தங்கம்,வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ்… விலை எவ்வளவு தெரியுமா?
இந்த அழைப்பிதழில் எழுத்துக்கள் தங்கம் அல்லது வெள்ளியால் நேர்த்தியாக பொறிக்கப்பட்டுள்ளன.
உண்மையான தங்கம், வெள்ளியால் ஆடம்பரமாக திருமண அழைப்பிதழ் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
திருமணங்கள் கொண்டாடும் விதம் ஒவ்வொரு ஊர்களை பொருத்தும் மாறுபடும். ஆனால் நாம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான பழக்கம் ஒன்று என்னவென்றால், திருமணத்திற்கு அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியுடன் அழைப்பது தான். இந்த திருமண அழைப்பிதழ் அட்டைகள் குறிப்பிடத்தக்க கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
பாரம்பரியமாக, திருமணம் அறிவிக்கப்பட்டால், முதல் அழைப்பிதழ் பொதுவாக “மஞ்சள்” நிறத்தில் அச்சிடப்படும். பெரும்பாலான குடும்பங்கள் அச்சடிக்கப்பட்ட காகித அழைப்பிதழ்களை தேர்வு செய்யும் அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் ஒரு புதுமையான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. தங்க நகை வியாபாரி ஒருவர் செழுமையான தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அட்டைகளை வடிவமைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
லாலா ரவீந்திர நாத் கன்ஹையா லால் சரஃபா கடையின் உரிமையாளரான லக்கி ஜிண்டால் தான், இந்த அழைப்பிதழை அச்சடித்துள்ளார். இவரது கடையில் தான் இந்த காஸ்ட்லியான அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் திருமணம் முடிந்தவுடன் தூக்கி வீசப்படுவது உண்டு, இதனால் அது வீணாகிறது. “அழைப்பிதழ்கள் தூக்கி எறியப்படுவதற்குப் பதிலாக நினைவுச் சின்னங்களாகப் போற்றப்பட வேண்டும் என்பதற்காக தான் நகை வியாபாரி ஒருவர் இப்படி வித்தியாசமான அட்டையை அச்சிட கொடுத்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் திருமண அழைப்பிதழ்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜிண்டால் வலியுறுத்தினார்.
ஜிண்டாலின் கடை அழகியல் மற்றும் ஆடம்பரம் இரண்டையும் இணைக்கும் நேர்த்தியான திருமண அழைப்பிதழ்களை வடிவமைக்கும் பிரபலமான கடையாகும். தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு திருமண அழைப்பிதழை வடிவமைக்க விரும்பும் தம்பதிகளுக்கு விருப்பமான தேர்வாக இந்த கடை தற்போது மாறி வருகிறது. இந்த அழைப்பிதழில் எழுத்துக்கள் தங்கம் அல்லது வெள்ளியால் நேர்த்தியாக பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் அழைப்பிதழ் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.
ஃபிரோசாபாத்தில் முதல் முறையாக, விலைமதிப்பற்ற உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட திருமண அட்டைகள் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.11 லட்சம் வரை இருக்கும். ஒவ்வொரு அட்டையும் தங்கம் மற்றும் வெள்ளியால் தரம் மற்றும் டிசைன்கள் கொண்டு பார்த்து பார்த்து துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது. திருமண சீசன் நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் இந்த ஆடம்பரமான அழைப்பிதழ்களைப் பெற ஆர்வத்துடன் ஆர்டர்கள் செய்ய தொடங்கியுள்ளன என்று ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.