சண்டை, சந்தேகம் கொண்ட நாடா? சம உரிமை கொண்ட நாடா? தேவை?
ஒற்றுமைப்பட்ட சமுகமாக இலங்கையைக்கட்டியெழுப்ப அனைவரும் திசைகாட்டியுடன் ஒன்றிணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக அழைப்பு விடுத்தார்.
அம்பாறை நகரில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிர சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயேஇந்த அழைப்பை விடுத்த ஜனாதிபதி அநுர குமார தொடர்ந்து உரையாற்றுகையில்,
நீங்கள் செப்டம்பர் 21 ஆம் திகதி தீர்க்கமான முடிவொன்றை எடுத்தீர்கள். இது சாதாரணமான தீர்மானம் அல்ல. மிக முக்கியமான அரசியல் தீர்மானம்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் பார்த்தீர்களா? 46 வருடங்களுக்குப் பின்னர்தான் அரசாங்க வீட்டைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் என்னவெல்லாமோ நடக்கும் என்று பொய் சொன்னார்கள். அது எதுவும் நடக்கவில்லை.
இப்போது பொதுத் தேர்தல் வந்திருக்கிறது.சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ரணிலும் சஜித்தும் கிழக்கிற்குத்தானே அடிக்கடி வந்தார்கள்.இப்போது வந்தார்களா? கூட்டம் நடத்தினார்களா? இங்கு வந்து பேசினார்களா?கொழும்பில் இருந்துகொண்டு ஊடக சந்திப்புத்தான் நடத்துகிறார்கள். அதற்கு ஒரு மேசை, பெனர், மைக் போதும்.
3 மாதம் கூட இந்த அரசாங்கம் நின்று பிடிக்காது என்கிறார்கள். அப்படியென்றால் ஆட்சியை நாங்கள் பொறுப்பெடுத்திருக்க மாட்டோம்.ஆனால், உண்மை நிலவரம் என்ன?ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட, பொதுத் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்க இருக்கிறார்கள்.அரசாங்கத்தின் மீதான மக்களது நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த தேர்தலை விட, இம்முறை முஸ்லிம் மக்கள் அதிகளவில் திசைகாட்டிக்கு வாக்களிக்க இருக்கிறார்கள். தமிழர்களும் அதிகளவு வாக்களிக்க இருக்கிறார்கள்.இதுவரை, முஸ்லிம் மக்கள், முஸ்லிம் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சிங்கள மக்கள், சிங்களத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.இப்போது எல்லோருக்குமான தலைவர்களை அவர்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
மக்கள் மத்தியில் கலாசாரம், மொழி, மதம் சார்ந்து மட்டுமல்ல
அரசியல் தெரிவிலும் வேறுபாடு இருந்து வந்தது.இந்த நாட்டில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகித்து வந்தது. இப்படி ஒருவர் மற்றவரை சந்தேகித்துக் கொண்டிருந்தால், இந்த நாட்டை எப்படி முன்னேற்றுவது?பிரிந்தவர்களாக இல்லாமல், ஒற்றுமைப்பட்ட இலங்கையராக நாம் வெளிவர வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி ஒரு மாகாணத்திற்கு மட்டும் உரியதல்ல. வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் நாடு தழுவி, ஒரே கட்சியாகவே நாங்கள் மக்களைச் சென்றடைந்தோம்.மற்றவர்கள் அந்தந்தப் பிரதேசத்தின் ஆட்களைப் போல் குறுகி நடந்துகொண்டார்கள்.
சண்டை, சந்தேகம் கொண்ட நாடா?சம உரிமை கொண்ட நாடா?எது இங்கு தேவை? நம் மக்களிடையே சமத்துவத்தைக் கட்டியெழுப்போம்.எங்களை எதிர்த்து அரசியல் செய்வோரின் நிலைப்பாடு எப்படிப்பட்டது?அவர்கள் எங்களது கிராமங்களை தொடர்ந்தும் வறுமையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் அரசியல் செய்யலாம்.
நாம் எப்படிச் சிந்திக்கிறோம்?கிராமிய மக்களது வறுமையை ஒழிப்போம்.விவசாயத்தைக் கட்டியெழுப்புவோம்.இப்போது விவசாயிகளின் வீடுகளில் நெல் இருக்கிறதா? இல்லை. எல்லோரும் விற்றுவிட்டார்கள்.அடுத்த போகத்தில், சிறந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யவுள்ளோம். நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நல்ல விலைக்கு வாங்குவோம்.இப்போது அதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்.
அதேவேளை, கூட்டுறவுச் சங்கம், சதோச நிறுவனம் மூலம் மக்களுக்கு நியாய விலையில் அரிசியை விற்போம்.
இதற்காக சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்துவோம்.பாலுற்பத்தியை அதிகரிப்போம். பால் கொள்வனவு நிலையங்களை அதிகரிப்போம். உல்லாசப் பயணத் துறையை வளர்ப்போம்.
இந்த நாட்டை இதற்கு முன் ஆண்ட அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்?வறுமையும் கடன் சுமையும் மிக்க நாடாக மாற்றினார்கள்.ஆனால், நாங்கள் இந்த நாட்டை சரியான முறையில் கட்டியெழுப்புவோம்.எங்கள் வாழ்க்கை முழுவதும் இதைத்தானே கனவு கண்டு வந்திருக்கிறோம்.இப்போது அதற்கு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.இதை நாங்கள் செய்வோம்.
மக்களே, உங்களது நம்பிக்கையைப் பாதுகாப்போம்.
அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளோம். பாராளுமன்றம் , மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் என்று, அடுத்தடுத்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு உதவி செய்வோம்.இப்போது பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.சக்திமிக்க பாராளுமன்றம் ஒன்றை உருவாக்குவோம்.25 பேரைக் கொண்ட விஞ்ஞான பூர்வமான அமைச்சரவையொன்றை உருவாக்குவோம்.தரமான, ஆற்றல் மிக்க அமைச்சரவையை உருவாக்குவோம் என்றார்.