அமைதியான முறையில் ஆட்சி மாற்றம்; பைடன் உறுதி!
நவம்பர் 5 தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாக வியாழன் (07) அன்று வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.
2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புடன் புதன்கிழமை (06) பேசினேன்.
இதன்போது, அமைதியான, ஒழுங்கான மாற்றத்தை உறுதி செய்வதற்காக எனது முழு நிர்வாகமும் அவரது குழுவுடன் இணைந்து பணியாற்றும் என நான் அவருக்கு உறுதியளித்தேன் என்றார்.
அதுதான் அமெரிக்க மக்களுக்கு தகுதியானது என்று அவர் கூறினார் என்றார்.
அத்துடன் அன்றைய தினம் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடனும் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையின் புல்வெளியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பைடன், ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம் எப்போதும் மேலோங்கும் என்றார்.
2016 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து வெற்றி பெற்ற ட்ரம்ப், கடந்த 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பைடனிடம் தோல்வியடைந்தார்.
அசோசியேட்டட் பிரஸ் தகவலுக்கு அமைவாக 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 295 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.
270 என்ற பெரும்பான்மையை அவர் எளிதாகத் தாண்டிவிட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 226 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றார்.
எதிர்வரும் 2025 ஜனவரி 20 ஆம் திகதி ட்ரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.