தம்பியுடனான உறவைத் துண்டித்தார் மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ், ராஜ குடும்பத்துக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய தன் தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூ விடயத்தில் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
தம்பியுடனான உறவைத் துண்டித்தார் மன்னர் சார்லஸ்
ஏராளம் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை சீரழித்தவரான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அத்துடன், பருவம் எய்தாத விர்ஜினியா என்னும் (Virginia Giuffre) இளம்பெண்ணுடன் ஆண்ட்ரூ உறவு வைத்துக்கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்ட, ராஜ குடும்பம் அவமானத்தில் தலைகுனிய நேர்ந்தது.
இப்படிப்பட்ட ஒரு நபருக்கு நிதி உதவி செய்யக்கூடாது என ராஜ குடும்ப ஆலோசகர்கள் தொடர்ந்து மன்னர் சார்லசை வற்புறுத்திவந்தனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு அரசு முறைப்பயணத்தை முடித்து பிரித்தானியா திரும்பிய மன்னர் சார்லஸ், அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
ஆம், இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார் மன்னர்.
ஆண்ட்ரூ இனி மன்னருக்கு நிதி ரீதியாக சுமையாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
மன்னரின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவுக்கு, ஆண்டொன்றிற்கு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் அளவிலான நிதி வழங்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.