முச்சந்தி

பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவது நாட்டில் ஜனநாயகத்தை இல்லாமல் செய்து விடும்

பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவோம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் ஜனநாயகம் இல்லாமல் போகும் அறிகுறியாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

முறைமை மாற்றம் தேவை என்பதற்காக மக்கள் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தார்கள். நாம் விமர்சிக்கவோ காலால் இழுக்கவோ மாட்டோம். காலஅவகாசம் வழங்குவோம். ஆனால் அவர்கள் ஒரு மாத காலத்தில் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களையே
எடுதுள்ளனர்.

நாட்டை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு இணங்க செயல்பட வேண்டும்.அரசாங்கத்திற்கு வருமானம் வருவதைக் காட்டினால்தான் ஐ.எம்.எப். நிதி ஒதுக்கீடு செய்யும். வருமான ஏற்பட வேண்டுமானால் வரி அதிகரிக்கப்பட வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ அந்த தீர்மாணத்திற்கு செல்ல வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் 14 நாடுகளுடன் பேசி மூன்று வருடங்களுக்கு கடனை செலுத்தாமல் இருக்க இணக்கப்பாட்டிற்கு வந்தார். இந்த இணக்கப்பாட்டை தற்போதைய ஜனாதிபதி செயல்படுத்துவார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. 3ஆவது தவணை பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் அன்றாட பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் போது வரி அதிகரிப்பினால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். நாம் வந்தால் வரிகளை குறைப்போம் என அநுர குமார தெரிவித்தார். இன்று பருப்பு, டின்மீன்களின் வரிகள் கூடியுள்ளன. அவர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்றில் வரி அதிகரிப்பு செய்ய வேண்டும். அல்லது பணம் அச்சிட வேண்டும். பாஸ்போட் வரிசைக்கும் இன்னும் தீர்வில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் இருக்கிற நாட்டில் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது அவசியம். அனுபவம் இல்லாவிட்டால் இந்த நாட்டை கொண்டு செல்ல முடியாது. ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த பிறகுதான் அதன் பாரதூரத்தன்மையை புரிந்து கொள்கின்றார். எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்ற தன்மையை உனர்வார்.
எதிர் கட்சியில் இருக்கும் போது தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வது சுலபமாக இருக்கும்.

பாராளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவோம் என ஜனாதிபதி அநுர குமார கூறித்திரிகிறார். அப்படியென்றால் கட்சி அரசியல் தேவையில்லை. ஒரு கட்சி ஆட்சி என்பது ஜனநாயகம் இல்லாமல் போகும். ஆட்சியாளர்களுக்கு தேவையான விதத்தில் நாட்டை கொண்டு செல்ல முடியும். நாட்டிற்கு பாதகமான விடயங்கள் நடக்கும் போது குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலை ஏற்படும். பழக்கமில்லாத அனுபவமில்லாத யாராலும் நாட்டை ஆளமுடியாது.

திசைகாட்டியின் பட்டியலில் உள்ளவர்களை பார்த்தால் பெரும்பாலானவர்கள் எவருக்கும் தெரியாத அறிமுகம் இல்லாதவர்களும், குறைந்தபட்சம் பிரதேச சபையிலாவது உறுப்பினர்களாக இருந்த அனுபவம் இல்லாதவர்கள். பாராளுமன்றத்தில் சமநிலை அற்ற தன்மை ஏற்படும். எனவே பலமான எதிர் கட்சி தேவை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.