நடுகைக்காரி … 76… ஏலையா க.முருகதாசன்
சனக்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் சங்கத்தின் புடவைனக்கடை திணறியது.மூன்றே மூன்று விற்பனையாளர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர்.
தாங்கள் வேலைப்பளு காரணமாக சோர்ந்து போயிருக்கிற நேரம் பார்த்து துணிகள் களவு போவதற்கும் வாய்ப்பு இருக்கலாம் என விற்பனையாளர்கள் வாங்க வந்தவர்களுக்கு கேளாதவண்ணம் ஒருவரின் காதுக்குள் ஒருவர் சொல்லிக் கொண்டனர்.
சிவரஞ்சனி,தர்மராஜா,பாலகாந்தன் என மூவரும் துணிகளை விரித்துப் போடுவதும் பின்னர் வேண்டாம் என்று சொல்ல சுற்றி வைப்பதும் இப்ப சற்றி வைச்சீர்களே அதை எடுங்கள் என்று ஒருவர் சொல்வதும் சுற்றி வைச்சதை எடுத்து விரித்துக் காட்டுவதும் இதைவிடச் சின்னப்பூக்கள்: போட்ட சீத்தைத் துணி இல்லையா என்று துணி வாங்க வந்தவர்கள் தமது கற்பனையில் எதை நினைச்சுக் கொண்டு வந்தார்களோ அந்தக் கலரில் அந்தப் பூக்கள் உள்ள சீத்தைத் துணிகள் கடையிலிருக்காதா என அங்கலாய்த்தாரகள்.
துணிகள்,சேலைகள்,அரைத்தாவணித் துணிகள்,சேர்ட்டுகள் என எல்லாம் அச்சங்கக் கடை கண்ணாடி அலுமாரிகளில் நிரம்பியிருந்தன.
தாயுடனோ சகோதரிகளுடனோ வந்திருந்த இளைஞர்கள் சேர்ட் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதிருந்த போதும் அந்தச் சேர்ட்டை எடுங்கள் என அலுமாரிக்குள்ளிருந்து எடுப்பித்து அளவு சரியாகவிருந்தாலும் நிறம் பிடிக்கவில்லையென்று பொய் சொல்லும் இளைஞர்களும்,இது உங்களுக்கு சரியான அளவாக இருக்கும் என்று விற்பனையாளர் சொல்வது சரியென்று தெரிஞ்சும் வாங்க வேண்டும் என்று எண்ணமில்லாததால் இது பெரிசு இதைப் போட்டால் கிழவன் மாதிரிக் காட்டும் எனக்கு உடம்போடை சேர்ட் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் எம்.ஜி.ஆர் படங்களில் அவர் சேர்ட் போட்ட மாதிரி இருக்க வேண்டும் என்றும் சில இளைஞர்கள் போகிற போக்கில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அது அனல் தெறிக்கும் வெயில் காலம் என்பதுடன் அளவக்குதிகமான சனக்கூட்டத்தால் சுழல் விசிறி இயங்கியும் அதையும் மீறி கடைக்குள் புழுக்கமாகவே இருந்தது.
சிவரஞ்சனியின் கழுத்து வழியாக வழிந்த வேர்வை மார்பை நோக்கி வழிய சிறிய லேஞ்சியால் கழுத்தையும் கழுத்தடி மார்பையும் துடைத்தபடி வேலை செய்து கொண்டிருந்தாள் அவள்.
நெற்றியில் அரும்பிய வேர்வையை புறங்கையால் துடடைச்சபடி தர்மராஜாவும் பாலகாந்தனும்; துடைச்சபடியும் சேர்ட்டின் மேல் பட்டனைக் கழட்டி விட்டபடி ஊ என்று சொல்லிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.
சங்கத்தின் கடையில் வேலை செய்பவர்கள் தமக்கு அடிமை என்று சிலர் நினைச்சுக் கொள்வதுண்டு.வேலை செய்பவர்களைப் பற்றிப் புகார் சொல்வதால் தாம் வீராதி வீரர் பிழையைக் கண்டுபிடிப்பதில் தாம் விண்ணர் என்று சிலர் நினைப்பதுமுண்டு.
சங்கக் கடைகளில் ஏதாவது பிழை நடக்கிறதா எனக் கண்காணிப்பதற்கென்றே தங்களைப் பெரும் புலனாய்வாளர்கள்; என்ற நினைப்பில் சங்கக் கடைகளில் கப்போடு சாய்ந்து நின்று பொழுதைப் போக்குபவர்களும் உண்டு.
சங்கக்கடை முகாமையாளரின் சொந்தக்காரர்களோ அல்லது பணியாளர்களின் சொந்தக்காரர்களோ சாமான் வாங்க வந்தால் அவர்களுக்கு முகாமையாளரும் பணியாளரும் தட்டுப்பாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்களோ என இந்தப் புலனாய்வாளர்கள் கண்ணுக்குள் எண்ணைவிட்டவர்கள்போல உற்றுக் கவனிச்சுக் கொண்டேயிருப்பார்கள்.
பொதுமக்கள் பக்கத்திலிருந்து சிலர் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.தங்களது தாளத்துக்கு முகாமையாளர் ஒத்துப் போகாதுவிட்டால் அவரைப் பற்றி சங்கடையிலை ஊழல் நடக்குது என்று ஊருக்குள் கதையைக் கட்டிவிடுவதும் முகாமையாளரின் வீட்டில் தட்டுப்பாட்டுப் பொருட்களுக்கு பஞ்சமே இல்லை அவரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் வீட்டிலும் அந்தப் பொருட்களுக்கு பஞ்சமே இல்லை என்றும் கதையைக் கட்டிவிட்டு அந்தச் செய்தி பற்றி எரிந்து தலைமையகம் வரை போய் கடைசியிலை திடீர் இருப்பெடுப்பு என வந்து நிற்கும்.
சனக்கூட்ட நெரிசல் யாருக்கு எதைக் கொடுப்பது என்று தெரியாத குழப்பம் என துணிக்கடை அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது சனத்தைச் சமாளிக்க முடியாத நிலை வந்ததைக் கண்ட சிவரஞ்சனி பாலகாந்தனிடம், காந்தன் மேலை மனேஜர் மனோகரண்ணை நிற்கிறார்,அவர் இண்டைக்கு வேலைக்கு வந்ததைக் கண்டனான்,முருகதாசன் அவற்றை மனுசி சிலம்பரசி,,வில்வராஜா,கலாரஞ்சிதம் எல்லாரும் ஒபீசில் வேலைக்கு வந்ததைக் கண்டனான்,மனோகரணணையி;ட்டைப் போய்ச் சொல்லுங்கோ யாரையாவது கீழை அனுப்புச் சொல்லி என்று சொல்ல பாலகாந்தனும் சங்கத்தின் ஒபீஸ் இருக்கும் மேல்மாடியை நோக்கிப் போகிறான்.
பாலகாந்தன் சங்க மனேஜர் மனோகரராஜாவிடம் துணிக்கடையில் உள்ள சனக்கூட்டத்தின் நிலவரம் பற்றிச் சொல்லிவிட்டுவர,மனேஜர் முருகதாசனின் மனைவி வேலை செய்து கொண்டிருந்த மேசையடிக்கு வந்து சிலம்பரசி கீழை துணிக்கடையிலை ஒரே சனமாயிருக்குதாம் நீங்கள்தானே அந்தக் கடையின்ரை வரவு செலவைப் பார்க்கிறனிங்கள் ஒருக்காய்ப் போய் உதவி செய்யுங்கோ நீங்கள் கணக்கைக் கேட்டு காசை வாங்குங்கோ,துணிகளைக் குடுத்து காசையும் வாங்கிறது அவைக்கு கஸ்டம் போல என்று மனேஜர் சொல்ல,துணிக் கடைக்குப் போக விருப்பமில்லாத சிலம்பரசி தனது கணவனைப் போகச் சொல்வதற்காக முருகதாசன் வேலை செய்யும் மேசைத் திக்கை நோக்கி ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் முன்பே உங்கடை மனுசனுக்கு முக்கியமான வேலை இருக்கு என்று சொன்னதும் அரைகுறை மனசுடன் விருப்பமில்லாது எழுந்து போகிறாள் சிலம்பரசி.
சிலம்பரசி உள்ளே வந்ததைக் கண்ட சிவரஞ்சனி,தர்மராஜாவிடம் ஐயையோ இவளையா மனோகரண்ணை அனுப்பியிருக்கிறார்,இவள் திமிர் பிடிச்சவளாச்சே சனத்தோடை என்னென்ன பிரச்சினை வரப் போகுதோ தெரியாதே வெக்கை ஒரு பக்கம் சனக்கூட்டம் ஒரு பக்கம் இவள் என்ன பிரச்சினையைக் கொண்டு வரப்போகிறாளோ என்று இரகசியமாகச் சொல்கிறாள்.
சிலம்பரசி காசுப்பட்டடையடியில் வந்து நின்று துணி,உடுப்புகள் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வாங்கி மிச்சத்தைக் குடுத்துக் கொண்டிருந்தாள்.
ஞானம் தனது தாயுடனும்,மங்களேஸ்வரி தனது தாயுடனும் நீலா தனது தம்க்கையுடனும் துணிக்கடையில் துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிலம்பரசி விருப்பமில்லாமல் சங்கக் கடைக்குள் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தனது கணவனின் தாயாரும் தனது மைத்துனியான மங்களேஸ்வரியும் கடைக்குள் நின்று துணிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை சிலம்பரசி ஆரம்பத்தில் கவனிக்கவில்லை.
மங்களேஸ்வரியைச் சிலம்பரசி கண்டவுடன் புன்னகைத்து தனியாகவா வந்தனீங்கள் என்று கேட்க இல்லை அம்மாவும் வந்தவா என்று சொன்னதும் சிலம்பரசியின் முகம் இறுகிறது.
சிலம்பரசி முருகதாசனைக் காதலிச்சுக் கல்யாணம் செய்ததில் இன்னும் அவளை மங்களேஸ்வரியின் தாய் ஏற்கவில்லை.அதுதான் சிலம்பரசிக்குக் கோபம்.
சிலம்பரசியும் முருகதாசனும் சங்க ஒபீசில் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் விரும்பி காதலிச்சுக் கல்யாணம் செய்தவர்கள்.
சிலம்பரசியின் குடும்பத்தில் சிலம்பரசிதான் மூத்தவள்.அவளுக்கு மூன்று தங்கச்சிமார்,பொம்பிளைப்பிள்ளையள் உள்ள குடும்பத்தில் போய் மாண்டு போனானே தன்ரை மகன் என்பதோடு பின்னாலை இருக்கிற மூன்று பொட்டச்சிகளுக்கும் தன்ரை மகன்தானே சீதனம் குடுக்க வேணும் என்பது மங்களேஸ்வரியின் தாயின் கற்பனை.
தனது கற்பனை ஆதங்கத்தைத் தனக்குள் வைச்சிருக்காமல் தனக்குத் தெரிஞ்சவர்களிடம் சொல்ல அது சிலம்பரசியின் காதுக்கும் எட்டிவிடுகிறது.
எப்பவாவது இருந்திட்டு மாமி என்னத்துக்கு நீங்கள்தான் என்ரை தங்கச்சிமாருக்குச் சீதனம் தரப்போறியள் என்று கதைச்சுத் திரியிறா என்று கணவனைக் கேட்பாள்.
முருகதாசன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சரி சரி அதை விடு என்று சமாளிப்பான்.
சங்கக் கன்ரீனில் தானும் புஸ்பகலாவின் தாயும் தேத்தண்ணி குடிச்சு வடையும் சாப்பிட்டு தமையனின் கணக்கில் எழுதியதை அண்ணிக்கு மூடிமறைக்கக்கூடாது என்று நினைச்ச மங்களேஸ்வரி அண்ணி நானும் புஸ்பாவின் தாயும் கன்ரீனில் தேத்தண்ணி குடிச்சு வடையும் சாப்பிட்டிட்டு அண்ணையின்ரை எக்கவுண்டிலை எழுதிப் போட்டு வந்தனான் அண்ணைக்குச் சொல்றியளா என்று சிலம்பரசியைப் பார்த்துச் சொல்ல நீங்களாச்சு உங்கடை அண்ணையாச்சு இது அண்ணன் தங்கச்சிக்குள்ள உரிமை விசயம் உங்கடை அண்ணை எதுவும் சொல்ல மாட்டார்,நானும் அதில் தலையிட மாட்டான்.இஞ்சை நிண்டு போக நேரஞ் சென்றால் மாமியையும் கூட்டிக் கொண்டு போய் கன்ரீனிலை சாப்பிட்டிட்டுப் போங்கோ என சிலம்பரசி பில்லைப் பார்த்துப் பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டே மைத்துனிக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தனது மருமகளும்,மகளும் கதைப்பதை துணிகளைப் பார்த்துக் கொண்டே காது குடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் மங்களேஸ்வரியின் தாய்.
அப்பொழுது மங்களேஸ்வரியின் தாய் தனது கையில் வைச்சிருந்த புல்லுப் பையிலிருந்து ஒரு துணிப்பையை எடுத்து இந்தா இதை உன்ரை அண்ணியிடம் குடு என்று குடுக்க,பையை வாங்கிக் கொண்டே என்னம்மா இது என்று கேட்க பைக்குள்ளை பேப்பரிலை சுற்றின பனங்காய்ப பணியாரம் இருக்கு குடு,அவனுக்கு விருப்பமான பணியாரம் என்று மங்களேஸ்வரியின் தாய் சொல்ல அவருக்கு மட்டுமல்ல எனக்குந்தான் விருப்பம் என்று சிலம்பரசி சொல்ல அதற்கு பதில் எதுவுமே சொல்லாது மௌனமாகிறாள் மங்களேஸ்வரியின் தாய்.
சிலம்பரசியின் கையில் பையைக் குடுத்துக் கொண்டே எப்ப அம்மா இதைச் சுட்டனி என்று மங்களேஸ்வரி கேட்க அது உனக்கு எதுக்கு நேற்றுத்தான் சுட்டன் என்கிறாள் தாய்.சிலம்பரசியைத் தற்காலிகமாக மங்களேஸ்வரியின் தாய் வெறுத்தாலும் தனது மருமகள் அழகானவள் உயரமான எடுப்பான நிமிர்ந்த தோற்றம் கொண்டவள் என்பதில் மங்களேஸ்வரியின் தாய்க்கு பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு.;.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டாள்.
அப்பொழுது சிலம்பரசிக்கு நேர் எதிரே ஒரு பெண் வந்து நின்று துணிகளைப் பார்க்கத் தொடங்க அந்தப் பெண்ணைக் கூறுகுறிப்பாகப் பார்த்த சிலம்பரசி பொதுவில் சொல்வது போல சங்கத்தின் துணிக்கடையில் துணிகள் மலிவு விற்பனைக்குப் போடுகினம் என்று கேள்விப்பட்டாளே குளிக்காததுகள் எல்லாம் காகக்கூட்டம் போல வந்தவிடுவினம் என்று சொல்ல யாரை சிலம்பரசி சொல்கிறாள் என்று அவளையே எல்லோரும் பார்க்க அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் நின்ற பெண் சிலம்பரசியிடம் குளிக்காமல் வந்தவர்கள் என்று யாரைச் சொன்னனீங்கள் என்று கொஞ்சம் கோபமாகக் கேட்க சிலம்பரசி தனக்கு நேரே நின்ற பெண்ணை கண் சாடையால் காட்ட அதனைக் கண்டுவிடுகிறாள் அந்தப் பெண்.
அவமானத்தால் கூனிக்குறுகிப் போன பெண் கோபமாக என்னைத்தானே இப்ப கண் சாடையில் காட்டினனீங்கள் எதற்காக என்னைப் பார்த்து குளிக்காமல் வந்ததுகள் என்று சொன்னீங்கள் என்று கோபமாக கேட்டதும் எல்லோருமே சிலம்பரசி நின்ற பக்கம் திரும்புகின்றனர்.
(தொடரும்)