முச்சந்தி

பிரிக்ஸ் 2024 மாநாடு; இந்திய சீன உறவில் மேம்பாடு!… துருக்கியின் இணைவு சாத்தியம்?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

சர்வதேச பொருளாதாரத்தில் மாற்று அணியாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிக்ஸ்(BRICS) அமைப்பின் வருடாந்த மாநாடு ரஷ்யாவின் தலைமையில் அக்டோபர் 22 Kazan நகரில்
பிரிக்ஸ் மாநாடு இடம்பெற்றது.
பிரிக்ஸ் BRICS உச்சிமாநாட்டில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் தற்போது உள்ள பணபரிவர்தனைக்கு ஒரு மாற்று திட்டம் தேவை என்றும் அது பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் முன்னெடுத்து செல்லப்படும் என்றும் முன்மொழிந்துள்ளார்.
மேலும் சில நாடுகள் டாலரை ஒரு பொருளாதார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் swift பெமென்ட் முறைக்கு மாற்றாக பிரிக்ஸ் தனது வலுவான பணபரிவர்தனை கொண்டுவரப்படும் என்றார். தற்போது சீனா மற்றும் ரஷ்யா தங்களின் வர்த்தகத்தை 95% யுவான் மற்றும் ரூபிள் வழியே நடக்கிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இம்மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும், இஸ்ரேல் மற்றும் காசா இடையே உள்ள மோதல்கள் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என்று இந்தியா பிரதமர் மோடி அவர்கள் வற்புறுத்தியுள்ளார்.
பிரிக்ஸில் இலங்கை இணையுமா ?

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவின் தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு பயணித்தது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு பதிலாக பிரிக்ஸ் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உரை நிகழ்த்தினார்.
இலங்கையை பிரிக்ஸ் அமைப்பில் இணைப்பதற்கான விண்ணப்ப நடைமுறைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வெளிப்படுத்தியுள்ள அக்கறை தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நாடுகள் இணைய ஆர்வம்:
கடந்தமுறை பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒன்பது நாடுகளை கொண்டு விரிவடைந்தது தற்போது மேலும் சில நாடுகள் இதில் இணைய ஆர்வம் காட்டியுள்ளனர்.
நேட்டோ அமைப்புடன் தொடர்புடைய துருக்கி பிரிக்ஸில் இணைவதற்கு ஆர்வமாக இருப்பது மேற்குலகத்தினரால் உன்னிப்பாக கண்காணிக்கபடுகிறது. வெனிசுலா நாட்டை பிரேசிலும், பாகிஸ்தானை நாட்டை இந்தியாவும் இதில் இணைவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
அதிக மசகு எண்ணெய் வளம் கொண்ட வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் இதில் இணைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர் . குறிப்பாக அல்ஜீரியா பிரிக்ஸ் வங்கி மூலம் பயன்பெறுவதற்கு முயல்வதாக தெரிகிறது. மேலும் சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்த முயல்கிறது.
இக்கூட்டத்தின் முடிவில் ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் தனிமை படுத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது. மாறாக பல நாடுகள் இந்த அமைப்பின் மூலம் வர்த்தக ரீதியாகவும் , அதிகார பகிர்வாகவும், de-dollarization போன்றவை என்று பல்வேறு கண்ணோட்டத்தில் அணுகுகின்றனர்.
2025ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு
நடப்பு வருடம் 2024 ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு கசன் நகரில் (ரஷ்யா) நடந்து முடிந்த நிலையில் அடுத்த வருடம் 2025 ல் பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலில் வைத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் உச்சி மாநாடு சுழற்சி முறையில் வெவ்வேறு நாடுகளில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் அமைப்பில் பாக்கிஸ்தான் இடம்பெறுமா?
வலிமையான மற்றும் வலுவான பொருளாதார முன்னேற்ற பாதையில் பாகிஸ்தான் இணைய வேண்டும் என்றே முனைப்புடன் உள்ளது. ஆனால் அண்டை நாடான இந்தியாவிடம் நல்லுறவுடன் இல்லாமை, தலைவிரித்தாடும் தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் போன்றவற்றை கொண்டுள்ள பாகிஸ்தானை இந்தியா ஆதரிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தற்போது வரை பாக்கிஸ்தான் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறவில்லை.
பிரிக்ஸ் பணப்பரிவர்த்தனை முறை (BRICS Pay)
கடந்த உச்சி மாநாட்டில் அதற்கான திட்டம் பற்றி பேசினாலும் கசான் பிரிக்ஸ் 2024 ல் அதற்கான முன்னோட்டம் அதிகமாகவே தென்படுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பணப்பரிவர்த்தனை முறையில் உலகளவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்தியாவும், ரஷ்யா மற்றும் சீனாவும் இணைந்து இதை நடைமுறை கொண்டுவருவதில் அதிக கவனம் கொண்டுள்ளனர்.
காரணம் அமெரிக்கா டாலரின் ஆதிக்கம் மற்றும் ஏகபோகமாக செயல்படும் மேற்கத்திய நாடுகளின் வர்த்தக கொள்கையை மட்டுப்படுத்த கொண்டுவர தீர்மானித்துள்ளனர் என்றே கருதலாம். 2024 ல் BRICS Pay இன்னும் முழுமை அடையவில்லை அல்லது நடைமுறை படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
சீன இந்திய பிரதமர் சந்திப்பு
பிரிக்ஸ் மாநாடு கசான் நகரில் தொடங்குவதற்கு முன்பே இந்தியா சீனா எல்லையில் இரண்டு வருடங்களாக நீடித்து வந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் முடித்துவைக்கப்பட்டது. 2020க்கு முன்பு எப்படி இருந்ததோ அதே இடத்திற்கு பின் செல்ல சீனா ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
5 வருடங்களிற்கு பிறகு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஹி ஜின்பிங் இருவரும் இம்மாநாட்டில் நேரடியாக சந்தித்து கொண்டனர். பின்பு மோடி அவர்கள் இருதரப்பும் மரியாதை, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் துருக்கி
கசான் பிரிக்ஸ் உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன்பே துருக்கி பிரிக்ஸ் அமைப்பில் சேர அந்நாட்டு அதிபர் எர்டோகன் அவர்கள் விண்ணப்பித்திருந்தார் ஆனால் அவர் முயற்சி இம்முறை தோல்வியில் முடிந்ததாகவே பார்க்கப்பட்டது.
அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை நிபுணரான சினான் உல்ஜென் துருக்கி பிரிக்ஸில் சேருவதை இந்தியா தடுக்கிறது என்றும், காரணம் அங்காரா பாகிஸ்தானிடம் நல்லுறவுடன் இருப்பதே கரணம் என்று குற்றம் சாற்றியிருந்தார்.
மேலும் துருக்கி மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான NATOல் இருப்பதனால், பிரிக்ஸில் துருக்கி இணைவதை மேற்கத்திய நாடுகளும் விரும்பவில்லை. துருக்கி ஒரே நேரத்தில் நேட்டோவிலும் பிரிக்ஸிலும் இருக்கும் ஒரே நாடு என்று தனது இருப்பை உயர்த்தி காட்ட எர்டோகன் முயன்றுவருகிறார் எனினும் பிரிக்ஸில் துருக்கி சேருமா சேராதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பிரிக்ஸ் கரன்சி
பிரிக்ஸ் கரன்சி அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளதா என்று கேட்டால் வரவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் இது தான் பிரிக்ஸ் கரன்சி என்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. de-dollarization எனும் கூற்றுப்படி பிரிக்ஸ் கரன்சி டாலரை வீழ்த்த முடியுமா என்று கேட்டால் கடினமே. காரணம் மசகு எண்ணெய், தங்கம் போன்றவை இன்னும் டாலரின் பயன்பாட்டின் மூலமே வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதுபோன்று மாற்று கரன்சியோ அல்லது மாற்று பணப்பரிவர்த்தனை வந்தால் டாலர்க்கு எதிராக பரவலாக்கப்படும் (decentralized) என்று துறை சார்ந்த வல்லுனர்களின் கூற்றாக உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட புதிய வளர்ச்சி வங்கியை மேலும் வலுப்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் சட்டவிரோத பண பரிமாற்றம், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி, போதைப்பொருள் கடத்தல், ஊழல், தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றை தடுப்பதற்கு அணைத்து உறுப்பு நாட்டு தலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டுள்ளனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகள் உறுப்பினராக விருப்பம் தெரிவித்து வருகின்றனர் அதுபோல பிரிக்ஸ் அமைப்பு வேகமாக விரிவடைந்தும் வருகின்றது. இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் இந்தமைப்பு மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோவிற்கு எதிராக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.