கதைகள்

அம்மணக்கட்டை….கதை… சோலச்சி

சோலச்சி… solachysolachy@gmail.com 

காற்று தீண்டும் ஓசை கூட காதில் விழவில்லை. காற்று நடமாடுகிறதா… இல்லையா… என்ற சந்தேகம் கூட யாருக்கும் எழவில்லை. நிலவு நெடுநேரம் வரை தனியாகவே உலாவியது. நிலவின் கண்களுக்கு வீட்டுத் திண்ணைகளில் யாரும் உருண்டு படுப்பது கூட தெரியவில்லை. எந்த இரைச்சலும் சலசலப்பும் இல்லாமல் கண்களை இறுக மூடி இருந்தது மேலையூர் கிராமம்.

கோயில் தெருவில் குடியிருக்கும் முருகையனின் வழக்கமாக ஒலிக்கும் குறட்டைச் சத்தம் அன்றிரவு கேட்கவேயில்லை. இரவில் ஊர் சுற்றி திரியும் ஆந்தைகளும் ஆக்காட்டிப் பறவைகளும் அமைதியாகவே படுத்துறங்கின. மனிதர்கள் மட்டுமல்ல… நாய்கள், கோழிகள், ஆடு, மாடுகள் என அனைத்தும் நிறைந்ததுதான் மேலையூர் கிராமம். மனிதர்கள்தான் தன்னை மறந்து தூங்குகிறார்கள் என்றால்….. லொள்…லொள்….னு ராத்திரி முழுவதும் குரைத்துக் கொண்டே திரியும் நாய்களின் வாய்களைக் கட்டியது யார்..? மரத்திற்கும் தூக்கம் வருமோ…..! ஏதோ சத்தியக் கட்டுப்பாட்டில் இருப்பது போல் இலைகளும் சிலையாகிவிட்டனவோ… மேகக் கூட்டங்களுக்குள் சிக்குவதும் அதிலிருந்து மீண்டு வருவதும் மேலையூர் கிராமத்தை எட்டிப் பார்ப்பதுமாக இருந்தது வானத்து நிலா.

என்றைக்குமில்லாத இந்த ஆழ்ந்த உறக்கம் இரவு முழுவதும் நீடிக்கவில்லை.

சின்னக்கருப்பன் வீட்டு வெள்ளைப் பொறி சேவல் தன் இறக்கைகளை படபடவ வேகமாய் அடித்துக்கொண்டு கூவியபோது மேலத்தெரு கன்னுச்சாமி வீட்டு செங்கலனிச்சேவலும் பதிலுக்கு தன் குரலை ஓங்கி க்ங்குறொக்கோ…..கோ என அழுத்தமாய் கூவிய போதுதான் ஊரின் உறக்கம் மெல்லமெல்லத் தெளிய ஆரம்பித்தது.

சின்னக்கருப்பன் படுத்திருந்த கட்டில் அருகே டார்ச் லைட்டை அடித்தபடி கீழச்செவரில் மாட்டி இருக்கும் சுவர் கடிகாரத்தை பார்த்தார். மணி முள் மூன்று மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.

கட்டிலிலிருந்து எழுந்து வேட்டியை அவிழ்த்து உதறி கட்டிக் கொண்டார்…. வ்வா…….வ் என வாயைக் கிழித்துக் கொண்டு கொட்டாவி வெளியேறியது. “இந்தா….புள்ள வள்ளி. மாட்டுக்கு தண்ணியக் காமிச்சு எரைய அள்ளி போடுறேன். எந்திரில மூணு மணியாப்….போகுது. பால் வண்டிக்காரன் வந்துருவான்ல..” சொல்லிக்கொண்டே வாசல் கதவை திறந்தபொழுது தான் ஒன்றிரண்டு நாய்கள் குரைக்க தொடங்கி இருந்தன.
“ம்… என்னன்னே தெரியலங்க. நல்லா அசந்து தொலஞ்சுட்டேன். மூதேவி போட்டு இந்த அமுக்கா அமுக்கறது..” எழுந்து உட்கார்ந்தவள் கைகளை மேலே தூக்கி உடலை வலது இடதாய் அசைத்து சோம்பல் முறித்துக் கொண்டாள்.

“மேல ஒரு மீனக் கூடக் காணோம். மானம் நல்லா வெளி வாங்கி கெடக்குது…” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மாட்டு தொழுவம் பக்கமாய் சென்றபோதுதான் மேலையூர் கிராமத்தின் இருளை கிழித்து அபாயச் சங்கை ஒழித்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று ஊருக்குள் நுழைந்து சின்னக்கருப்பன் வாசலை கடந்து சென்றது.

தொழுவத்தில் இருந்தபடியே வீதியை உற்று நோக்கினார். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பக்கத்தில் இருபத்தஞ்சு வயசு மணிமாறன் உட்கார்ந்திருந்தது அவருக்கு நன்றாகவே தெரிந்தது. அவனது கண்கள் சிவந்து கன்னம் வீங்கி இருந்தது. ஊருக்கு வெளியே ஒருகிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால தோப்புக்குள் குடியிருக்கும் கூழுக்கார் வீட்டுப் பக்கம் ஆம்புலன்ஸ் செல்லும் போது அதன் அபாய சத்தம் நிறுத்தப்பட்டு அலறல் சத்தம் கேட்டது.

கூழுக்கார் வீட்ல அப்படி போற அளவுக்கு யாருக்கும் வயசு ஆகலையே. முந்தா நாளுதானே வீட்ல உள்ளவங்களோட குத்தாலத்துக்கு போயிட்டு வர்றதா சொன்னாப்ல. ஆம்புலன்ஸ்ல பாஸ்கரோட மயன் எதுக்கு ஒக்காந்துருக்கான்…. என்ன ஏதுன்னு புடிபடலயே…. மனசு அளவுக்கு அதிகமாகவே படபடத்தது. தொட்டியில தண்ணி காமிச்சுட்டு மாட்டை வேகமாய் மொளக்குச்சியில் கட்டினார் சின்னக்கருப்பன்.

“வள்ளி….. மாட்டுக்கு தண்ணியக் காமிச்சுட்டேன். எரயப் போட்டு பால் பீச்சு. கூழுக்கார் வீட்டுப் பக்கம் ஒரு எட்டு போயிட்டு வந்தர்றேன்..” வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தொழுவத்திலிருந்து வெளியே வந்தார். நான்கைந்து மாருதி கார்களும் ஜீப்புகளும் ஹாரன் அடித்தபடி அதிவேகமாய் சென்றன.

“என்னங்க இம்புட்டு காரும் வண்டியுமா போகுது. என்னன்னு தெரியலையே. ஊரு சனம் ஒன்னத்தையும் காணோம். சாரக்கயித்தால கண்ணைக் கட்டிக் கிட்டு தூங்குறாகளோ… மத்தவங்கள எழுப்பி என்ன ஏதுனு யோசனை கேக்குறதுக்குள்ள வெரசா போயி தண்டிக்கிட்டு வாங்க…” வீட்டு பின் வாசலில் நின்றபடியே தனது முடியை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டாள் வள்ளி.

ஊர் பொது புறமாய் தென்னந்தோப்புக்குள் அரண்மனை போன்ற வீடுதான் பாஸ்கர் வீடு. தென்னை மரங்களும் மாமரங்களும் பலா மரங்களும் என மரங்களாலும் செடி கொடிகளாலும் பசுமை போர்த்திய பகுதி. பணத்தின் அருமை தெரிந்த பரம்பரை பணக்கார குடும்பம். அந்த ஊருக்கு எல்லாமே பாஸ்கர் வீடு தான். பாஸ்கரின் அசைவு இல்லாமல் எதுவும் நடக்காது. பாஸ்கரின் வார்த்தைக்கு மேலையூர் கிராமம் கட்டுப்பட்டு இருந்தது. ஊருக்கு மிராசுதாரராக இருந்தாலும் கூழுக்கார் வீடு என்றுதான் அழைத்து வந்தார்கள்.

பாஸ்கருக்கு எதுவும் ஆயிருக்கக் கூடாது…. என்று தனக்குள் எண்ணியவாறே நடக்க ஆரம்பித்தார் சின்னக்கருப்பன். என்றோ ஒருநாள் நடந்த நிகழ்வு சின்னக்கருப்பன் கண் முன்னே வந்து நின்றது.

ஒருமுறை கோயில் திருவிழாவில் கீழத்தெரு சின்னத்தம்பி மகன் வெள்ளைச்சாமி கோயிலுக்குள் நுழைந்ததால் அடிதடி வெட்டு குத்து வரைக்கும் கலவரம் சென்றது. சேரி சணம் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று ஒரு பிரிவினர் பல காலமாய் தடுத்து வந்ததன் விளைவு தான் வெள்ளைச்சாமியின் ஆலய நுழைவு போராட்டம்.

காவல்துறை வந்தும் பிரச்சனை தீரவில்லை. பாதுகாப்பு தர்றேன்ங்கிற பேருல திருவிழாவுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்க வரும் காவல் துறையினரை இன்று வேதனைப்பட வைத்து விட்டார்களோ என்ற ஆதங்கம் பாஸ்கரின் அப்பா சோமையாவை பாடாய்படுத்தியது. எப்படியாவது இந்த கோயில் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணினார். தன்னைத்தானே ஒருவழியாக தயார்படுத்தி சமாதானம் செய்து கொண்டார். எல்லோரும் கோயிலுக்குள் போக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.

இரு பிரிவினரும் எதிரிய எதிரே கோயில் வாசலில் அமர்ந்தனர். ஒரு பக்கம்ஸகோயிலுக்குள் நுழைய வேண்டும் என்கிற ஏக்கமும் மற்றொரு பக்கம் உள்ளே நுழைய விடக்கூடாது என்கிற கொலை வெறியும் இருப்பது அனைவரது முகத்திலும் தெளிவாய் தெரிந்தது. கோயில் வாசலில் நின்று கொண்டே பேச ஆரம்பித்தார் சோமையா.. சோமையாவின் பேச்சை உற்று நோக்கியபடி அவர் அருகில் உட்கார்ந்திருந்தான் எட்டு வயதே ஆன பாஸ்கர்.

“சாமி.. இருக்கா… இல்லையானு அதுஒரு பக்கம் குண்டும்குழியுமா ஓடிக்கிட்டு இருக்கு. சாமிங்கிற பேரச்சொல்லி நாம மக்கமனுசலா சந்தோசமா வாழனும்னுதாயா அந்தக்காலத்துல பெரியவங்க கோயில கட்டி வச்சாங்க. அதப்புருஞ்சுக்காம நீயா நானானு வெட்டிக்கிட்டு இந்நேரம் செத்துருந்தா இப்ப எந்த சாமியும் வந்து காப்பாத்திருக்காது. ஏ….அனுபவத்துல சொல்றேன்… உண்மையான சாமி நம்ம மனசு தாயா. எத்தனை பேரு இதப் புருஞ்சுக்கப் போறீகனு தெரியல. இனிமேலு பொறக்கப்போற புள்ளைகளுக்காச்சும் நல்ல வழிய காட்டுங்கனு சொல்றேன்….”

பலரும் சோமையாவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது கண்களையும் உதடுகளையும் வச்சக்கண்ணு மாறாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். அதிலும் ஒரு சிலர் அவரின் பேச்சை உதாசீனப்படுத்திக் கொண்டுதான் இருந்தனர். ஏதும் அசம்பாவிதம் நடந்து விடாமல் கூட்டத்தினரை சுற்றி காவலர்கள் ஆங்காங்கே உத்திகளைக் தாங்கியபடி நின்று கொண்டு இருந்தனர்.

“ஒங்க…பேச்ச செத்த நிறுத்துறீகளா….” சோமையாவின் பேச்சை இடைமறித்து கீழே விரித்து இருந்த துண்டை உதறியபடி எழுந்தார் சந்தானம்.

“கூழுக்கார் வீட்டுக்குனு ஒரு பண்பு இருக்கு. வழக்கம் இருக்குனா அத ஒங்க வீட்டோட வச்சுக்கங்க. அதுல கால நொழைக்க கைய நொழைக்க நாங்க வரல. இது கோயில் வெசயம். ஆண்டாண்டு காலமா கட்டிக் காப்பாத்தி வந்த வழக்கம். தலமொற தலமொறயா கீழத்தெரு காரனுக வெளியேதானே இருந்தானுங்க. இப்ப என்ன புதுசா கெளம்புறானுக. அவனுக அப்படியே இருந்தாதான் நாங்களும் நாங்களா இருப்போம். இல்லன்னா இந்த ஊரை நீங்க மட்டும் கட்டி புடிச்சுகிட்டு அவனுக கூடயே அழுங்க. நாங்க ஊரை விட்டு போறோம். அப்பத் தெரியும் எங்களோட ஆட்டம்….”

சந்தானத்தின் பேச்சு சோமையாவை சங்கடப்படுத்தினாலும் பலருக்கும் எரிச்சலை தந்தது. சந்தானத்தின் உறவினர்களே சந்தானம் பேச்சை புறந்தள்ளினர். நொழஞ்சா நொழஞ்சுட்டுப் போறான். அவனுக ஒரு பக்கம் நின்னா…. நாம ஒரு பக்கம் நின்னுக்க வேண்டியதுதானே. இதுல என்னத்த முட்டிக்கிட்டு மோதிக் கிட்டு….” என் முணுமுணுக்கும் தொடங்கினர்.

“மசுரு நரச்சு மொகர ஆட்டங்கண்டு எழுவது வயசு ஆயிருச்சு. ஆனாலும் மண்டையில மூள வேலை செய்யலையே. எத்தன காலத்துக்குத்தான் அவனுக கிட்ட சல்லுபுல்லுனே கெடக்கிறதாம்..” கூட்டம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைதியாக இருக்கச் சொல்லி கத்திக்கொண்டே இருந்தார் சோமையா. அவரின் குரல் கேட்டு கூட்டத்தில் சிலர் அமைதி காத்தனர்.

மணி பத்து ஆக போகுது. புள்ள குட்டி எல்லாம் காலங்காத்தால கஞ்சிதண்ணி குடிக்காம பட்டினியா கிடக்குது. ஆளாளுக்கு பேசுறத நுப்பாட்டுறீகளா இல்ல நீங்களாச்சு போலீசுகாரங்களாச்சுனு அப்புடியே விட்டுட்டு போயிறவா….. தொண்டைக்குழியிலிருந்து கிளம்பிய சொற்களால் கூட்டம் மேலும் அமைதி காத்தது.

கீழ் சாதி மேல் சாதி பணம் காசுனு நாமதான் அடிச்சுக்கிட்டு பிரிஞ்சு கிடக்கிறோம். எவன் செத்தாலும் இந்த மண்ணுக்குள்ளதான் போக போறோம். உடம்புல இருக்க எல்லாத்தையும் கழட்டிகிட்டுதான் புதைக்கிறோம்.. எரிக்கிறோம்… மண்ணுக்குள்ள போகும்போதும் மானத்தோட போகணும்னுதான் கொஞ்சூண்டு துணிய போட்டு மூடி வைக்கிறோம். இல்லனா வெறும் அம்மண கட்டையாதான் போவோம்….

கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டனர். வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எப்போதும் போல் உள்ளேயிருந்து சாமியும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தது.

இந்த ஊரையே தலையில தூக்கி வச்சுத்தான் எங்க அப்பாவும் ஆடுனாக. போகும்போது அவுக என்னத்த கொண்டு போனாகளாம். அந்த நெலமதான் எனக்கும் எம் புள்ளைக்கும் ஏன்… எல்லாருக்குமே அதே கெதிதான். ஒடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கணும். ஒழைக்க முடியுங்கிறவனுக்கு உருப்புடியா ஒரு வழியை காட்டணும். இப்பவாச்சும் மனசுல ஏத்தி வச்சுக்கோங்க… போகப்போற இந்த பாழாப்போன ஒடம்புக்கு பின்னாடி செத்தவன் நல்லவனா கெட்டவனானு இதுல ஒன்னுதாயா கூட வரப்போகுது….. அங்க பாருங்கய்யா… அந்த மக்கமனுச என்னய்யா பொல்லாத பாவத்த செஞ்சுப்புட்டாக…. எந்த பதிலும் பேசாமல் கூட்டத்தினர் தலையை தொங்கப் போட்டுக்கொண்டனர்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார் சோமையா. செவுட்டுப் பய காதுல சங்கெடுத்து ஊதுன கதையா ஒருசிலர் தொனத்தொனனு பேசிக் கொண்டே இருந்தனர். கூட்டத்துல இருக்கவுங்கள்ல நாலஞ்சு பேராச்சும் கேப்பாங்கள்ல.. பரவாயில்ல… அவுங்களாச்சும் கேட்கட்டும். மீண்டும் பேசத் தொடங்கினார்.

“அவுங்க நடக்குற பாதையில நாம நடக்குறது இல்லையா. அதுல என்னய்யா சாதி மண்ணாங்கட்டினு குறுக்க நின்னுகிட்டு…. பெருமூச்சுவிட்டவாறு கூட்டத்தினரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே “இங்கேருங்க…ய்யா.. எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்னு நெனைக்கிறேன். ஏம்பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஏன்னா இருங்க. இல்லனா என்னைய விட்ருங்க. நான் கிளம்பி போறேன்….”
கண்களில் கருணை பொங்க சோமையா பேசியபோது ஒட்டுமொத்த ஊரும் தலைகுனிந்து நின்றது. எழுபது வயது சந்தானம் மட்டுமே கூட்டத்திலிருந்து எழுந்து சோமையாவை கடுகடுவென பார்த்துக் கொண்டே சென்றார்.

கீழ தெருவை சேர்ந்த சின்னக்கருப்பன் மனசு பதை பதைத்தது. கூழுக்கார் வீட்ல உள்ளவங்களுக்கு எதுவும் நடந்திருக்கக் கூடாது… தன் மனதை தேற்றிக்கொண்டு நடை போட்டார்.

வாகனங்களின் சத்தமும் குழுக்கார் வீட்டு அலறல் சத்தமும் கேட்டு மேலையூர் கிராமம் விழிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் கூழுக்கார் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

நேத்து பாஸ்கர் கிட்ட போன்ல பேசுனய்யா. ரெண்டு நாள்ல வந்துருவேன். வந்ததும் மந்திரிய பார்த்து எம் மகளுக்கு பால்வாடியில் ஆயம்மா வேலைக்கு ரெடி பண்ணி தர்றதா சொன்னாப்புல. நல்ல மனுசன்யா. திடுதிப்புனு ராத்திரில சத்தம் கேட்டா என்னனு நெனைக்கிறது. என்ன ஆச்சுன்னு தெரியலையே….” நடையை கூட்டியபடி வேலுவிடம் சொன்னான் முத்து. இவர்களுடன் கீழத்தெரு சின்னக்கருப்பனும் சேர்ந்து கொண்டார்.

சின்ன கருப்பண்ணே உனக்கு ஏதாச்சும் தெரியுமா…? வேலுவின் கேள்விக்கு கொஞ்சம் நேரம் மௌனம் காத்தார் சின்னக்கருப்பன். அப்போது ஆட்களை கடந்தபடி ஆம்புலன்ஸ் திரும்பிக்கொண்டு இருந்தது. சின்னக்கருப்பன் தனது இடது கையால் நிறுத்தியதுதான் தாமதம். “நெஞ்சு வலியாம்…” என்றபடி ஆம்புலன்ஸை விருட்டன்று எடுத்தார் ஓட்டுநர்.

பாஸ்கரோட பெரியம்மா குழந்தை குட்டி இல்லாம புருசனையும் இழந்து மாயனூரில் இருந்துச்சுல. அவங்கதான் சீக்கால அவதிப்பட்டுக்கிட்டு இருக்கதா நாலஞ்சு நாளைக்கு முன்னாடி பாஸ்கர் சொன்னாப்ல. அவங்கதான் தவறிருப்பாகனு நினைக்கிறேன். அந்தம்மாவுக்கு சொந்தம்சொத்துனு பாஸ்கர விட்டா யாரு இருக்கா. அதுனால அவுக தோப்புலயே அடக்கம் பண்ணிறலாம்னு நெனச்சு கொண்டு வந்துருக்கலாம்…. சின்னக்கருப்பன் சொன்னதும் அட…. ஆம இந்த நெனப்பே இல்லாம போச்சே… வயசான ஆளுதானே.. ரொம்ப நாளு இழுத்துக்கிட்டு கெடந்தா பாக்க வைக்க யாரு இருக்கது… மற்றவர்கள் பெருமூச்சு விட்டனர்.

எல்லாருக்கும் ஒன்னுனா மொதல்ல நிக்கிற பாஸ்கரு… அவங்க பெரியம்மாவை தானாப்புல விட்ருவாப்ளயா… பாஸ்கருக்கு நல்ல மனசுங்க முத்து சொன்னதும்..

ம்….. இப்பதான் தெரியுதோ… என்றார் சின்னக்கருப்பன்.

அந்த காலத்திலேயே சொத்து பத்துன்னு வசதியா வாழ்ந்தவங்க. அவங்க வீட்ல எப்பவும் பெரிய பானைல கூழு வெந்துகிட்டே இருக்குமாம். யாரு எப்ப போனாலும் வயிறார கூழு கரச்சு குடிச்சுட்டுதான் போவாங்களாம். அதுனாலதானே கூழுக்காரு வீடுனே பேரு வந்துச்சு. இப்பனாப்புல என்ன…. யாரு வந்தாலும் சோறு போட்டுதானே பாஸ்கரும் அனுப்புறாப்புள.. தான தர்மத்துல கூழுக்கார் வீட்டை இப்பவரைக்கும் அடிச்சுக்க முடியுமா…? இன்னைக்கு எல்லாரும் ஒண்ணா இருக்கறதுக்கும் வசதி வாய்ப்போட இருக்குறதுக்கும் அவங்கதானே காரணம். பாஸ்கரையும் எந்த குத்தம் குறையும் சொல்ல முடியுமா…? சின்னக்கருப்பன் சொல்லிக்கொண்டு இருக்கும் போது நடுத்தெரு முருகேசனும் சேர்ந்து கொண்டார்.

“ஏன்ணே….அவங்க அப்பன் அப்பச்சி சேர்த்து வச்சாக. அது வச்சுக்கிட்டு ஆடுறாக. நமக்கு அப்படியா… நம்ம ஆயி அப்பன் கோமணத்த அவுத்த நேரமே சரியில்ல…” முணுமுணுத்த முருகேசனை இடைமறித்தார் சின்னக்கருப்பன்.

“ஆமாப்பா உங்க ஆயி அப்பன் அவுத்த நேரம் சரி இல்லதான்…‌ அப்பறம் எனக்கு நல்லா வந்துரும்….” கோபத்துடன் தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் தோளில் போட்டுக் கொண்டார் சின்னக்கருப்பன்.

கொஞ்ச நேரம் மௌனம் சூழ்ந்தது. பலரும் கூழுக்கார் வீட்டை நோக்கி நடந்தபடி இருந்தனர்.

வீட்ல இருந்த குருணை மருந்த சீனின்னு நெனச்சு ஓமக தின்னுருச்சுப்பா. பச்ச புள்ள அதுக்கு என்ன தெரியும். உசுருக்கு துடிச்சுக்கிட்டு இருந்த புள்ளைய டவுனு ஆசுப்பத்திரில சேத்து காப்பாத்துனது பாஸ்கர்தான். ஏம்பேத்தி உசுர காப்பாத்துன புண்ணியவான்னு உங்க அப்பா சாகுற வரைக்கும் சொல்லிக்கிட்டு இருந்தாரு. செஞ்சத மறந்துடாத முருகேசு. வெளியூர்ல போயி நாலு காசு நீ சம்பாதிக்கவும் எடுத்தெறிஞ்சு பேசாத.. சின்னக்கருப்பனின் கோபமான பேச்சு எதிரே போய்க் கொண்டு இருந்தவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

சாதி கெட்ட பயலுக கிட்ட சகவாசம் வச்சுக்கிட்டா இப்படித்தான்…. முணுமுணுத்தான் முருகேசன்.

ஆமாங்க தொரை… நீங்க சகவாசம் வச்சுக்க வேணாம் போங்க… சலிப்புடன் கூறியபடி இடது கையை நீட்டினார். முகத்தை சுளித்துக்கொண்டு நடை போட்டான் முருகேசன்.

“ஏஞ்….சாமி… எங்கள விட்டுட்டு போயிட்டீங்களே…” என்று சங்கவியின் அலறல் சத்தம் கேட்டபோது கூட்டம் தோட்டத்தை நெருங்கியது.

அப்போது கூட்டத்தை விளக்கிக் கொண்டு சபாரி கார் ஒன்று வாசலில் வந்து நின்றது. அதில் தள்ளாடியபடியே பாஸ்கரின் மாயனூர் பெரியம்மா வந்து இறங்கினாள். அவளோடு இறங்கிய பெண்கள் இருவர் அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். சின்னக்கருப்பனும் மற்றவர்களும் அவளை குருகுருவென பார்த்தனர்.

“எல்லாரையும் ஓ… நெஞ்சுல வச்சு தாங்கினியே. என்ன பெத்த ராசா நீ அள்ளி அள்ளி கொடுக்கிறது குத்தாலத்துக்கே பொறுக்காம நெஞ்சு வலி எடுக்க வச்சு சத்த நேரத்துல கொன்னுடுச்சே……..” கண்ணீர் விட்டு கதறிய பெரியம்மா பெண்களின் பிடியையும் மீறி தடுமாறி தொப்பென விழுந்தாள். நிலையை உணர முடியாத கூட்டம் நிலை தடுமாறியது. ஜப்பான் நகரங்களில் அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட அளவுக்கு அதிகமாகவே வெப்பம் சூழ்ந்து இருந்தது. என்ன இப்புடி ஆயிருச்சே….என சென்றவர்கள் அனைவருமே உருகி கொண்டு இருந்தனர். அவர்களால் வாயை திறக்க முடியவில்லை.
பாஸ்கரின் இழப்பு அந்த ஊரையே ஊமையாக்கி இருந்தது. மரணத்தை விட கொடிய நோய் வேறென்ன இருக்கப் போகிறது. மரணம் அவ்வப்போது வாழ்க்கையில் தத்துவத்தை உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை உணராமல் பலரும் இந்த வெற்று உடம்பை பணத்தாலும் பகையாலும் இன்னும் எதை எதையோ போர்த்தி ஆனந்தம் அடைகின்றனர்.

கதிரவன் மெல்ல மெல்ல இரவை விழுங்கத் தொடங்கி இருந்தது. கூட்ட நெரிசலில் பாஸ்கர் வீடு திக்கு முக்காடியது. எப்பேர்பட்ட மனுசனுக்கு இப்புடியா சாவு வரணும்…. கண் கலங்கினார் சின்னக்கருப்பன். உறைந்து போய் நின்றவர்களின் உதடுகள் பாஸ்கரின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தன. அப்போது மூக்குச்சளியால் தன் உதடுகளை நனைத்துக்கொண்டு அம்மணமாய் ஒரு குழந்தை தன் தாயின் இடுப்பில் இருந்தபடி கூட்டத்தினரை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது.

Loading

2 Comments

  1. தண்ணிய காமிச்சு- என்ற இடம் ஊரணி, குளங்கள் இருந்த காலம் எங்கள்… அப்போது தண்ணீர் குழாய்கள் இல்லாத காலம், ரெண்டாவது தெரு விளக்கு இல்லாத காலம். மூன்றாவது பஸ்கள் இல்லாத காலம், செட்டிய வீட்ல ஒன்னு ரெண்டு மகிழுந்தை பார்க்கலாம். குடிப்பதற்கு தண்ணி தேவையென்றால் மண்பானை அல்லது சருவத்தில் குளத்திற்கு போய் கொண்டு வர வேண்டும் – அதுவும் கலங்கிய நீர்- பிறகு தேத்தாங்கொட்டையில் தேய்த்து தேய்த்தோமானால் அழுக்கு கீழே தங்கிவிடும் அப்போது தான் தண்ணீர் குடிக்க முடியும்… நம்மூர் மண்வாசனை… கதையின் போக்கு கிராமத்தை அப்படியே கண் முன் காட்டி விட்டீர்கள்… வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.