பல வேட்பாளர்களுக்கு பணப் பற்றாக்குறை!
இவ்வருட பொதுத் தேர்தலில் பிரசார வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பணப் பற்றாக்குறை பல அரசியல் கட்சிகளுக்கு இடையூறாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகள் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகளுக்கும் தற்போதைய பிரசார நடவடிக்கைகளுக்கும் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவான பின்னர் ஏற்பட்ட பணப்பற்றாக்குறை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மட்டங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் என்பவற்றை காட்சிப்படுத்துவது மிகக்குறைந்த மட்டத்திலேயே இருப்பதாகவும் கொழும்பிலுள்ள வேட்பாளர்களுக்கு மாத்திரம் கட்சி அலுவலகங்கள் ஊடாக நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மாத்திரமே அதிக செலவுகளை மேற்கொண்டு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களுடைய சொந்த நிதியை கொண்டே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சில வேட்பாளர்கள் சமூக ஊடகங்களை மாத்திரம் பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதிக செலவில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.