பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் பலி
பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மஸ்துங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரி, மூன்று பாடசாலை மாணவர்கள் என ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பொலிஸார் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் வைத்தியசாலை மற்றும் பெண்கள் பாடசாலைக்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலி
மோட்டார் சைக்கிளில் வெடிபொருள் பொருத்தப்பட்டு, “ரிமோட் கண்ட்ரோல்” மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக அதிகாரி கூறினார். உயிரிழந்த குழந்தைகள் 5-10 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், பொலிஸ்காரர்கள் மற்றும் மக்கள் எரிந்த பொலிஸ் வான் அருகே திரண்டிருப்பதைக் காட்டுகிறது.
அப்பகுதிக்கு அருகிலுள்ள பல ஆட்டோ ரிக்ஷாக்களும் சேதமடைந்துள்ளன
கட்டுமான தளத்தில் ஐவர் கொல்லப்பட்டனர்
பலுசிஸ்தானில் ஒரு சிறிய அணை கட்டும் தளத்தில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு மஸ்துங்கில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு தாம் பொறுப்பேற்பதாக பிரிவினைவாத போராளிக் குழுவான பலூச் லிபரேஷன் ஆர்மி (பிஎல்ஏ) ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டிருந்ததுடன், இருவர் படுகாயமடைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பஞ்ச்கூரில் உள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்தனர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பலுசிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரிப்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று, மஸ்துங்கில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
முகமது நபியின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் திரண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பலுசிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.