மகிந்தவுக்கு ஆபத்தென்றால் அநுரவும் அரசுமே பொறுப்பு
மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு சிறிதளவேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால் அதற்கு ஜனாதிபதி அநுரகுமாரவும், அவரின் அரசாங்கமுமே பொறுக் கூற வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமானவே இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுமையானது அவர் முன்னாள் ஜனாதிபதியாக அல்ல. நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை இல்லாது செய்த முப்படைகளின் தலைவராக இருந்தவர் என்பதே முதன்மையானது. அதற்கான பாதுகாப்பே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் பயங்கரமான பலமான ஆயுதங்களை கொண்டிருந்த அமைப்பான விடுதலைப் புலிகளையே அவர் தோற்கடித்தார். இவ்வாறான அமைப்பிடம் இருந்தே மகிந்த ராஜபக்ஷ நாட்டை மீட்டார். இதனாலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டும்.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லையென்று எவருக்கும் கூறலாம். ஆனால் இலங்கையில் அந்த அமைப்பு இல்லாது செய்யப்பட்டாலும், உலகில் அந்த அமைப்பின் நிழல்கள் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளன. இதனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அவசியமாகும். பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகளின் பின்னரே எவருடையதாவது பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அவ்வாறான மதிப்பீடுகளை செய்ததா?
ஜனாதிபதி அவர்களே மகிந்த ராஜபக்ஷவுக்கு சிறிதளவேனும் பிரச்சினை ஏற்படுமாக இருந்தால் நீங்களும் உங்களின் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்றார்.