முச்சந்தி

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியிலிருந்து ஜனநாயக ரீதியாக போராடும் செயற்பாட்டினை எப்போதும் முன்னெடுக்கும்

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியிலிருந்து ஜனநாயக ரீதியாக போராடும் செயற்பாட்டினை எப்போதும் முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மக்களை குழப்பி,மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் ஆசனங்களை கைப்பற்றும் அநாகரிக செயற்பாடுகளை வேட்பாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில் மக்கள் கடந்த காலத்தில் தாங்கள் விட்ட தவறுகளையும், ராஜபக்சர்களைச் சார்ந்திருந்தோரை நம்பியதால் ஏற்பட்ட தீயவிளைவுகளையும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். தற்போது வரை மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று ஆசனங்கள் என்பது உறுதியாகிவிட்டது. நான்காவது ஆசனத்தை நோக்கி எமது கட்சி நகர்ந்துகொண்டிருக்கின்றது. என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தேர்தல் கள நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் எட்டு வேட்பாளர்களும் கஷ்ட,அதிகஷ்ட பிரதேசங்கள் என்று பாராமல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதுவரை மூன்று ஆசனங்கள் என்பது உறுதியாகிவிட்டது. நான்காவது ஆசனத்தை நோக்கி எமது கட்சி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் எமது மக்கள் பல விடயங்களை அனுபவித்திருக்கின்றார்கள். அதாவது கோட்டபாயவின் ஆட்சிக் காலத்தில் ராஜபக்சர்களைச் சூழ்ந்திருந்த இராஜாங்க அமைச்சர்கள் பற்றி மக்கள் தெளிவடைந்திருக்கின்றார்கள். பரப்புரைகளின் போது எமது கருத்துகளை நாங்கள் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றோம். அதற்கான நல்ல அறுவடையை மக்கள் எமக்கு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

இந்த நிலையில் எமது மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் எமது பரப்புரைகள் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கினறன. இதேவேளை கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், ஊழல் மோசடிகள் செய்தவர்களை மக்கள் இம்முறை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை மக்களுடனான சந்திப்பின் போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்ட போது கூட போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் வெளியாகியிருக்கின்றன. இவை என்ன நோக்கத்திற்காக வெளியிடப்பட்டன என்பதைப் பற்றி அறிய வேண்டியுள்ளதோடு இதன் போது கைது செய்யப்பட்டவர்களுடனான விசாரணையின் பிரகாரம் அவர்கள் குறித்த ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதுவும் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பணம், குடிபானம் என்பவற்றைக் கொடுத்து மக்களின் வாக்குகளை சூரையாடக்கூடிய நிலைமை இருப்பதனால் மக்களே இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் 88 சதவீத மட்டக்களப்பு மக்கள் நிராகரித்திருந்தார்கள். அதன் பின்னர் அவரின் ஆட்சி அதிகார நாற்காலியில் இருந்து அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களே அகற்றியிருந்தார்கள்.

அந்தக் கட்சிக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயங்கரமான பாடம் புகட்டப்பட்டிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற மொட்டுக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது மூன்றைரை இலட்சம் வாக்குகளையே பெற்றது.

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது போல இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் இன்று மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் கூட கடந்த தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மூன்று நான்கு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது.

எனவே தமிழர்கள் ஒன்றை மட்டம் சிந்திக்க வேண்டும் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கான பேரம்பேசும் சக்தியாக இருக்க வேண்டும். ஊழல் மோசடி இலஞ்சம் திருட்டு வீண் விரயம் என்பவற்றைத் தடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதனை அவர் செயல் வடிவில் காட்ட வேண்டும். அப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை நிச்சயமாக சட்டத்தின் மூலமாகத் தண்டிக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் மக்களும் கடந்த காலத்தில் தாங்கள் விட்ட தவறுகளை, ராஜபக்சர்களையும், அவர்களைச் சார்ந்திருந்தோரையும் நம்பியதால் ஏற்பட்ட தீயவிளைவுகளையும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். மயிலத்தமடு, மாதவணை மேயச்சற்தரை பறிபோயிருக்கின்றது. கல்முனை வடக்கு பிதேச செயலகம் பறிபோயிருக்கின்றது. இணக்க அரசியல் மூலமாக இவற்றைத் தீர்த்துத் தருவோம் என்றும், கிழக்கின் பாதுகாவர்கள் என்றும் கிழக்கின இருப்புவாதிகள் என்றும் தங்களை மார்தட்டிக் கொண்டவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் தங்களது பதவிகளையும், இருப்புகளையும் மாத்திரம் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.

மட்டக்களப்பு மக்கள் நன்றாக ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். தமிழரசுக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் மூலமாகவே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும்.

மாவட்ட ரீதியில் விகிதாசாரப் படி தமிழர்களுக்கு நான்கு ஆசனங்களும், முஸ்லீம்களுக்கு ஒரு ஆசனமும் பகிரப்பட வேண்டும். முஸ்லீம்களுக்கு நியாயமாகக் கிடைக்கும் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டும். சுயேட்சைக் குழுக்கள் தமிழர்களின் வாக்குகள் பிரிபட வேண்டும் என்ற பின்னணியில் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற கட்சிகள் கூட தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் கட்சிகளாக இருக்க முடியுமே ஒழிய அவற்றால் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ற ரீதியில் தமிழரசுக் கட்சிதான் பிரதானமாக இருக்கின்றது. இந்தக் கட்சிக்கு தான் மக்கள் அதிகமான வாக்குகளை அளிக்க வேண்டும். அதன் மூலமாக அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு ஜனநாயக ரீதியாக போராடுகின்ற அந்தச் செயற்பாட்டை தமிழரசுக்கட்சி செய்துகொண்டே இருக்கும்.

மயிலத்தமடு பிரச்சனையில் கூட கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட முன்னெடுப்புகளாலேயே அத்துமீறிய சிங்கள மக்கள் அங்கிருந்து அகற்றப்படார்கள். ஆனால் கோட்டபாயவின் ஆட்சி வந்ததன் பின்னரே அவர்கள் மீண்டும் குடியேறியிருக்கின்றர்கள். இவ்வாறான நிலைமைகளை மக்கள் நன்றாக விளங்கிச் செயற்பட வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் இலஞ்சம் கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையைக் காணமுடிகின்றது. பணம், உணவுப் பொதிகள், மதுபானங்கள் என்பவற்றை இலஞ்சமாகக் கொடுத்து தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்காக முனைகின்றார்கள்.

எனவே மக்கள் இதில் தெளிவாக இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியும், மட்டக்களப்பில் அதிகப்படியான ஆசனங்களைப் பெறக் கூடியதுமான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துக் கொள்ள முடியும். அத்துடன் எனது ஆறாம் இலக்கத்திற்கும் வாக்களியுங்கள்.

2020ம் ஆண்டு தேர்தல் போன்று இந்தத் தேர்தலும் இருக்காது என்று நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் அவ்வாறு இடம்பெறுவதற்கான வாய்ப்புக் குறைவாக இருக்கும் என நம்புகின்றோம்.

கிழக்கு மகாணம் பல்லின மக்கள் வாழுகின்ற மாகாணம் அதிலும் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற மாகாணம். இந்த மாகாணத்தில் இலகுவாக வெற்றபெறுவதற்காக அடிப்படைவாதங்களைப் பயன்படுத்துகின்ற கட்சிகள் மீது நாங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்மும். இனமுரண்பாடுகள், இனமோதல்களை உருவாக்கி அதன் மூலமாக தங்களுடைய வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என ஒரு சில அரசியற் கட்சிகளின் பிரச்சாரங்களில் இருந்து விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

அண்மையில் காத்தான்குடியில் கூட அவ்வாறானாதொரு இனவாத பிரச்சாரத்தை நாங்கள் காணொளிகளில் அவதானித்தோம். அதாவது மக்களைக் குழப்பி மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆசனத்தை அதிகரிக்கின்ற அநாகரிகமான அரசியலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எந்த இனமாக இருந்தாலும் அடிப்படைவாத இனவாத ரீதியான பிரச்சாரங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனெனில் தேர்தல் 14ம் திகதியுடன் முடிந்துவிடும், ஆனால் இவ்வாறானவற்றால் ஏற்படும் காயங்கள் மனப்புண்ணாகவே நிலைத்திருக்கும்.

கடந்த காலத்திலும் கூட கோவிலை இடித்தோம், சந்தை கட்டினோம் என்றவாறான கருத்துகளை வெளியிட்ட மூத்த அரசியல்வாதியொருவர் தற்போது கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றிவிட்டால் தமிழர்களின் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உடைத்துத்தள்ளுவோம். என்றவாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.

எனவே இவ்வாறான கருத்துகளின் மூலம் தமிழர்களின் மனங்களில் காயங்கiளை ஏற்படுத்த வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.