5 வருடத்துக்குரியதை எப்படி 5 வாரத்தில் செய்ய முடியும்?
ஐந்து வருடங்களில் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை ஐந்தே வாரத்தில் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வேடிக்கையானது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐந்து வருடங்களுக்கென திட்டமிட்ட வேலைத்திட்டங்களை 5 வாரங்களில் நிறைவேற்ற முடியாது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 5 வருடங்களுக்கான வேலைத் திட்டங்களையே முன்வைத்துள்ளோம். ஆனால் நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. கடந்த 5 வாரங்களில் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
ஆனால் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை போன்று 5 வருட திட்டங்களை 5 வாரங்களில் நிறைவேற்ற முடியாது.
கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது இருந்தனர். அவர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளனர். ஆனால் தற்போது மூன்று அமைச்சர்களே இருக்கின்றனர். பொதுத் தேர்தலில் பலமான அரசாங்கத்தை அமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.