ஆகாயப் பந்தல் பகுதி 04…. ஏலையா க.முருகதாசன்
அடுப்படிக்குள் வந்த மகேந்திரராஜா மதுசாவைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் வெல்கம் ரூ அவர் கவுஸ் என்றவர் தொடர்ந்து தீனு மத்திய லாகின்யா என்றவர் தங்களுடைய மொழியைச் சொன்னதால் மதுசா கேள்விக்குறியுடன் தன்னைப் பார்த்துத் தடுமாறுவதையும் அவரின் மனைவி சசிகலா என்ன நீங்கள்,உங்கள் பிள்ளைகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மொழியை நீங்களும் பேசத் தொடங்கிவிட்டீர்களா என்று சொன்னவுடன் சாரிணியும் சரவணனும் வீட்டில் இதையே பேசுவதால் எனக்கும் அவர்கள் பேசுவதைக் கேட்டு அது எனக்கும் வாயில் வந்துவிட்டது என்றவர் நான் இப்ப சொன்னதற்கு அர்த்தம் நீங்கள் நல்ல அழகாயிருக்கிறீர்கள் என்பதே.உண்மையில் நீங்கள் நல்ல அழகிதான் என்றவர் உங்களுக்கு மஞ்சள் நிறந்தான் பிடிக்குமா எங்கள் குடும்பத்துக்கும் மஞ்சள் நிறம் பிடிக்கும் என்கிறார்.
மதுசாவின் தாயார் செய்து குடுத்த பலகாரங்களில் ரவை லட்டை எடுத்துச் சாப்பிட்டவர் ஆகா அருமையாக இருக்கிறது நல்ல உருசியாக இருக்கிறது என இரசித்துச் சாப்பிடத் தொடங்குகிறார்.
இந்தக் குடும்பம் யார்?.இவர்களின் நடவடிக்கை சராசரி மனிதர்களின் நடவடிக்கைகள் போல இல்லையே.இவர்களுடைய வீட்டின் அலங்காரம் மாளிகை மாதிரி இருக்கின்றதே என யோசிக்கிறாள் மதுசா.
இவர் இந்த நகரத்தில் உள்ள போக்குவரத்துக் கழகத்தின: டிராம் வண்டியின் சாரதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.வீட்டில் இவர்கள் தனித்துவமானவர்களாகவும் வெளியில் பொது இடத்தில் ஒரு திருமண விழாவில்,கடைகளில்,சனத்தோடு சனமாக தெருக்களில் எல்லாரும் போலவே இருக்கிறார்கள்.
சரவணன்கூட யூனிவேர்சிற்றியில் எல்லா மாணவர்களும் போலவே இருக்கிறான்.எங்களில்: ஒரு பத்துப்பேர்தான் எங்கள் நாட்டவர்கள் அதில் சரவணனும் ஒருவர் எனவும் யோசித்தாள்.
சரவணனின் வீட்டுக்கு வந்த போதே அழகிய தேவதையே வா என என்னை விளித்தழைத்த சாரணிகூட எல்லாரும் போலவே இருந்தாள்.
ஆனால் சரவணன்,சாரிணி அவர்களின் தாய் தகப்பன் எல்லாரும் வீட்டில் நிற்கும் போது அவர்களிடம் மெலிதாக ஒரு வித்தியாசம் தெரிகிறது.
எங்கடை சிற்றியில்,என்னுடைய அம்மாவைப் பாரத்து சகுந்தலா நீ வீட்டை இப்படி நேர்த்தியாக வைத்திருக்க எங்கை கற்றுக் கொண்டனி என்று எங்கடை வீட்டில் பொருட்கள் இருக்கும் ஒழுங்கைப் பார்த்துப் பலர் பாராட்டுவதை நானே கேட்டிருக்கிறேன்.எங்கடை வீடும் அப்படி ஒன்றும் பெரிய வீடு அல்ல அளவான வீடுதான்.
அம்மாவை அம்மா செய்யும் சாப்பாடுகளின் உருசியையும் அதைப் போல அம்மா வீட்டை அழகாக வைத்திருப்பதைப் பலரும் பாராட்டிப் பேசும் போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைவேன் என யோசிக்கிறாள் மதுசா.
ஆனால் சரவணனின் வீடு இன்னும் நேர்த்தியாக இருந்தது.என்றுமே பார்த்திடாத ஒரு புது இடத்தில் எங்குமே பார்த்திடாத ஒரு புதுவிதமான வீட்டில் நிற்பதாகவே மதுசா உணர்ந்தாள்.
சுவர்களுக்கு அடிக்கப்பட்டிருந்த பெயின்ற் வெள்ளையா பட்டர்கலரா என கண்டுபிடிக்க முடியாதளவிற்கு தனித்துவமான கலராக இருந்தது.
சரவணனின் தாயார் சசிகலா கணவனிடம் கண்சாடையில் ஏதோ சொல்வதை மதுசா கவனிச்சுவிடுகிறாள்.
தன்னையும் வைச்சுக் கொண்டு அப்படி என்னதான் கண்ணால் இரகசியம் பேசுகின்றனர் என நினைக்கிறாள் மதுசா.
தாய் என்ன பேசியிருப்பாள் என ஊகித்த சாரிணி சரவணனைப் பார்த்து பூடகமாகச் சிரிச்சவள் யாருக்கோ கதை சொல்வது போல தாயும் தகப்பனும் புரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அம்மா முதலிலை உங்கடை தேவதையின் படிப்பு முடியட்டும் என்கிறாள்.
எதுவுமே பேசாது ஒய்யாரமாக அடுப்படி மேசையில் சாய்ந்தபடி புன்சிரிப்புடன் இமைகளைச் சுருக்கியும் உயர்த்தியும் முகத்தைத் திருப்புp அங்குமிங்குமாகக் கண்களைச் சுழலவிட்டு வீட்டை இரசித்துக் கொண்டிருந்த மதுசாவின் கையை மெதுவாகத் தட்டிய சாரிணி எங்கள் அழகிய தேவதையே கண்கள் இரண்டும் அங்குமிங்கும் சுழல்கின்றனவே என்ன காரணம் எனக் கேட்க,நீங்கள் என்னைத் தேவதையென்கிறீர்கள்,நீங்களும் தேவதை போலத்தான் இருக்கிறீர்கள் என்று மதுசா சொல்லிவிட்டு சில விநாடிகள் தாமதித்து இந்த வீட்டை எப்படி இவ்வளவு அழகாக வைத்திருக்க முடிகிறது என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து இரசிக்கிறேன் அதுதான் என் கண்கள் அங்குமிங்குமாகச் சுழல்கிறது என்கிறாள்.
மதுசாவை நோக்கியே எல்லார் பார்வையும் சென்று கொண்டிருந்தது.அவள் மேசையில் சாய்ந்து கொண்டிருந்ததை அடிக்கடி கழுத்தை அங்குமிங்குமாகத் திருப்பி சுற்றுமுற்றம் பார்ப்பதை தேத்தண்ணியை குடிப்பதும் பிறகு மேசையில் வைப்பதை இப்படி எல்லாவற்றையும் மகேந்திரராஜாவும் சசிகலாவும் சாரிணியும் கவனிச்சுக் கொண்டேயிருந்தனர்.
சரவணன் அடுப்படிக்குள் சிறிது நேரம் நின்றவன்,ஒரு டிஸ்க்கை எடுத்து அதில் இரண்டு பூந்திலட்டுக்களை வைச்சு தேத்தண்ணிக் கோப்பையுடன் அவற்றையும் எடுத்துக் கொண்டு அடுப்படியை விட்டுப் போகிறான்.
மகேந்திரராஜா மதுசாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க தான் தனது பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை என்றும் தனது தாயும் தகப்பனும் பட்டதாரிகள் என்றும்,இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்ததற்குப் பிறகு தாய் தகப்பனின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை,இங்கத்தைய மொழியைப் படிச்சாலும் சரியான வேலை கிடைப்பது சிரமமானது என்ற மதுசா தகப்பன் ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்கிறார் அந்தத் தொழிற்சாலை கத்திரிக்கோல்களை செய்யும் தொழிற்சாலை.
தகப்பன் அவற்றின் இயந்திரங்களில் ஒன்றில் வேலை செய்கிறவர்,தொழிற்சாலை லூனன் என்ற இடத்திலிருக்கிறது என்று சொல்லி முடிக்கிறாள்.
மதுசாதான் தமது மருமகள் என மனசளவில் ஒரு முடிவை எடுத்திருந்தாள் சசிகலா.அதை வெளிப்படுத்தி மதுசாவின் தாய்தகப்பனிடம் சொல்லும் சந்தர்ப்பத்திற்கான காலம் வரும் எனக் காத்திருந்தாள்.
அழகான பெண்பிள்ளைகளைக் கண்டால் ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் என்ன அழகு எங்கடை வீட்டுக்கு மருமகளாக இவள் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நினைப்பார்கள்.
சில தாய்மார் வெளிப்படையாக சிலருக்காவது சொல்வார்கள்.சிலர் உள்மனதில் அதைப் பூட்டி வைத்திருப்பார்கள்.
அது மாதிரித்தான் அடுப்படிக்குள் மதுசா நிற்கும் போது கணவனுக்கு கண்களால் சசிகலா சைகை செய்ததும் அதைக் கவனித்த சாரிணி எதுக்கும் தேவதையின் படிப்பு முடியட்:டும் என்று சொன்னதுமாகும்.
அடுப்படியை பார்த்தும் அதற்கப்பால் அடுப்படி வாசல் வழியாக மதுசா வீட்டின் ஒரு பகுதியைப் பார்த்து இரசித்தாலும் தேவதையின் படிப்பு முடியட்டும் என்று சாரிணி சொன்னதையும் அவள் கேட்கத் தவறவில்லை.
மதுசாவின் முழுச் சிந்தனையும் சரவணன் சாரிணியின் தாய்வீட்டிலிருப்பவர் அவரை யாருமே வெளியில் உற்றுக் கவனித்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் சரவணன் தான் படிக்கும் யூனிவேர்சிற்றியில் படிப்பவன் அங்கு யாருமே அவனின் கண்களில் இருக்கும் வித்தியாசத்தைக் கவனிக்காமலா இருந்திருப்பார்கள் என அவளின் யோசனை அதிலேயே இருந்தது.
சாரிணி வேறொரு யூனிவேர்சிற்றியில் படிப்பவள்.பொதுவாகவே ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகளின் முகத்தை உற்றுக் கவனிப்பவர்கள்,சாரிணியின் கண்களின் வித்தியாசத்தைக் கவனிக்காமலா வி;ட்டிருப்பார்கள் என மதுசா யோசிக்கத் தொடங்கினாள்.
தேவதையே வாருங்கள் வீட்டைச் சற்றிக் காண்பிக்கிறேன் என சாரிணி மதுசாவின் கையைப் பிடித்து; கூப்பிட,சாரிணியின் கைபட்டதும் கை ஏதோ ஒரு சுகத்தை அனுபவித்ததை உணர்ந்தாள் மதுசா.
சாரிணியுடன் சென்று கொண்டே,என்னைத் தேவதை என்று கூப்பிடாதையுங்கோ எனக்கு அது ஒரு மாதிரியாக இருக்கிறது என மதுசா சொல்ல,புன்முறுவலுடன் மதுசாவின் பக்கம் திரும்பிய சாரிணி தீனு அத்திய தவத்தேவ என்றவள் சொறி சொறி மன்னியுங்கோ நான் நாங்கள் கண்டுபடிச்ச மொழியில் சொல்லிவிட்டேன்.நான் இப்ப சொன்னதற்கு அர்த்தம் நீங்கள் எங்களுக்குத் தேவதைதான் என்பதே என்கிறாள் சாரிணி.
மதுசா ஏதோ தான் வேறொரு கிரகத்திலிருக்கிறேனோ,அப்படியில்லையெனில் இவர்கள் உண்மையில் யார்? பூமிக்குரியவர்கள்தானா எனக் குழப்பமடைந்தாலும் அவர்களைவிட்டு விலகவும் அவளால் முடியவில்லை.
ஒவ்வொரு அறையாக சாரிணி மதுசாவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஒழுங்கை அழகுபடுத்தலை தனது வீட்டிலோ இல்லாட்டில் தனக்கப் பழக்கமான ஜேர்மன் நண்பிகளின் வீட்டிலோ இல்லாட்டில் இலங்கைத் தமிழரின் வீட்டிலோ அவள் காணவில்லை.
ஒவ்வொரு அறையையும் இரசித்தவள் சரவணனின் அறைக்குள் நுழைந்ததும் சுவரில் மஞ்சள் ரோஜாப்பூக்களைப்: பரவிவிட்டது போன்ற படம் ஒன்றை பிறேம் போட்டு சுவரில் கொழுவியிருந்ததைக் கண்டு, அருகில் சென்று பார்த்தவள் பக்கத்து யன்னலுக்கூடாக கீழே பார்த்த போது அங்கே சரவணன் தேத்தண்ணி குடித்தபடியம் யாருடனோ கதைச்சுக் கொண்டிருப்பதும் தெரிஞ்சது.
மதுசா எதை ஆர்வமாகப் பார்க்கிறாள் என சாரிணியும் யன்னலுக்கூடாகக் குனிந்து பார்க்கிறாள்.
அப்பொழுது ஒரு பறவை பறந்து வந்து சரவணனன் இருந்த கதிரையின் கைப்பிடியில் இருப்பதும்,பறந்து வந்து இருந்த போது செம்மஞ்சளில் இருந்த பறவை நீலநிறமாக மாறியதையும் கண்டு திகைக்க அவளின் முகமாற்றத்தைக் கவனிச்ச சாரிணி வாருங்கள் கீழை போவம் அந்த நூதனப் பறவையைப் பார்க்கலாம் என மதுசாவைக் கூட்டிக் கொண்டு போகிறாள்.
சாரிணியின் வாயிலிருந்து அவர்களின் கிரக மொழி வர எத்தனிப்பதை அவள் கஸ்டப்பட்டுத் தமிழில் கதைப்பதிலிருந்து மதுசா புரிஞ்சு கொள்கிறாள்.
(தொடரும்)