சொல்லித்தான் ஆகவேண்டும்!… சொல்-24… அரசியல் பத்தித்தொடர்… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
நாளை வரும் பலாக்காயிலும் (சமஸ்டி)
பார்க்க இன்றிருக்கும் கிளாக்காய் (13 ஆவது திருத்தம்) நன்று
நாம் விரும்புவது சாத்தியமில்லையெனில் சாத்தியமானதை விரும்புவதுதான் புத்திசாலித்தனமானது.
1987-இல் கைச்சாத்திடப் பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 37 வருடங்களைக் கடந்தும் இன்றுவரை முழுமையாக அமுல்படுத்தப்படாமைக்குக் காரணம் அது கொணரப்பட்ட ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலிருந்து தொடங்கி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவிருந்ததுவரை பதவியிலிருந்த எந்த ஜனாதிபதியினாலும் அது முழுமையான அரசியல் விருப்பத்துடன் அமுல் செய்யப்படவில்லையென்பதே. இதற்குப் பதவியிலிருந்த இலங்கை ஜனாதிபதிகளையும் அரசாங்கங்களையும் மட்டும் குறை கூறுவது நேர்மையல்ல. இது முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கு அவர்கள் பிரசன்னமாய் இருந்தவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அவர்களுக்குப் பின்னர் வந்த காலங்களில் (2009 இலிருந்து) புலிகளின் முகவர்களாகச் செயற்பட்ட தமிழர்களுடைய அரசியற் தரப்பினரும் கூடப் பொறுப்பானவர்களே.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். அவை அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இன்று தென்னிலங்கை அரசியலில் ஒரு முறைமை மாற்றம் – பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த முறைமை மாற்றம் – பண்பு மாற்றம் தமிழர்தரப்பு அரசியலிலும் ஏற்படவேண்டும். அப்படி ஏற்பட்டால்தான் தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பண்பு மாற்றத்தின் பயனைத் தமிழ் மக்களும் அனுபவிக்க முடியும்.
ஆனால், இன்றைய அரசியல் களநிலையை நோக்கும்போது தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் செயற்படும் எந்த தமிழ் அரசியல் கட்சிகளிடமும் அப்பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணம் கிஞ்சித்தும் இருப்பதாகத் தெரியவில்லை. முழுக்க முழுக்க கதிரைக்கு அடிபடும் மரபார்ந்த தேர்தல்மைய அரசியலில்தான் எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தல்களைக் குறிவைக்காது மக்கள் நலனை மட்டுமே மனதிற்கொண்டு செயற்படக்கூடிய ‘மாற்று அரசியல் அணி’ யொன்றின் மேற்கிளம்புகை அவசியமாகிறது. இம் ‘மாற்று அரசியல் அணி’ யின் முதற்கட்டப் பணி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குரிய அழுத்தத்தை இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை அரசாங்கத்தின்மீதும் இந்திய அரசாங்கத்தின்மீதும் ஏற்படுத்துவதற்கான அரசியல் வாய்ப்பாடுகளை வகுப்பதாகும்.
மேலும், 13 ஆவது அரசியல் திருத்தத்தை முழுமையாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் அமுல்படுத்த வேண்டுமாயின் அது மூன்று கட்டங்களாக நடைபெற வேண்டும்.
முதற்கட்டம்
தற்போது இருக்கும் 13 ஆவது திருத்தத்தின் வடிவத்தை அதாவது அதன் ஐதாக்கப்பட்ட வடிவத்தை உடனடியாக அமுல் செய்வதாகும். இது உடனடி மாகாண சபைத் தேர்தலையும் உள்ளடக்கும்.
இரண்டாம் கட்டம்
மூலத் திருத்தத்திலிருந்து கடந்த காலங்களில் மத்திய அரசினால் திரும்ப எடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளவும் மாகாண சபைகளுக்குக் கை மாற்றுதல்
மூன்றாம் கட்டம்
மூலத் திருத்தத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து அதனை மேலும் வலுப்படுத்துவதாகும்.
இந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்குத் தமிழர்களிடையே மேற்குறிப்பிடப்பெற்ற மாற்று அரசியல் அணியின் தோற்றமே உடனடித் தேவையாகும்.
‘இரு தேசம்; ஒரு நாடு’ மற்றும் ‘சமஸ்ட்டி’ போன்ற ‘கானல் நீர்’ க் கருத்தியல்களை உச்சாடனம் பண்ணுவதிலேயே காலத்தை வீணடிக்கும் ‘போலி’ த்தமிழ்த் தேசியவாதிகள் காட்டும் மாயையில் மயங்காது தற்போது கையில் உள்ள அதிகாரப் பகிர்வுப் பொறிமுறையான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியற் செயல்பாடுகளை விசுவாசமாக முன்னெடுக்கும் மக்கள் இயக்கமொன்று தமிழ் மக்களிடையே தேவை. இல்லையேல் இருப்பதையும் இழக்கவேண்டிவரும்.
நாளை வரும் பலாக்காயிலும் (சமஷ்டி) பார்க்க இன்றிருக்கும் கிளாக்காய் ( 13 ஆவது திருத்தம்) நன்று.