ஜே.வி.பி.க்கும் தேசிய மக்கள் சக்திக்கும் உள்ளக பிரச்சினை
ஜே.வி.பி.க்கும் தேசிய மக்கள் சக்திக்கு இடையே உள்ளக பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார நடுநிலையில் இருப்பதாலேயே அந்தப் பிரச்சினை வெளிப்படாது இருக்கின்றது என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி இடையே பிரச்சினை இருக்கின்றது. இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார நடுநிலையில் இருப்பதுடன் ரில்வின் சில்வா ஜே.வி.பி பக்கத்திலும் ஹரிணி தேசிய மக்கள் சக்தி பக்கத்திலும் இருக்கின்றனர். அநுர நடுநிலையில் இருப்பதாலேயே இந்த அரசாங்கம் போகின்றது. ஆனால் அநுரகுமார ஏதேனும் பக்கத்திற்கு சாயும் போது உள்ளக பிரச்சினை வெளிப்படும்.
எந்தவொரு அரசியல் கட்சியிலும் இவ்வாறான நிலைமைகள் இருக்கும். ஜே.வி.பி என்பது அரசியல் பார்வையுடனா அரசியல் கொள்கையை கொண்டது. தேசிய மக்கள் சக்தி என்பது உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்துடன் பயணிக்கும் தரப்பாகவே இருக்கின்றது.