சமஷ்டியை நோக்கி செல்ல அரசு முயற்சி அநுரவின் ஆட்சியை தோற்கடிக்க வேண்டும்
நாட்டை சமஷ்டி நோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் இதனால் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்த வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தமது மதத்தை காட்டிக்கொடுக்க இடமளித்து விட்டதாக அந்தக் கட்சிக்கு வாக்களித்த பலரும் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தனது விஞ்ஞாபனத்தில் 2015 இல் வரையப்பட்ட அரசியலமைப்பை செயற்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த அரசியலமைப்பு வரைபில் மதச்சார்பற்ற நாடு, மாகாணங்களுக்கு ஏகபோக அதிகாரத்தை வழங்கல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் வடக்கு, கிழக்கை ஒரு அலகாக பார்க்கவும், மாகாண எல்லை நிர்ணயத்தை அந்தந்த மக்களால் தீர்மானிக்கக்கூடிய வகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை செயற்படுத்தினாலும் மீண்டும் பாராளுமன்றத்தினால் அதனை மாற்றவே முடியாது போய்விடும். அதனூடாக நாடு சமஷ்டி நாடாக மாறிவிடும்.
இதற்கு நாங்கள் இடமளிக்க வேண்டுமா? இதற்கு இடமளிக்காது திசைகாட்டியை பலவீனப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் நாட்டை சமஷ்டியாக்க இடமளிக்க மாட்டோம். பல்வேறு தியாகங்களை செய்து மீட்டெடுத்த நாட்டை டயஸ்போராக்களின் எண்ணங்களை நிறைவேற்ற இடமளிக்க கூடாது.
இவர்கள் அதிகாரத்தை பெற்றது ஏன் என்றால் தமிழ் டயஸ்போராக்கள் மற்றும் பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து நாட்டை பிளவுப்படுத்தும் சூழ்ச்சிகளே நடக்கின்றன. இதனால் அதற்கு இடமளிக்காது திசைக்காட்டியின் வாக்குகளை குறைக்க வேண்டும் என்றார்.