சிறுவனின் வயிற்றுக்குள் இருந்த 65 பொருட்கள்
பேட்டரி, செயின், ப்ளேட் போன்ற 65 பொருட்களை சாப்பிட்ட உத்தரப் பிரதேச சிறுவன் குடல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஹத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயதான ஆதித்யாவுக்கு கடந்த மாதம் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சி.டி.ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறுவனின் மூக்கில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுவனின் மூக்கிலிருந்த அடைப்பு அகற்றப்பட்டுள்ளது.
அதன்பின் கடந்த மாதம் 26 ஆம் திகதி அவனுக்கு திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்த்ததில் அவனது வயிற்றில் 19 பொருட்கள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவர் மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் வயிற்றில் 42 பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மறுபடியும் அவர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது பேட்டரி, செயின், ஸ்க்ரூ, ப்ளேட் துண்டுகள் என 65 பொருட்கள் வயிற்றில் சிக்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அப் பொருட்களை அகற்றினர்.
இப் பொருட்கள் நீண்ட காலமாக ஆதித்யாவின் வயிற்றில் இருந்ததால், அவனது குடல் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 28 ஆம் திகதி ஆதித்யா உயிரிழந்துள்ளான்.