கட்டுரைகள்

டிரம்பின் வெற்றியின் பின்புலமும், தாக்கமும்; ஒரு பார்வை…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ‘வெற்றி முழக்கம்’ எழுப்பியிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். இந்தத் தேர்தலில் 270 என்ற இலக்கு எளிதில் வசமாகிவிட்டமை வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது வெற்றியின் பின்புலமும், ‘டிரம்ப் ரிட்டர்ன்’ ஏற்படுத்தப்போகும் சாத்தியமான தாக்கமும் குறித்த விரைவுப் பார்வை இங்கே…

எண்கள் சொல்வது என்ன? – அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலானவை டிரம்ப் வசமாகியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 50 மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ‘வாக்காளர் குழு’ உறுப்பினர்கள் இருப்பார்கள்.

சிறிய மாகாணங்களில் ஒன்று முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், டிரம்ப் 279, கமலா ஹாரிஸ் 223 என்ற எண்ணிக்கையை வசப்படுத்தினர். டிரம்ப் 51 சதவீத வாக்குகளையும், கமலா 47.3% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுடன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் 435 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. டிரம்பின் குடியரசுக் கட்சி 200 தொகுதிகளைத் தாண்டிவிட்டது. கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 180+ தொகுதிகளை வசப்படுத்தியிருந்தது. செனட் சபையைப் பொறுத்தவரையில் 50 இடங்கள் தேவை எனும் நிலையில், டிரம்ப் கட்சி 52 இடங்களையும், கமலா ஹாரிஸ் கட்சி 42 இடங்களையும் பெற்றிருந்தது. இன்னமும் சில முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வர உள்ள சூழலில் டிரம்ப் முழங்கியது போலவே இது குடியரசுக் கட்சிக்கு மகத்தான வெற்றியே.

டிரம்ப் வெற்றி உரை: 78 வயதான டிரம்ப், இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆகும் நோக்கில் தேர்தலில் களம் கண்டார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றி உரையில், “இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்தப் பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.

இந்தத் தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். இராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம். உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என அவர் பேசினார்.

டிரம்ப் வென்றதன் பின்புலமும் தாக்கமும்: அமெரிக்க நாட்டில் வரி உயர்வை கட்டுப்படுத்துவது, நாட்டில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர், ஜனநாயக உரிமை போன்றவை தேர்தலில் டிரம்பின் முக்கிய முழக்கங்களாக இருந்தன. தேர்தல் பரப்புரையில்போது இரண்டு முறை அவரை குறிவைத்து கொலை முயற்சி நடந்தது. இதில் பென்சில்வேனியாவில் துப்பாக்கி குண்டு அவரது காது பகுதியை துளைத்து காயம் ஆக்கியது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக, ஜூலை 13 அன்று பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில், 20 வயதேயான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றார். உடனடியாகப் பாதுகாப்புப் படையினரால் க்ரூக்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ட்ரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாகப் பேச்சு எழுந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் காதில் ரத்தம் வழிய, பின்னணியில் அமெரிக்க தேசியக் கொடி காற்றில் பறக்க, முஷ்டியை உயர்த்தி டிரம்ப் முழக்கமிட்டது ஒரு வீறார்ந்த காட்சியாகப் பதிவானது. அந்தப் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளும் அமெரிக்கச் சந்தையில் அமோகமாக விற்பனையாகின.

உக்ரைனுக்கு நிதி வழங்கக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் தீவிரமடையலாம் என்று கருதப்பட்டது. டிரம்ப்பைப் பொறுத்தவரை ரஷ்யாவை விடவும் சீனாதான் அமெரிக்காவுக்கு எதிரான நாடு என்பதும் சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

இரு பெரும் பிரச்சினைகள்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் தொடர்பாக சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப் பேழை பக்கத்தில் எழுத்தாளர் மு.இராமனாதன் குறிப்பிட்ட சில விஷங்களையும் மீண்டும் இங்கே அசைபோடுவது சரியாக இருக்கும். அதன் விவரம்: ‘இந்தத் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்த விஷயங்கள் கருக்கலைப்பும் குடியேற்றமும். முன்னதை ஜனநாயகக் கட்சியும் பின்னதைக் குடியரசுக் கட்சியும் முன்னெடுத்தன.

கருக்கலைப்புக்கு மற்ற பல நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் நாடு தழுவிய அனுமதி இருந்தது. 2021இல் உச்ச நீதிமன்றம் அந்த உரிமையை ரத்து செய்தது. இனி அந்தந்த மாகாணங்கள் கருக்கலைப்பை ஏற்கவோ தடை விதிக்கவோ செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களை ஜனாதிபதிகள்தான் நியமிக்கிறார்கள் என்பதையும் தற்சமயம் ஒன்பது நீதியரசர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகு குடியரசுக் கட்சி ஆட்சி செலுத்தும் 13 மாகாணங்களில் கருக்கலைப்புத் தடை செய்யப்பட்டுவிட்டது. இன்னும் சில மாகாணங்களில் அது விதிமுறைகளுக்கு உட்பட்டது. இதைத்தான் ஜனநாயக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

அடுத்து, குடியேற்றப் பிரச்சினை. டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் சட்டபூர்வமான குடியேற்றக்காரர்களைப் பெருமளவில் குறைத்தார். மெக்சிகோ எல்லையில் ஒரு சுவரைக் கட்டத் தொடங்கினார். பைடன் இந்தக் கட்டுமானத்தை நிறுத்தினார். மெக்சிகோ குடியேற்றக்காரர்களை, அவர்கள் சட்டபூர்வமாகவோ சட்டத்துக்குப் புறம்பாகவோ எவ்விதம் உள்நுழைந்தாலும், அவர்களைத் தடைசெய்ய வேண்டும் என்கிறார் டிரம்ப். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர், கமலா ஹாரிஸுடனான ஒரு விவாதத்தில் அவர்கள் குடிமக்களின் செல்லப் பிராணிகளைக் கொன்று தின்கிறார்கள் என்றார். இந்தப் பரப்புரை உள்ளூர்வாசிகளிடம் நன்றாக எடுபடுகிறது; கமலாவின் அணியினர் போதிய அளவில் அதை எதிர்கொள்ளவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்தத் தேர்தலில் கறுப்பினத்தவரும் சிறுபான்மையினரும் குடியேற்றக்காரர்களும் அதிக அளவில் கமலாவை ஆதரிக்கிறார்கள். வெள்ளை இனத்தவரில் அதிகமானோர் டிரம்ப்பை ஆதரிக்கிறார்கள். பெண்களில் அதிகமானோர், குறிப்பாக இளம் பெண்கள் கமலாவையும்; ஆண்கள், அதிகமும் இளைஞர்கள் டிரம்ப்பையும் ஆதரிக்கிறார்கள். நகரவாசிகள், தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் கணிசமானோர் கமலாவையும்; கிராமவாசிகள் விவசாயிகளில் அதிகம் பேர் டிரம்ப்பையும் ஆதரிக்கிறார்கள். போலவே, தாராளவாதத்தினரும் (liberals) வலதுசாரிகளும் பிரிந்து நிற்கிறார்கள்.

எதிரும் புதிருமாக நிற்கும் இந்த வேட்பாளர்கள் ஒன்றுபடும் புள்ளிகளும் உண்டு. அவற்றில் ஒன்று இஸ்ரேல் ஆதரவு. யார் அதிபராக வந்தாலும் பாலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்தத் தேர்தலில் இதுவும் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரேபிய அமெரிக்கர்களும் இஸ்லாமியர்களும் பராம்பரியமாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்.

அவர்களால் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க முடியாது. இந்தத் தேர்தலிலும் முடியாது. ஆனால் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்களில் சிலர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பைடன் அரசின் தொழிற்கொள்கையில் அதிருப்தியுற்ற இடதுசாரிகளும் வாக்களிப்பதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களது புறக்கணிப்பு ட்ரம்ப்புக்குச் சாதகமாக அமையும்.

கமலா ஹாரிஸ் தோல்வி: 60 வயதான கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். ஆப்பிரிக்க ஆசிய அமெரிக்கரான அவர், ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியில் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி ஆனார். நடப்பு ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில், தேர்தல் பரப்புரை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் பரப்புரையின் போது அவருக்கான ஆதரவு அமோகமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி பைடன் ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் கூட அவரது கொள்கை முடிவுகளை கடுமையாக விமர்சித்திருந்தார் கமலா ஹாரிஸ். இருப்பினும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆட்சியின் செயல்பாடு அவருக்கு தேர்தலில் வீழ்ச்சியை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அமெரிக்க வாக்காளர்களின் ‘ஆணாதிக்க’ மனோபாவமும் இப்போது விவாதிக்கப்படுவதையும் கவனிக்கலாம்.

டிரம்ப் செய்த புதிய சாதனை: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பெற்றுள்ள இந்த வெற்றி, வரலாற்றில் இடம்பெறுகிறது. இதற்கு முன்பும் பல தலைவர்கள் இரண்டு முறை ஜனாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள் (ரீகன், புஷ், கிளிண்டன், ஒபாமா). ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டுமுறை ஜனாதிபதியாக இருந்தவர்கள்.

டிரம்ப் தேர்வானதன் மூலம், ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து, அடுத்த முறை தோற்று, மூன்றாவது முறை போட்டியிட்டு ஜனாதிபதியாவது என்பது வரலாற்றில் முதல் முறை. நான்கு கிரிமினல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளோடு அதிபராகிற முதல் நபராகவும் டிரம்ப் இருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.