சுமந்திரனை அநுர நிராகரிக்காதது ஏன்?; வெளிவிவகார அமைச்சராக நியமிக்க திட்டமா?
சுமந்திரனை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவுள்ளதாக உதய கம்மன்பில வெளியிட்ட தகவலை ஜனாதிபதி இதுவரை நிராகரிக்காமையினால் அந்தக் கருத்தை உண்மையென நம்புவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவுள்ளதாக அண்மையில் உதய கம்மன்பில கூறியிருந்தார். ஆனால் அந்தக் கருத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரை நிராகரிக்கவில்லை. இதனால் அதனை நம்பவேண்டியுள்ளது. தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவே எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் மறை கரமாகும். பிரபாகரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். பாராளுமன்றத்திற்கு வர முன்னர் பிரபாகரனுக்கு முன்னாலேயே இவர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர். இந்த நாட்டை சமஷ்டியாக்குவதும் வடக்கை தனியாக பிரிப்பதுமே இவர்களின் முதலாவது நோக்கமாகும். இதனால் இவ்வாறானவர்களை அரசாங்கத்தில் இணைத்தால் என்னவாகும்.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தமிழ் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பர். இப்போதே இரகசியமாக கூட்டணி அமைத்திருக்காலம். இதற்காக தமிழ் அரசியல்வாதிகளின் உதவிகளுடன் வந்திருக்கலாம் என்றார்.