையையும் உறுதிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தே.ம.சக்தி,இதுவரை தமிழ்த் தேசியத்திற்காகவோ மக்களுக்காகவோ சிறு துரும்பைத்தானும் நகர்த்தியிராத,எமது சமூகத்தில் சிறிய அளவில் மட்டும் அறியப்பட்ட,சலன புத்தியுள்ளவர்கள் சிலரை ஊழலற்றவர்கள் என்ற போலி அடையாளமிட்டுத் தமது வேட்பாளர்களாகத் தமிழர் தாயகமெங்கும் களமிறக்கியுள்ளது.
இவர்களுள் யாராவது துர்லபமாக வெற்றிபெற்றாற்கூட அவர்களால் தமிழர்கள் மேலான இன அழிப்புத்துன்பங்களுக்கு தீர்வெதையும் பெற்றுத் தர முடியாது,திட்டமிட்டு இன அழிப்பு நோக்கங்களுக்காக தடுக்கப்பட்டுள் பாரிய அபிவிருத்திகளையும் இம்மண்ணிற்கு கொண்டுவர முடியாது. மாறாக எப்போதும் இணக்க அரசியல் பேசுபவர்கள் செய்வதைப் போல தமது தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியும். மேலும் அரசு இவர்களது ஆள்கள் சிலருக்கு சில தனிப்பட்ட சலுகைகளை இவர்க;டாக வழங்கி இவர்களுக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க உதவி செய்வது மூலம் தமிழ்த் தேசியத்துக்கான வாக்கு வங்கியைச் சிதறடிக்கும்.
இவர்களுக்கு வளங்கப்படும் வாக்கு அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் நன்றிக்கடனாக தமது எஜமானர்களின் தமிழ் இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்வதற்கு உதவுபவர்களாகவும்,அவர்களது பாவங்களுக்கு வெள்ளையடிப்பவர்களாகவும் இவர்கள் செயற்படுவர். தே.ம.சக்தி வேட்பாளர்களிற் சிலர் தமது எஜமானர்களால் தமக்கு வழங்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் நீக்கப் பணிகளை ஏற்கனவே செய்யவும் தொடங்கி விட்டனர்.
இற்றைவரை ஜேவிபியோ அல்லது அதன் இன்னொரு வடிவமான தேசிய மக்கள் சக்தியோ தமது பேரினவாத நிலைப்பாடுகளைக் கைவிட்டதாகவோ,அவை இறந்த காலமெனவோ அறிவிக்கவில்லை. தமது பேரினவாத நிலைப்பாடு தவறென்று ஒப்புக் கொள்ளவோ அதற்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவோ இல்லை. காலங்காலமாகச் சிறீலங்கா அரசுகள் தொடர்ந்து புரிந்து வருகின்ற தமிழ் இன அழிப்பை நிறுத்துவோம் எனவோ அவற்றாலேற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வைத் தருவோம் எனவோ கூறவில்லை. ஆகக் குறைந்தது இங்கு ஒரு இனப்பிரச்சினையுள்ளது,அதற்கு ஒரு அரசியற் தீர்வு தேவை என்றுகூட வெளிப்படையாகக் கூறவில்லை.
ஆனால்,கடந்த ஜனாதிபதி தேர்தலில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிய தற்போதைய ஜனாதிபதி,பதவிக்கு வந்ததும் அதைத் தொடரவுள்ளதாக அறிவித்ததும் அவரின் மூத்த கட்சித் தோழர்கள் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வு தேவையில்லை எனக் கூறியதும் வரப்போகும் ஆபத்தை முன்னறிவிக்கின்றது.
ஆக,தே.ம.சக்தியும் முன்னர் ஆட்சியிலிருந்த சிங்கள ஆட்சியாளர்கள் நுனி நாக்கால் கூறும் “அனைவரும் சமம்,அனைத்து இனங்களுக்கும் சம உரிமை,அனைவரும் சிறீலங்கர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவோம்,அனைவருக்கும் அபிவிருத்தி கிடைக்கச் செய்வோம்” போன்ற வழமையான கோசங்களைத் தவிர புதிதாக எதையும் தமிழ் மக்களை நோக்கி இன்றுவரை தே.ம.சக்தி கூறவில்லை.
ஆகவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?
தமிழ் மக்கள் இம்முறை முன்னரெப்போதையும் விட கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது. தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுள் தமிழ்த் தேசிய அபிலாசைகளைக் கட்சிக் கொள்கைகளாகக் கொண்ட,மறைமுகமாகவேனும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிராத,சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்கிக் கொண்டிராத,மக்களுக்கு கூறுவது போல தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள கட்சிகள் சிலவே உள்ளன.
சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வந்தால் மட்டுமே தமிழ்த் தேசியத்தைப்பற்றிப் பேசுவர். தேர்தல் மேடைகளில் மட்டும் சமஷ்டியே தீர்வு,தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பு நடைபெறுகிறது,சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறுவர். பின்னர் கதிரைகள் கிடைத்ததும் வேடங்களைக் கலைநத்து ஒற்றையாட்சிக்குட்பட்டும் 13ம் திருத்தத்துக்குள்ளும் தீர்வைத் தேடுபவர்களாகவும்,இன அழிப்பு நடைபெறவில்லை என்றும் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் ஒற்றையாட்சிக்கான ஒத்தகருத்துச் சொல்லுக்கு புது வியாக்கியானமளித்தும் அரச ஒத்தோடிகளாக மாறுவர். இத்தகைய வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான தெரிவை அனுபவ அறிவினூடாக செய்யும் போது போட்டியிலுள்ள மிகச் சில கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலுக்கும் அபிலாசைகளுக்கும் எப்போதும் விசுவாசமாகச் செயற்படுபவர்களாக இருப்பர்.
ஆகவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எமது மக்களை பணிவன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
சிங்கள இனவாதம், சிறீலங்கர் என்ற பொதுத் தேசியவாதம், போலிச் சம உரிமைவாதம், அர்த்தமற்ற பொருளாதார அபிவிருத்திவாதம் என்பவற்றைத் தவிர்த்து
தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள்
(ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம்
(ஒப்பம்) பொ. ந. சிங்கம்
இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம்