இலங்கை ஜனாதிபதியின் ஆட்சியும் அவதானிப்பும்! ….. ஏலையா க.முருகதாசன்.
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கியத் தேசியக் கட்சியுமே இருந்திருக்கின்றன.
அப்பப்ப கூட்டணி அரசாங்கத்தில் பொதுவுடமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலர் தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
எனினும் மக்களுக்குப் பழக்கப்பட்ட கட்சிகளாக அவரில்லாவிட்டால் இவர் இவரில்லாவிட்டால் அவர் என இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி நடத்தின.
இந்த இரு கட்சிகளும் தமிழரின் உரிமைப் பிரச்சினையில் ஒரே விதமான அணுகுமுறையைத்தான் கையாண்டு வந்தன.
இந்தக் கட்டுரையை எழுதும் போது நான் படித்த காலத்தில் தமிழ் மொழிப்பாட புத்தகத்தில் அடிமை மனம் என்றொரு பாடத்தை படித்த ஞாபகம் வருகிறது.
இப்பொழுதிருக்கும் ஜப்பானல்லாத மிகப் பழைய காலத்தில் ஜப்பானியர்கள் தமது வீட்டுக்கூரைகளை ஒருவகைப் புல்லைக் கொண்டு வேய்வார்கள் என்றும் அங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தினால் வீடுகள் அழிந்தவிடுவது என்றும் மீண்டும் புற்களாலேயே கூரைகளை வேய்வார்கள்,தொடர்ச்சியாக ஒரு துன்பம் எற்பட்டாலும் அவர்கள் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் படிக்காமல் ஒன்றிலிருந்து மீள முடியாத அடிமைக் குணத்திலிருந்தார்கள் என்று அந்தப் பாடத்தில் விபரிக்கப்பட்டிருந்தது.
இது ஐந்தாம் வகுப்பில் அல்லது ஆறாம் வகுப்பில் படித்ததாக ஞாபகம் உண்டு.ஆனால் இப்பொழுதிருக்கும் ஜப்பான் மிகமுற்றிலும் மாறுபட்ட நவீன ஜப்பான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.
இவ்வுதாரணத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இலங்கை மக்களும் மாறி மாறி இலங்கையில் ஆட்சி அமைத்தவர்களை மீண்டும் மீண்டும் தெரிவு செய்தார்களே தவிர புதிய சிந்தனை உள்ளவர்களை தெரிவு செய்யத் தயங்கினார்கள்.
இதுவும் ஒரு அடிமை மனநிலைதான்.தேர்தல் காலங்களில்,வானத்தை வில்லா வளைப்போம் மண்ணைப் பொன்னாக்குவோம் என இது போன்ற சாயல் உள்ள வார்த்தைகளைத் தேர்தல் பரப்புரைகளை நம்பியும் தேர்தல் பிரச்சார காலங்களில் ஆட்சியிலிருப்பவர்கள் அது செய்யவில்லை இது செய்யவில்லை,செய்வதற்கு வாய்ப்பிருந்தும் கையாலாதவர்களாக ஆளுமையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினையும் கண்டனங்களையும் மேடை மேடையாகச் சொல்வதைக் கேட்டு நம்பி தெரிவு செய்யப்படுபவர்கள் மந்திரவாதிளைப் போன்றவர்கள் என நம்பி கிட்டத்தட்ட 75 வருடங்களாக இலங்கை மக்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தவர்கள் பொருளாதாரத்தில் படிப்படியாக முன்னேற்றத்தைக் கொண்டு வந்தால் சுமுகமாத் தீர்க்க வேண்டிய இனப் பிரச்சினையை சிலந்திவலையை விடச் சிக்கலாக்கி மக்களை இனவாதிகளாக்கினார்கள்.
இது ஒரு புறம் இருக்க,இலங்கையை ஆள்வதற்கு பொதுவுடமைக் கோட்பாட்டின் இறுக்கம் ஒரு போதும் ஏற்புடையதாக இருக்காது.
ஏனெனில் இலங்கை மக்கள் மிதவாத வலதுசாரிக் கொள்கையை விரும்பவர்கள் அதில் ஊறித் திளைத்தவர்கள்.
இலங்கைக்கு பொதுவுடமைக் கொள்கை அபாயகரமானதா என்றால் அதவும் இல்லை.ஒரு நாட்டு மக்களின் குணாம்சங்களுக்கு ஏற்றவாறே கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.மக்களின் மன உணர்வுகளோடு கொள்கைகள் சமமாக பயணித்தல் வேண்டும்.ரஷ்யாவிலோ சீனாவிலே உள்ள பொதுவுடமைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் அரசு போல இலங்கையில் அதை நடைமுறைப்படுத்தவே முடியாது.
ரஷ்யாவும் சீனாவும் தொழில்துறையில் அபார வளர்ச்சியடைந்த நாடுகள்.ஆனால் இலங்கை அப்படிப்பட்டதல்ல அது ஒரு சிறிய தீவு.அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்களின் பிரதான தொழிலே விவசாயந்தான் அதற்கடுத்தபடியாக மீன்பிடித் தொழிலைச் சொல்லலாம்.
இலங்கை தீவென்பதால் நாற்புறக் கடலும்,மீன்பிடிக்கு உகந்த மீன்வளக் கடலாகும்,அடுத்து சுற்றுலாத்துறை இப்பொழுது முதன்மை நிலையில் உள்ளது.
இவற்றை முதன்மைப்படுத்தியும் முன்னிலைப்படுத்தியுமே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கியும் பரந்துபட்ட வகையிலும் கொண்டு செல்ல முடியும்.
எக்கோட்பாடு கொண்ட அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் அலகுகளைக் கருத்தில் கொண்டும் மக்களின் குணாம்சங்கள் பண்பாட்:டு விழுமியங்களைக் கருத்தில் கொண்டுமே ஆட்சி நடத்த முடியும்.
ஆட்சி நடத்துதல் என்பதை தமது ஆட்சிக் காலத்தில,; காலத்தை இழுத்துக் கொண்டு போவது மக்களுக்கான நல்லாட்சியாகாது.
மக்களின் அன்றாட வாழ்வு அவர்களுக்குச் சுமையாகவே இருக்கக்கூடாது.சராசரி நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தை கவனத்தில் வைத்தே எல்லா நாடுகளிலும் ஆட்சிக்கான திட்டமிடல் இடம்பெறுகின்றன.
நடுத்தர மக்களை கீழே போகவிடமாலும் அவர்களை வசதி நிறைந்த வாழ்க்கைக்கு கொண்டு போவதிலும்,நடுத்தரமக்களுக்கு கீழே உள்ள மக்களை நடுத்தர மக்களாகவும் பின்னர் அவர்களை வசதி நிறைந்த வாழ்க்கையை நோக்கி உயர்த்துவதுமே ஒரு அரசின் மிகப் பெரிய பொறுப்பாகும்.
நாட்டு மக்களுக்க முதல் தேவையாகவும் முக்கிய தேவையாகவும் இருப்பது உணவுப் பற்றாக்குறையற்ற நிலையேயாகும்.உணவுப் பொருட்களின்
விலைவாசிகள் ஒரு குடிமகனின் வருமானத்தில் பெரும்பகுதியை உறிஞ்சாதவாறும் விலைகள் யாவும் ஆகக்கூடியது பத்து ரூபாய்க்கு கீழானதாக இருக்குமாறு பொருளாதாரத் திட்டமிடல் இருக்க வேண்டும்.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அந்த உணவுப் பொருள் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலகுவாக வாங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கையில் விலைகூடிய உணவுப் பொருட்கள் என்று சொல்லப்படுபவையின் விலைகள் குறைக்கப்பட்டு அந்த உணவுப் பொருள் எல்லாக் குடிமக்களாலும் வாங்கக்கூடிய பொருளாக இருக்குமாறு பொருளாதாரக் கட்டமைப்பு இருக்குமாயின் பொதவுடமைக் கொள்கையை அந்நாடு நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது என்று நம்பலாம்.
யப்பானியர்களின் அடிமை மனம் போல மாறி மாறி இலங்கை மக்கள் இரண்டு பிரதான கட்சிகளை மட்டுமே வெற்றியடையச் செய்தார்கள்.அவர்களுக்கு வேறு தெரிவு எதையும் உள்வாங்க முடியவில்லை.
ஒரு நாட்டினது பிரதான கொள்கையாக பொருளாதார மேம்பாடே இருக்க வேண்டும் என்ற நுண்ணறிவைவிட உணர்ச்சிகரமான பேசு;சுக்கள் மூலம் மொழிவெறி,மதவெறி,இனவெறி என்பன ஊட்டப்பட்டன.
இந்த வெறிகள் இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் அவலத்தை ஏற்படுத்தின.ஒரு நாடு கடனில் இருப்பதே இலங்கைக் குடிமகன் ஒவ்வொருவனையும் கடனாளியாக்கியமையாகும்.
கிட்டத்தட்ட இதுவும் கொத்தடிமைக்குச் சமமானதே.ஒரு நாடு உணவுக்காக மற்றைய நாடுகளிடம் கடன் தாருங்கள் எனக் கையேந்தி நிற்பதே பெரும் அவமானமாகும்.
கடன்,பொருளாதாரச் சீர்கேடு,தீர்வை எட்டாத இனப் பிரச்சினை என எல்லாம் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் இலங்கையைப் பொறுப்பேற்றிருக்கின்றது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்.
முதல்முறையாக இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு துடிப்பான இளைஞர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.இலஞ்சம் ஊழலற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது.
புதிய ஜனாதிபதிக்கும் அவருடைய அமைச்சுக்கும் விலக முடியாத பொறுப்பு உண்டு.இலங்கை மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் போல எதையும் சிந்திக்காது இதுவரை காலமும் செய்த தவறை இம்முறை செய்யாது அவர்களை நிராகரித்து புதியவர்களைத் தெரிவு செய்ததையும் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் இன்றைய அரசு வீணடிக்காது என நம்பலாம்.
ஆட்சிக்கு வந்தவுடனேயே எல்லாவற்றையும் ஒழுங்காக்கலாம் என மக்களும் எதிர்பார்க்கவே கூடாது.
இதில் தமிழ் மக்களில் சிலர் இந்த அரசு ஒரு மூன்று மாத காலந்தான் எனச் சொல்லத் தொடங்கிவிட்டனர் தம்மை அரசியல் அறிஞர்கள் எனக் கற்பனைக்
கொள்பவர்கள்,இலங்கையில் என்றுமே சாத்தியமில்லாத தமிழீழக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஊடகங்களில் அறிக்கைகளாக விடுவதைப் பார்க்கும் போது மக்களை உசுப்பேத்தி எப்படியாவது நாடாளுமன்றக் கதிரையில் ஆறஅமர உட்கார்ந்துவிட வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
தமிழ் மக்கள் முட்டாள்களாகவே காலத்துக்கும் இருக்க வேண்டும் என்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அதில் இலட்சிய வெறியர்களாக இருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு இலங்கையில் உரிமைப் பிரச்சினை உண்டென்பதை உலகிற்கு உணர்த்தவே பொதுவேட்பாளரை சங்குச் சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட வைத்தோம் என சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியுள்ளார்கள்;.
இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாறு தெரியாதவர்களே இப்படிக் கூறி வருகிறார்கள்.தந்தை செல்வா உலகிற்கு உணர்த்தாதையா?.இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் இந்த அரசியல்வாதிகள் தமிழர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
இப்பொழுது இலங்கை அரசைப் பொறுப்பேற்றிருக்கும் அரசு இலங்கையர் என்ற பொதுநிலையைத் தமது கோட்பாடாகவும் மதம் இனம் மொழி என்பவற்றுக்கப்பால் அனைவரும் இலங்கையர் நெறியாள்மைக்கு உட்பட்டே ஆட்சி செய்யும்.
இலங்கைக்கு அதுவே உகந்த வழிமுறையாகும்.இனப் பிரச்சினை என்பது தார்வீதி மக்கிவீதி என ஒரு வீதி மாறி மாறி இருப்புது போலவே இருக்கின்றது.
மக்கி வீதிக்கும் தார் ஊற்ற நாள் எடுக்கும்.சிதறின தேங்காய் மாதிரி சில்லம் பொல்லமாக போயிருக்கும் இலங்கை நிலவரத்தை சீராக்க நாள் எடுக்கும்.பொறுமை வேண்டும்.