பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் – எந்த நாடு முதலிடம்?
நாம் முன்பு நினைத்ததை விட 14% அதிகமான மர இனங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். முதல் ‘விஞ்ஞான ரீதியாக நம்பகத்தன்மை’ கொண்ட மதிப்பீடு மூலம் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், மதிப்பிடப்பட்ட 73 ஆயிரம் 300 இனங்களில், மேலும் 9 ஆயிரம் 200 இனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ஆனால், வெப்பமண்டல காடுகளில் மிகவும் அரிதான இனங்கள் உள்ளன. இது காலநிலை மாற்றமும், காடுகள் அழிப்பு காரணமாகவும் வேகமாக மறைந்து வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான மரங்களின் தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே உள்ள தரவுகளில் தகவல் தெரியாதவற்றைச் சரிசெய்து, புள்ளிவிவர நுட்பங்களைப் பயன்படுத்தி மர இனங்களின் எண்ணிக்கையை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
உணவு, மரம் மற்றும் மருந்துக்கு உள்ளிட்டவற்றுக்கு அத்தியாவசியமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும், காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சுவதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பல்வேறு பணியில் ஈடுபட வேண்டும் என்று இந்த கண்டுபிடிப்புகள் பரிந்துரைக்கின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் உலகளாவிய வன பல்லுயிர்களின் பாதிப்பை எடுத்துக்காட்டுகின்றன என்றார் செயின்ட் பாலில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ரீச் .
“எங்கள் தரவு பல்லுயிர் மிகவும் அச்சுறுத்தல் எங்கே உள்ளது என்பதை மதிப்பிட உதவும்,” அவர் பிபிசி செய்தி கூறினார்.
“இது தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியாவின் வெப்பமண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் உள்ளது. மேலும் அவை அறியப்பட்ட மற்றும் அறியப்படாத அரிய உயிரினங்களின் கண்டறியப்படும் முக்கிய இடங்களாகும்.
“இந்த முக்கிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வது, எதிர்கால பாதுகாப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவும்.” என்கிறார்.
தென் அமெரிக்கா – அதிகம் ‘காணாமல் போன’ இனங்களைக் கொண்ட கண்டம் – மொத்த எண்ணிக்கையில் சுமார் 43% உள்ளது. இதைத் தொடர்ந்து:
யூரேசியா (22%)
ஆப்ரிக்கா (16%)
வட அமெரிக்கா (15%)
ஓசியானியா (11%)
பன்முகத்தன்மைகொண்ட இயற்கை காடுகள் மிகவும் ஆரோக்கியமான உற்பத்தித் திறன் கொண்டவை. இவை உலகப் பொருளாதாரத்திற்கும் இயற்கைக்கும் முக்கியமானவை.
இவை பெரும்பாலும் வெப்பமண்டல நாடுகளில் உள்ளன. அங்கு காடுகளை அழிப்பது பெருமளவில் கீழ்வரும் காரணிகளாக நடத்தப்படுகிறது:
1. மாட்டிறைச்சி, பாமாயில் மற்றும் சோயா போன்ற மேற்கு நாடுகளில் உண்ணப்படும் உணவுப் பொருட்களை வளர்ப்பது (இவற்றில் பாமாயில் மற்றும் சோயா கால்நடை தீவனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது)
2. பருவநிலை மாற்றம்
3. தீ
இந்த ஆய்வில் 140 க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றினர் என்று நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் இதழில் அதன் செயல்முறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பமண்டல காடுகள் ‘உலகளாவிய பல்லுயிர் புதையல்’ என்றும், கரியமில வாயு வெளியேற்றத்தை கணிசமான அளவில் உறிஞ்சி, புவி வெப்பமடைதலை குறைப்பதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் யாத்விந்தர் மால்ஹி கூறுகிறார்.
“வெப்பமண்டல காடுகளின் மரங்கள் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விட மிகவும் பன்முகத்தன்மைகொண்டவை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது,” என்று அவர் கூறுகிறார்.