கந்தசஷ்டியின் ஆறாம் நாள் வழிபாடு நாளை!
கந்தசஷ்டி விழாவின் மிக முக்கியமான நாள், ஆறாவது நாளான சஷ்டி தினம் தான்.
இந்த நாளில் தான் முருகப் பெருமான், சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.
கந்தசஷ்டி விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் இந்த ஆண்டு நவம்பர் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வருகிறது.
பொதுவாக திருச்செந்தூர் தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரத்தை கணக்கில் கொண்டே, கந்தசஷ்டியின் ஆறாவது நாள் வழிபாடும், விரதமும் கடைபிடிக்கப்படும்.
கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முழு நேரமும் உணவு சாப்பிடாமல் உபவாசமாக இருக்க வேண்டும்.
முடிந்தவர்கள் உபவாசமாக இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
ஆறாம் நாளில் காலையில் ஷட்கோணம் தீபம் ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.
ச,ர,வ,ண,ப,வ என்ற ஆறு எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும். காலையில் நைவேத்தியம் படைக்காமல், மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
முருகப் பெருமானின் படத்திற்கு பூக்கள் போட்டு வழிபட மனதார வழிபட வேண்டும்.
ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு கந்தசஷ்டி விரதம் இருந்த அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். குளித்து முடித்து விட்டு, மீண்டும் 6 தீபங்களையும் ஏற்றி, பூஜை செய்து வழிபட வேண்டும்.
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு தான் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முருகப் பெருமானுக்கு பால், பழம் அல்லது 6 வகையான சாதங்கள் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் ஒரே சாதமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
காலை 6 மணி முதல் 7 மணி வரைமாலை 04.30 மணிக்கு பிறகு சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு நைவேத்தியமாக படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.
முருக பக்தர்கள் பெருபாலானவர்கள் அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது வழக்கம் என்பதால் சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை அவர்களுக்கு சாப்பிடக் கொடுப்பதால் நமக்கு பல கோடி புண்ணியம் வந்து சேரும்.