பாராளுமன்றத்திற்கு ஊழல்,மோசடி பேர்வழிகளைத் அனுப்புவதை தவிர்ப்பது மக்களின் பொறுப்பு
நாட்டுக்கான கொள்கை உருவாக்கம்,சட்ட உருவாக்கம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய தேசமொன்றுக்கான பிரதானமான செயல்பாடுகள் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கு தகுதியான பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டியது மக்களின் கடமையும் பொறுப்புமாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மற்றும் பாணந்துறை தேர்தல் தொகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய மேலும் பேசுகையில்,
மக்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் பிரதிநதிகள் மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக இருத்தல் வேண்டும்.நாட்டின் கொள்கை உருவாக்கம், சட்ட உருவாக்கம் மற்றும் நிதி பரிபாலனம் ஆகிய பிரதானமான மூன்று விடயங்களும் உருவாக்கம் பெறும் இடமாக பாராளுமன்றம் விளங்குகின்றது. இந்த மூன்று விடயங்களுக்கும் மதிப்பளிப்பவர்களையே மக்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.குறைந்தது ஊழல் மற்றும் மோசடி பேர்வழிகளைத் தவிர்த்தல் வேண்டும்.இருந்த 225 பேர் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும்.இவர்கள் மக்களின் வாக்குகளால்தான் பாராளுமன்றம் போனார்கள்.எமது அரசியல் கலாசாரத்தில் திருடர்களையும் பாராளுமன்றம் அனுப்பும் நிலைதான் இருந்தது.
மக்களுக்காக சேவையாற்றுபவர்களை தெரிவு செய்வதற்கு குறைந்தது அவர்கள் கொள்கைக்கு மதிப்பளிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.சட்டத்தை உருவாக்குபவர் சட்டத்துக்கு மதிப்பளிப்பவராக இருத்தல் வேண்டும்.இவ்வாறு இல்லாதவருக்கு சட்டத்தை உருவாக்க பொறுப்புக் கொடுக்க முடியாது.ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு நாட்டின் நிதி பரிபாலனத்தை வழங்க முடியாது என்றார்.