இனப்பிரச்சினைக்கு இந்த அரசு தீர்வினைத் தராது
சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு தமிழர் விரோத நடவடிக்கையை மூலதனமாக்கி வாக்கு வேட்டையாடும் சிறுபுத்தி படைத்தவர்கள் என்பதை ஜே .வி.பி.யினர் நிரூபித்து விட்டனர்என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் ஈ ழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சமஷ்டிக்கும் ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்ல. ஜே.வி.பி.யின் அமைச்சரவையின் பேச்சாளரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான விஜிதஹேரத். ஆகவே தேசிய மக்கள் சக்தி என்று புதுப்பெயர் வைத்துக்கொண்டுள்ள செஞ்சட்டை ஜே.வி.பி.யினரும்கூட சிங்கள ஆட்சியாளர்களின் இலஞ்ச ஊழல்களைக் களைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்களே தவிர இவ்வளவு இலஞ்ச ஊழல்கள் நடைபெறுவதறகுக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினையை, ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் திருப்தியுறும் வகையில் தீர்த்து நாட்டை முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டு செல்ல முற்படவில்லை என்பது நிரூபணமாகிறது.
ஜே.வி.பி.யினரின் மாற்றம் என்பது என்ன என்பதை தமிழ் இளைஞர்களும் தமிழ் மக்களும் இப்பொழுது நன்கு உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். தென்னிலங்கை இளைஞர்களைப் போலவே தமிழ் இளைஞர்கள் சிலரும் ஜே.வி.பி.யினர் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் ஏற்படும் என்று கருதுகின்றனர். இதுவரை காலமும் மத்திய அரசிற்கு அழுத்தக்குழுவாக மட்டுமே செயற்பட்டவர்கள் தமது சொந்த முகத்துடன் மக்கள் மத்தியில் வரமுடியாமையால் தேசிய மக்கள் சக்தி என்ற முகத்திரையுடன் தேர்தலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் கூறும் மாற்றம் என்பது தென்னிலங்கை நடுத்தர வர்க்க மக்களின் செல்வாக்கைப்பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமே தவிர உண்மையான தேசப்பற்றல்ல என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த புதன்கிழமை அமைச்சர் விஜிதஹேரத் எமது கூற்றை மெய்ப்பிப்பதுபோல் வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி கிடையாது என்று கூறியிருப்பதுடன் எம்மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையை விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கமாட்டோம் என்றும் ஐ.நா.வின் தீர்மானங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த மாட்டோம்
என்றும் ஊடகவியாலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் இவர்களும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு தமிழர் விரோத நடவடிக்கையை மூலதனமாக்கி வாக்கு வேட்டையாடும் சிறுபுத்தி படைத்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர். எனவே எமது மக்களும் இளைஞர்களும் இவர்களது ‘மாற்றம்’கோஷத்திற்குப் பின்னால் இழுபட்டுவிடாமல் எமது உரிமை அரசியல் மட்டுமே எமக்கான விடிவை ஏற்படுத்தும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு எமக்குத் தேவையான மாற்றம் என்பது போலித் தேசியம் பேசி தமிழினத்தை தென்னிலங்கை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைக்கத் துடிக்கும் தரகர்களிடமிருந்து எம்மினத்தைக் காத்து உரிமை அரசியலை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்கத் துடிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை ஆதரிப்பதாக இருக்க வேண்டுமேயன்றி இலஞ்ச ஊழல் ஒழிப்பு என்ற மாயையின் பின்னால் இழுபட்டுச் செல்வதாக இருக்கக்கூடாது என்றார்.