ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி – இஸ்ரேல் அறிவிப்பு!
கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறி உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் களமிறங்கி உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவருக்கு அடுத்து தலைமை பதவிக்கு வரவிருந்த தலைவரும் கொல்லப்பட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் லெபனான் மற்றும் காசா முனையில் சுமார் 70 முறை வான் தாக்குதல்களை இஸ்ரேல் விமானப்படை நடத்தி உள்ளது.
லெபனானில், தரைப்படைகள் வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியதால் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம் காசாவில், இஸ்ரேலிய வீரர்கள் பலரை கொன்றதாகவும், அவர்கள் ஹமாஸ் அமைப்பினர் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.