இலங்கை

தேர்தலில் மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம் !

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:-
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தொடர்பில் தமிழர்களிடம் ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கையில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடு கிடையாது. நாட்டில் எல்லாரும் சமமாகப் பேணப்பட்டால் – நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்தால் – எல்லாப் பிரச்சினைகளும் தீரும் என அவர்கள் எண்ணுகின்றார்கள்.
தமிழர்கள் தனியான ஒரு மக்கள் குழாம், அவர்கள் தனியான தேசம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் பிற நல்ல விடயங்கள் இருக்கலாம். ஆனால், எங்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் இணங்காதவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவேதான் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு வாக்களியுங்கள் எனக் கோருகின்றோம்.
இதேநேரம் முதன் முதல் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்தாலும் அதன் பின்பு இரண்டு தடவைகள் நேரடியாகப் போட்டியிட்டே நாடாளுமன்றம் சென்றேன். இம்முறையும் வெற்றியீட்டியே நாடாளுமன்றம் செல்வேனேயன்றி, தேர்தலில் மக்கள் என்னை நிராகரித்தால் நான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டேன்.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.