ட்ரம்பின் வெற்றி தவறான கொள்கைகளை திருத்தி கொள்ள அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் ட்ரம்பின் வெற்றியானது, வொஷிங்டனுக்கு அதன் கடந்த கால தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும் என ஈரான் அரசாங்கம் வியாழக்கிழமை (07) தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei),
கடந்த காலங்களில் வெவ்வேறு அமெரிக்க அரசாங்கங்களின் கொள்கைகள், அணுகுமுறைகளில் எங்களுக்கு மிகவும் கசப்பான அனுபவங்கள் உள்ளன.
இந்த நிலையில் ட்ரம்பின் வெற்றியானது முந்தைய தவறான கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமாக உள்ளன.
2017 முதல் 2021 வரை டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியது.
செவ்வாயன்று (05) நடந்த தேர்தலில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தோற்கடித்து ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு திரும்பவுள்ள ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில் ஈரான் மீது அதிக அழுத்தத்தை பிரயோகித்தார்.
முதல் பதவிக் காலத்தில் அவர், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை ஒருதலைப்பட்சமாக விலக்கி, இஸ்லாமிய குடியரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
2020 ஆம் ஆண்டில், ட்ரம்பின் தலைமையின் கீழ், பாக்தாத் விமான நிலையத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தி, மரியாதைக்குரிய இஸ்லாமிய புரட்சிகர காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றமையும் குறிப்பிடத்தக்கது.