நேபாளத்தில் நாய்கள் தினக் கொண்டாட்டம்
நேபாளத்தில் நாய்களுக்கான தினம் ஒன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது, நேபாளத்தின் ஐந்து நாள் இந்து பண்டிகையான திஹார் ஆரம்பமாகி இரண்டாவது நாள் குகூர் என்று அழைக்கப்படும் நாய்களுக்கான தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாய்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு அவற்றின் நெற்றியில் டிக்கா எனும் சிகப்பு அடையாளம் இடப்படுகிறது. அத்துடன் நாய்களுக்கு மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறந்த உணவுகள் வழங்கப்படுகின்றன.
நேபாளத்தில் உள்ள இந்துக்கள் நாயை, எமனின் தூதுவர் என்றும், மரணத்தின் தெய்வம் என்றும் நம்புகின்றனர்.
இந்தப் பண்டிகையானது, தீபாவளி பண்டிகையுடன் சில பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்ளும் பண்டிகையாகவும் திகழ்கிறது. இதன்போது செல்லப் பிராணிகளான நாய்கள் மட்டுமின்றி தெரு நாய்களும் கௌரவிக்கப்படுகின்றன. இந்த நாளில் நாய்களுக்கு வழங்கப்படும் உணவில் இறைச்சி, பால், முட்டை உட்பட மற்றும் பல சிறந்த உணவு பதார்த்தங்களும் அடங்கும்.
இந்நாளில் மக்கள் தங்கள் வீடுகளை தூய்மைப்படுத்தி அலங்கரிப்பதோடு ஒளி விளக்குகளையும் ஏற்றி இலட்சுமி தேவியை வழிபடுகின்றனர்.
இந்நிலையில், நாய்களுக்கு வழங்கப்படும் கௌரவம்பற்றி விவசாயி ஒருவர் தெரிவிக்கையில் “எங்கள் வீட்டின் முக்கிய அம்சமாக எங்கள் நாய் திகழ்கிறது. நாய் என்பது நம்மை பாதுகாப்பதற்கு முக்கியமான ஒரு தேவையாகும். நாம் ஒரு நாயை வளர்க்கும் போது அது நமது குடும்பத்தையே பாதுகாக்கிறது” என்று கூறினார்.