டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள்: பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது.
இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்வது, மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல வருட சட்ட மற்றும் மனிதாபிமான அழுத்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்படி சலுகை அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதன் மூலம், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் துணையில்லாத ஆண்களின் குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும்.
எவ்வாறெனினும், குற்றவியல் தண்டனை பெற்றதாகக் கூறப்படும் மூன்று தமிழர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைக்கான பணிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் இது தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை “நீதிக்கான நீண்ட போரில்” “மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று விவரித்தனர்.