சபரிமலையில் கட்டுப்பாடு; சாம்பிராணி, கற்பூரம் ஆகியவை கொண்டு செல்லத் தடை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு காலப்பகுதிக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
அதன்படி மண்டல பூஜை டிசம்வபர் 26 ஆம் திகதியும் மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் திகதியும் நடைபெறும்.
இந்நிலையில் சபரி மலையில் சுற்று வட்டாரப் பகுதிகளின் சுற்றுச் சூழல் மாசு தொடர்பில் தேவஸ்தானம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்துக்கு ஐயப்ப பக்தர்கள் அதிகளவிலான மலர்களைக் கொண்டு வரக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது சபரி மலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர், ப்ளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துவரக் கூடாது என தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி பம்பை ஆற்றில் பக்தர்கள் அணிந்து வந்த ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை விட்டுச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.