முச்சந்தி

டிரம்ப் மீண்டும் அதிபரான பின்னர் காசா, உக்ரைன் போரின் நிலமை ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மத்திய கிழக்கில் அமெரிக்கர்களின் ஒரே நம்பகமான கூட்டாளி இஸ்ரேல் தான். எனவே அமெரிக்கர்கள் தங்கள் நீண்டகால ஆற்றல் நலன்களைப் பாதுகாக்க இஸ்ரேலை ஒரு பாரிய இராணுவ தளமாகவும் பயன்படுத்துகின்றனர்.
 
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இந்தப் புவிசார் அரசியல் உண்மை மாறாது. மேலும் உயர் மட்டத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அவை இதைப் புரிந்து கொண்டே புவிசார் அரசியலை வரையறை செய்கின்றனர்)
அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் உக்ரைன், காசா போரின் நிலமைகள் மாற்றமடையும் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் நிலைப்பாடாகும்.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பின்னர் இந்த இரண்டு போர்கள் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு பாரியளவில் உள்ளது.
இஸ்ரேல்- அமெரிக்க உறவு:
இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் அசைக்க முடியாதது. இஸ்ரேலிய அரசியல் பரப்புரையாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்தையும் எப்படி கட்டுப்படுத்து வைத்துள்ளனர் என்பதைப் பற்றிய பல தகவல்கள் அறியப்பட்டதே.
பெரும் வல்லரசுகளுக்கு மத்திய கிழக்கு எப்போதும் முக்கியமானது. உலகின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் அங்கு தான் அமைந்துள்ளன.
வளைகுடாவின் செல்வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வளங்களை அமெரிக்கர்கள் பெற மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரவளிக்கின்றனர். இந்த நாடுகளை ஜனநாயக நாடுகளாக மாற்ற முடியாது.
இந்த வளைகுடா அரசுகள் நம்பகமான பங்காளிகளாக அமெரிக்கர்களுக்கு உள்ளனர். ஆயினும் சவுதி பல ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவாக இருந்தும், 9/11 தற்கொலை குண்டுதாரிகளில் பெரும்பாலானவர்கள் சவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்களாவர்.
இதனாலேயே மத்திய கிழக்கில் அமெரிக்கர்களின் ஒரே நம்பகமான கூட்டாளி இஸ்ரேல் தான். எனவே அமெரிக்கர்கள் தங்கள் நீண்டகால ஆற்றல் நலன்களைப் பாதுகாக்க இஸ்ரேலை ஒரு பாரிய இராணுவ தளமாகவும் பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இந்தப் புவிசார் அரசியல் உண்மை மாறாது. மேலும் உயர் மட்டத்தில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு அவை இதைப் புரிந்து கொண்டே புவிசார் அரசியலை வரையறை செய்கின்றனர்.
டிரம்ப் தனது இஸ்ரேலுக்கான ஆதரவில் அதிகளவு ஆக்ரோஷமாக இருக்க முடியும். ஆனால் கமலா ஹாரிஸ் இஸ்ரேலை எந்த வகையிலும் அச்சுறுத்த அனுமதிக்க மாட்டார் என்பதும் உண்மையாகும்.
உக்ரைன் போரின் நிலை :
உக்ரைன் போர் அமெரிக்காவிற்கு மிகவும் சிக்கலானது. உக்ரேனில் அமெரிக்காவின் நலன்கள் மிகவும் மறைமுகமானவையாக இருப்பினும் ஆனால் முக்கியமானதாகும்.
ரஷ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்தும் அதிகம் அஞ்சுகின்றன.
பின்லாந்து, பால்டிக் நாடுகள் மற்றும் போலந்து ஆகியவை இதில் அடங்கும்.
இந்த நாடுகள் நேட்டோவில் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பினர்களாக உள்ளன. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்கள் ரஷ்யாவால் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றன என கருதுகின்றனர்.
அமெரிக்கா நேட்டோவின் மிக முக்கியமான உறுப்பினராகும். ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலும் அமெரிக்கர்களுடன் நட்பாக இருக்கும் ஜனநாயக நாடுகளால் ஆனது. உக்ரைனின் பெரும்பாலான பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும், அது அமெரிக்காவிற்கு மட்டும் அல்ல என்பதே டிரம்ப் அரசின் நிலைப்பாடாகும்.
ஆனால் ரஷ்யாவை ஐரோப்பியர்கள் எதிர்த்துப் போரிடுகிறார்கள். உக்ரைன் வீழ்ந்தால், நேட்டோ நாடுகள் ஆபத்திக்கு உள்ளாகும். அப்படி நிகழ்ந்தால் மேலும் அமெரிக்காவிற்கு செலவுகள் இன்னும் அதிகமாக இருக்கும். அப்படி நிகழ்ந்தால் டிரம்ப் ஐரோப்பியர்களை அதிக பணம் செலுத்துமாறு கேட்பார். ஆனால் அவர் உக்ரைனை முழுமையாக கைவிட அனுமதிக்க மாட்டார்.
எவ்வாறாயினும், ரஷ்யாவுடன் ஒரு இறுதி சமாதான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்பதில் அவரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது தெளிவில்லை.
ரஷ்யாவின் முக்கியமான துறைமுகமான செவாஸ்டோபோல் காரணமாக கிரிமியா எப்போதும் அவசியமாகிறது. கிரிமியாவை புட்டின் ஒருபோதும் கைவிடமாட்டார். கிரிமியாவைப் பாதுகாக்க அசோவ் கடலையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ரஷ்யாவின் மேற்கில் மிகவும் பாதுகாப்பான இயற்கை எல்லை டினேப்பர் நதியாகும்.
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் வரைபடத்தைப் பார்த்தால், ரஷ்யா பல்லாயிரக்கணக்கான வீரர்களை தியாகம் செய்த இடங்கள் இவை என்பதை காணலாம். எனவே, உக்ரைன் ரஷ்யாவின் கைப்பாவை ஆட்சியாக இல்லாவிட்டால், ரஷ்யா விரைவில் அல்லது பின்னர் இந்த இடங்களை மீண்டும் ஆக்கிரமிக்கும் என்ற ஐயமும் உள்ளது.
டினேப்பருக்கு கிழக்கே உக்ரைனின் பல பிராந்தியங்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கிரிமியா மற்றும் அசோவ் கடல் ஆகியவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ரஷ்யா அனுமதிக்காது. இப்பிராந்தியங்களை உக்ரைன் – நேட்டோ இதனை மீட்டு, புடின் அதிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆயினும் இப்போரில் உண்மை என்னவென்றால், உக்ரைன் – நேட்டோ கொடுத்த விலையும் மிக அதிகமாக இருப்பதால், கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு இரு தரப்பும் வருவது நல்லது. டிரம்ப் இந்த விஷயங்களை விரைவுபடுத்துவார் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.