பாண் வாங்கச் சென்ற ஏழைத் தொழிலாளி; கோடீஸ்வரராக வீடு திரும்பவைத்த லொட்டரி
பாண் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற பிரித்தானியர் ஒருவர், கோடீஸ்வரராக வீடு திரும்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் Canterbury என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் லூக் ஹாரிஸ் (Luke Harris, 34) தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறார்.
புதன்கிழமையன்று, இரவு உணவின்போது மறுநாள் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்புவதற்கு பாண் இல்லை என்பதை அறிந்த லூக், வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு பாண் வாங்கச் சென்றிருக்கிறார்.
பாண் வாங்கிவிட்டு தற்செயலாக scratchcard வகை லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிய லூக் தன் காருக்குத் திரும்பி அந்த லொட்டரியை சோதிக்க, அதில் தனக்கு பரிசு விழுந்துள்ளது அவருக்குத் தெரியவந்துள்ளது.
10 பவுண்டுகள் கிடைத்தாலே தான் சந்தோஷப்படும் மனநிலை கொண்டவன் என்று கூறும் லூக், கடைக்காரரிடம் சென்று தனது பரிசுத் தொகையை உறுதி செய்துகொண்டுள்ளார்.
அவருக்கு லொட்டரியில் கிடைத்த பரிசுத்தொகை, ஒரு மில்லியன் பவுண்டுகள்!
உடனடியாக வீட்டுக்குத் திரும்பிய லூக், தனது மனைவியாகிய ஆலிசன் கோக்கிடம் (Alison Coke, 34) விடயத்தைச் சொல்ல, சரி, நாளை நாம் வேலைக்குச் செல்லவேண்டும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும்.
ஆகவே, அமைதியாக வேலையைப் பார்ப்போம் என முடிவு செய்த லூக், ஆலிசன் தம்பதியர், வார இறுதியில்தான் தங்களுக்கு பரிசு விழுந்ததையே கொண்டாடியிருக்கிறார்கள்.
இப்போதைக்கு தன் வேலையை விட முடிவு செய்துள்ள லூக், மீண்டும் படிப்பைத் தொடரவும், முதலீடுகள் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.