நான் மரணிக்கும் வரை பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்தில் போட்டியிடேன்
நான் மரணிக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட மாட்டேன். புத்தளத்தில் உள்ள மகன்தான் புத்தளத்தை ஆள வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், எந்தக் கட்சியின் ஊடாக போட்டியிட்டால் வெற்றிபெறலாம் என்று ஆழமாக சிந்தித்து செயல்படுவதன் மூலமாகவே எமக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
மர்ஹூம் நெய்னா மரைக்காருக்குப் பிறகு புத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வரவில்லை.இந்த வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும், பெரும் வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு ஒரு எம்.பி யை பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்ற புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஒரு எம்.பியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தோமே தவிர, புத்தளம் மாவட்ட மக்களை ஆளவும், அடிமைப்படுத்தவும் நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் எமது கட்சியில் ஒரு அமைப்பாளராக இருந்த போது, புத்தளத்தில் காணப்படும் வீதி, பாடசாலை, மஸ்ஜிதுகள் என எல்லா பகுதிகளுக்கும் நிதிகளை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன் எடுக்குமாறு பல கோடி ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தேன். அப்போது அத்தனை அபிவிருத்தி பணிகளையும் நான் வந்துதான் ஆரம்பிக்க வேண்டும், நான்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டளையிட்டது கிடையாது.
நீங்களே சென்று அத்தனை அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வையுங்கள் என்று கூறினேன். புத்தளம் நகருக்கும் எமது காலத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கல்லைக் கூட நான் வந்து வைக்கவில்லை. நான் சார்ந்த மக்களை வாழ வைத்த இந்த புத்தளம் மாவட்ட மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது.
புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். அதுமாத்திரமின்றி, புத்தளத்தில் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆசைப்படக் கூடாது.
புத்தளத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உள்ளன. அதுபோல இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புத்தளத்தில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
எனவே, தேர்தலில் இடம்பெயர்ந்து வாழும் சமூகம் சார்பில் வேட்பாளர்கள் புத்தளத்தில் களமிறங்குவது, அவர்களுக்கு மட்டும் வைராக்கியத்துடன் வாக்களிப்பது, தனியாக மேடை அமைப்பது என்பன புத்தளம் மக்களுக்கு மாத்திரமின்றி, இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம் மக்களுக்கும் இழைக்கும் மிகப் பெரிய துரோகம் என்றார்.