அநுர அரசில் 25 அமைச்சர்களும் எமது கட்சி எம்.பி.க்கள் மட்டுமே; வேறு எவருக்கும் இடம் கிடையாது
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் பதவியை வகிப்பார்கள். அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதைவிட வேறு எவரும் எமது கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கோ நாம் தயாரில்லை என பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமர சூரியதலைமையில் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள், மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இங்கு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் ஹரிணி மேலும் பேசுகையில்,
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக பதவி ஏற்றதன் பின்னர் பல வருட காலமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்ட வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுள்ளது.
மற்றும் யாழ்ப்பாணம் பலாலி வயாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் பல வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .அது மட்டுமின்றி மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
மேலும், தற்பொழுது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தாம் திசைகாட்டி சின்னத்துடன் இணைந்து பயணிக்க இருப்பதாகவும், தம்மை பாராளுமன்றம் அனுப்புவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து வரும் நிலையில் அவர்களும் இவ்வாறு கூறி வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் பதவியை வகிப்பார்கள். அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதைவிட வேறு எவரும் எமது கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கோ நாம் தயாரில்லை என அவர்களுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி வட மாகாணத்திலும் சரி இலங்கையில் எப்பாகத்திலும் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளில் இருந்தே இதனைக் கொண்டு வந்து எமது பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தையே அழித்து வருகின்றார். எமது அரசாங்கத்தில் இவற்றுக்கெல்லாம் ஓர் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.