பதற்றமான சூழலில் குண்டுவீச்சு விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பிய அமெரிக்கா!
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்கு குண்டுவீச்சு விமானம் உட்பட ஏராளமான ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வரும் தாக்குதல் நடவடிக்கையினால் வடக்கு காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானின் கோபத்தை தூண்டியுள்ளது.
இதனால் அந்நாட்டின் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதுடன், ஆதரவாக உள்ள அமெரிக்காவுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்தார்.
ஈரானில் உள்ள 20 ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்தது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. அதில் பி-52 என்ற குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும்.
இதன்மூலம் ஈரான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.