இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு விரைவில் பதிலடி – ஈரானிய உச்ச தலைவர்!
தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில் தாம் ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) சபதம் மேற்கொண்டார்.
யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தெஹ்ரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணிக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் இந்த கருத்து வந்துள்ளது.
1979 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சனிக்கிழமை (02) மாணவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக ஈரானின் அரசு நடத்தும் பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
எதிரிகள் (ஈரான், அமெரிக்கா) சந்தேகத்திற்கு இடமின்றி பற்களை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள்.
உலகளாவிய ஆணவத்தை எதிர்கொள்ள ஈரான் இராணுவ, அரசியல் மற்றும் தளவாட நடவடிக்கைகளுடன் முழுமையாக தயாராக உள்ளது.
தயக்கமின்றி தீர்க்கமாக “உலகளாவிய ஆணவத்திற்கு” எதிராக ஈரானிய மக்கள் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஈரானும் இஸ்ரேலும் நீண்டகாலமாக எதிரிகளாக இருந்து வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸின் தாக்குதல்கள் மற்றும் காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்த போட்டி ஆழமடைந்தது.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்பொல்லாவின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, யூத அரசின் மீது இஸ்லாமிய குடியரசான ஈரான் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் கடந்த வாரத் தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.