“அந்த பத்து ரூபாய் நோட்டுகள்” …. சிறுகதை …. சங்கீதா.
சுவையனைத்திற்கும் பெயர் போன மதுரை மாநகருக்குக் கிழக்கே உள்ள சிறிய கிராமம் அது! பத்து பதினைந்து வீடுகள் மட்டுமே உள்ள சிறிய ஊர். சின்னஞ்சிறு குன்றுகளையும், பெரியதான மலைகளையும் எல்லைகளாக கொண்ட ஊர். நெல் வயல்களும், கரும்பு வயல்களும், தென்னையும் வாழையும் என தாவர வகைகளை அணிகலன்களாக அணிந்திருந்தது அந்த ஊர்!
அத்தகைய குறிஞ்சி நில ஊரில்தான் சாலைகளுக்கு தார் போடும் வேலை செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.தார் போடும் வேலை இல்லாத சமயங்களில் கிடைக்கும் சின்ன சின்ன விவசாயக் கூலி வேலைகளையும் பார்த்துக் குடும்பத்தை கவனிக்க வேண்டியதாய்த்தான் என் நிலைமை உள்ளது.
பெயரில் மட்டும்தான் என் பெயர் பொன்னன்…பொன்னை வாழ்க்கையில் ஒரு முறை கூட அணிய முடியாத கொடிய ஏழ்மை நிலையை வாழ்வில் தினம் தினம் சந்தித்து கொண்டு இருப்பவன் நான்…என் நிலை யாருக்கும் வந்து விடக்கூடாது..
மதுரை, தமிழின் பெரும்புகழைத் தன்னகத்தே கொண்ட மாநகர்! மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை என பக்தி சுவை அனைத்தையும் பருகலாம் இவ்வூரில். மேலும் இரு புறம் உள்ள கடைகளின் அணிவகுப்பும் ஆயிரங்கால் மண்டபத்தூண் வரிசை அழகும், நாயக்கர் கால சிற்ப அதிசயங்களும், ஆண்டாண்டு காலமாய் ரசிக்கவும், வியக்கமும் தோன்றும் மாமதுரை. அவ்வாறே புகழ்பெற்ற மதுரை அருகில் இருந்தது என்னுடைய கிராமம்.
ஏழ்மை என்பது வாழ்ந்து உணர்ந்து பார்த்தால் மட்டுமே கற்றுக் கொள்ள முடிகின்ற பாடம்! பட்டினத்தார் வாழ்விலும் சரி, குசேலர், புத்தர் வாழ்விலும் சரி.. ஏழ்மை என்பதை வாழ்க்கையாக வாழ்ந்தே காட்டி இருப்பர்.
அவ்வாறே ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் என் வாழ்வில் தான் எத்தனை கஷ்டங்கள். வாழ்நாளில் பெரும்பகுதி இல்லாமையிலேயே கழிந்து விட்டது. பள்ளி வயதில் பக்கத்தில் இருந்த நண்பனிடம் பென்சில் கேட்டு தொடங்கியது, இந்த தோல்வியும் வறுமையும்! இன்னும் அவை வெயில் நேர நிழல்களாய் விடாமல் துரத்திக் கொண்டுதான் வருகின்றன.
துன்பம் என்ற ஒன்று உண்டென்றால் இன்பம் என்பதும் உண்டு. மேடு உண்டென்றால் பள்ளம் என்பது உண்டு என்றாலும் எனது வாழ்க்கை மட்டும் மேடு என்ற துன்பத்தையே கொண்ட பொய்த்துப் போன பருவமழை ஆயிற்று. தாரில் ஊறி அழுக்கேறிய கால்களும், வியர்வையில் உப்பு படர்ந்து பூத்துப்போன உடலும்,இற்றுப் போய் மரத்துப்போன கைகளும், வற்றிப் போய் வரி எலும்பைக் காட்டி நிற்கும் உடலும், ஆதவன் கொடுத்த கொடையாய் செம்பட்டை முடியுடனும் காணப்படும் என்னுடைய தோற்றமே என் வறுமையின் அடையாளமாக உருமாறி இருந்தது.
மதுரையின் பெரும்பாலான சாலைகள் எங்களுடன் வேலை பார்க்கும் குழுக்களால் போடப்பட்டவை தான். அந்த சாலைகளில் நடக்கும் போதெல்லாம் கதிர் அறுத்த நெல் வயலில் கால் ஊன்றக் கூசி நடக்கும் உழவனைப் போல் நானும் கூசி நடக்கும் போது என் மனம் வலிக்கும்.
என் வாழ்க்கைத் துணையாக வந்த என் மனைவி மீனாளோ மதுரைக்கு பக்கத்திலிருந்து வந்தவள் தான். விட்டுக் கொடுத்து வாழ்ந்தும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவள்.
என் மகள் பரணி! ‘ போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற அரசனுக்குப் பாடுவது பரணி’,என்ற கலிங்கத்துப்பரணி சிற்றிலக்கியத்திற்கேற்ப,கல்வி எனும் போரில் சிறப்பாக தேர் ஓட்டும் பார்த்தசாரதி அவள்! தான் பயிலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்ணையும், வீட்டில் பெற்றோர்களாகிய எங்களிடம் பெரும் மதிப்புகளையும் பெறுபவள் அவள்!
அவளது இலட்சியக் கனவு மாவட்ட ஆட்சித் தலைவராவது! அவளுடைய நோட்டுப் புத்தகங்கள் அனைத்திலும் அவளது பெயருக்குப் பின்னால் கம்பீரமாய் நிற்கும் ‘ஐஏஎஸ்’. எதை மறந்தாலும் ‘ஐஏஎஸ்’ என்பதை மறக்காமல் எழுதி விடும் பரணிக்குத் தான் ஆட்சித் தலைவர் ஆனவுடன் உணவு,உடை, உறைவிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி,ஏழ்மை இல்லா கிராமங்களை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்ற தனது குறிக்கோளை, தனது கூரை வீட்டில் அனுமதியின்றி நுழையும் சூரியனைப் பார்த்து தினமும் மனதில் சபதம் எடுப்பது வழக்கம்..
என் மகன் வர்மன்! பெயருக்கு ஏற்றார் போல் அக்கா பரணியுடன் பேனாவிற்காக யுத்தம் நடத்தும் மாவீரன். அக்காவைப் போன்றே மூன்றாம் வகுப்பில் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பவன் அவன்.
எனது சிறு வயதில் நானும் நன்றாக படிப்பவன் தான். குடும்ப வறுமையில் என்னுடைய படிப்பை பாதியிலேயே கைவிட்ட நிலையில், இப்பொழுது கல்வியின் மகத்துவத்தை அறிந்து, எனது பிள்ளைகளிடம் கடமைக்கு கர்மவீரர் காமராசரையும், முயற்சிக்கு அப்துல்கலாமையும் சொல்லி சொல்லி நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன்.
பொழுது புலர்ந்த நேரமது! கதிரவன் தனது பொற்கதிர்களை பூமியின் மீது பரப்ப ஆயத்தமானான்! உலகின் ஒளியை முதலில் பார்த்திட்ட புள்ளினங்களோ கீச்சிட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்தன. விலங்குகள் தங்களது விழா நேரம் ஆரம்பித்துவிட்டதாய் நினைத்து துள்ள ஆரம்பித்தன. இதை பார்த்த மானுடங்களும் ‘ஐந்தறிவே விடியலை ஆரவாரமாய் வரவேற்கையில் நாம் மட்டும் என்ன சளைத்தவர்களா?’ என உறக்கம் கலைந்து உற்சாக விழிப்பை ஏற்படுத்தினர்.
விடியற்காலையில் பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.வர்மன் மட்டும் பரணியிடம் பேனா கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தான்.பரணியோ தான் எழுத வேண்டிய வீட்டுப்பாடத்தின் முக்கியத்துவத்தை அவனிடம் புரிய வைக்க முயன்று தோற்றுப் போனாள். வர்மனின் பிடிவாதமோ அதிகமாகி அழுகையாய் வெடித்தது.
என் மனைவி மீனாள் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டே, குறைவாக கழுவப்பட்ட அரிசியை உலையில் இட வறுமையை நினைத்த அவளின் மனது அரிசியைவிட கண்ணீரும் தண்ணீருமாய் அதிகம் கொதித்தது. வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்த நான் சத்தம் போட்ட பிள்ளைகளைப் பார்த்து அதட்டிவிட்டு, சாயங்காலம் திரும்பி வரும்போது இருவருக்கும் பேனா வாங்கி வருவதாக கூறி சமாதானப்படுத்தியதும் பிள்ளைகள் சந்தோச நிம்மதி அடைந்தார்கள். அதைப் பார்த்து திருப்திப்பட்டவனாய் எனது கால்சட்டைப் பாக்கெட்டைத் துலாவ இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் மட்டுமே கசங்கியிருந்தன.
ரோட்டு வேலையில் கொடுக்கும் சம்பளத்திற்கு வார வாரம் வீட்டிற்காக முன்கூட்டியே பணம் எடுத்த மகளிர் குழு பணம் கட்டி, சிறு சிறு கடன் தொகை எல்லாம் அடைந்தது போக மருத்துவ செலவுகளும் வந்து விடுகின்றன. அரசு ஆஸ்பத்திரி இருப்பினும் தனியாரிடம் மாதம் முந்நூறு, நானூறு என தீட்டி விடுகிறது என்று வீட்டு செலவுகளையெல்லாம் நினைத்து பெருமூச்சு விட்டபடி வேலைக்குக் கிளம்பினேன்.
மீனாளோ,உலையில் கொதிக்கும் குறைவான சாதத்தை மனதில் வைத்துக்கொண்டு தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை கணவன் சாப்பிட்டு போகட்டும் என நினைத்து, சாப்பிட சொல்லி கெஞ்சியும்’உணவின் ரகசியம்’ தனக்கும் தெரியும் என்று பார்வையிலேயே அவளுக்குப் புரிய வைத்த என்னை சோகத்துடன் பார்த்தாள் என் மனைவி!
“காலையிலிருந்து வயிறு புளிச்ச ஏப்பமாவே வருது. நா கடையில சாப்பிட்டுக்கிறேன், புள்ளைகளை சாப்பிட வச்சு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு, நீயும் சாப்புட்டு வேலைய பாரு” என்று கண்டித்து கூறி அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் வேகமாக கிளம்பி விட்டேன்.
வேலை ஆரம்பித்த அதிகாலை முதலே மனதில் அதிக திடத்துடன் உற்சாகமாகத்தான் வேலை செய்தேன். என்னோடு ஆறேழு வேலையாட்களும் அடங்குவர். அதில் வளவன் என்னிடம் சற்று அதிக பிரியமுள்ளவன்.
நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகமாகி, தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்க பக்கத்தில் இருந்த ஆலமரம் நிழலில் இளைப்பாற அமர்ந்தேன்.என் முகத்தைப் பார்த்த வளவனோ பதறிப்போய் “அண்ணே என்னண்ணே மயக்கம் ஏதும் வருதாண்ணே… காலைல ஏதும் சாப்பிட்டீங்களா” என்று முதுகை தடவி பாசமாய் பதட்டத்துடன் கேட்டான்.தன்னுடைய சாப்பாட்டை சாப்பிடவும் சொல்லி வற்புறுத்தினான்.வளவன் எவ்வளவு கூறியும் வேண்டாமென மறுத்து விட்டேன்.
வளவனிடமும் அதே புளிச்ச ஏப்ப பொய்யைக் கூறிவிட்டு பக்கத்தில் ரப்பர் குடத்திலிருந்து தாராளமாக இரண்டு சொம்பு தண்ணீரைக் குடித்து முடித்து பசியை மறைத்து வேலை செய்ய ஆரம்பித்தேன்.
வேலை முடித்து திரும்புகையில் மணி மூன்று ஆயிற்று.
சாலையோர உணவகங்களை பார்த்தவுடன் கை தானாக கால் சட்டை பாக்கெட்டை துலாவ அந்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும் கசங்கி இருந்தன. குழந்தைகளை நினைத்து மனம் மறுக்க கடையைத் தாண்டி நடை வேகமானது.
கடையைத் தாண்டி சென்று கொண்டிருக்கையில்தான் வழியில் தென்பட்டது அந்த மிகப்பெரிய கல்யாண மண்டபம். நின்றேன், நிதானித்தேன். ஆபத்துக்கு பாவம் இல்லை என்று மனதில் நினைத்தும், அதை சரி என்றும் மனதிலே ஆமோதிப்பவனாய் தன்மானத்தையும் மறந்து நடந்து சென்றேன் மண்டபத்தை நோக்கி!
அது மிகவும் வசதியானவர்களின் கல்யாணம் மட்டுமே நடக்கும் பெரிய கல்யாண மண்டபம். அம்மண்டபத்தில் மாப்பிள்ளையும்,பொண்ணும் சினிமா நட்சத்திரங்கள் போன்று மின்னினர்.வந்திருந்த அனைவரும் ‘வசதியில் ஒரு குறைவுமில்லை’ என்று கூறும் அளவிற்கு நகைகளை அடுக்கி அணிந்திருந்தனர். பெண்ணின் தாய் தலையில் உள்ள கொண்டை ஊசிகள் உட்பட அனைத்தையும் தங்கத்தால் நிரப்பி கொண்டு நின்றாள்.
இவற்றையெல்லாம் பார்த்து திகைத்து பயந்த நான் ஒரு கணம் யோசித்து விட்டு ‘யாரும் கண்டுபிடித்து விடுவார்களோ,இப்படியே திரும்பி போய் விடுவோமா’என்று பலவாறு சிந்தித்துப் பார்த்தும் பசித்த வயிறு செல்ல விடாமல் தடுத்தது. மீண்டும் பாக்கெட்டைத் துலாவ கசங்கிய அந்த இரண்டு பத்து ரூபாய் ரூபாய் நோட்டுகளும், பிள்ளைகளின் முகங்களும் மாறி மாறி வந்து தன்மானத்தை மறக்கும் வகையில் தைரியமாய் நிற்க,வயிற்றுப்பசியை மட்டுமே நினைவில் கொண்டவனாய் பயத்தை வெளியில் காட்டாமல் சென்று பந்தியில் அமர்ந்தேன்.
அனைவருக்கும் இலைபோடும் போது எனக்கும் இலை போட்டார்கள். கூட்டுப் பொரியல் என பல்வேறு நிறங்களுடன் உணவு இலையில் அமர்ந்தது. அதைப் பார்த்த எனக்கோ கண்ணில் கண்ணீர் கூட வந்து விட்டது. பசியின் கொடுமை அப்படி,!. பசியின் வேகத்தோடு போட்டி போட முடியாமல்,வேகமாக சோற்றை பிசைந்து அள்ளி வாயருகே கொண்டு போகும் சமயத்தில்தான் அந்த விபரீதம் நடந்தது..பசிமயக்கத்திலும் யாரோ எனது கையைப் பிடித்து தடுத்தது எனக்கு நன்கு விளங்கியது!
அங்கு உணவு பரிமாறிய பணிப் பையன் தான் அவன். அவன் என் கையைப் பிடித்து உணவு அருந்த விடாமல், “யார் நீங்க, நீங்க இந்த கல்யாணத்துக்கு வந்த மாதிரி தெரியலையே?”என்று ஏதேதோ கேள்விகள் கேட்டான். அப்பொழுது அவன் மீது எனக்கு கோபம் வரவில்லை. ஏனென்றால் மன்னிக்க வேண்டிய பையன் தான் அவன்! அவனும் என்னைப் போன்று கஷ்டத்துக்கு வேலை செய்யும் ஒரு ஏழை தானே. அவன் அவனுடைய வேலையைத்தானே செய்கிறான். இரக்கம் தான் எனக்கு வந்தது. எனக்கு உணவு கிடைக்கவில்லை என்பது மட்டுமே நினைவில் ஓட அந்தப் பையன் பேசியது ஓரளவே புரிந்தது!
அங்கே நடந்த பதற்றமான சூழ்நிலை கண்ட அனைவரும் கூடினர். மணப்பெண்ணின் தாய் வேகமாக ஓடிவந்து விசாரித்தாள். நானோ,செய்வதறியாமல் குளிர்சாதன அறையிலும் வேர்த்து விரைத்து நின்றேன். உடனே சற்று சுதாரித்தவனாய் திருமண மண்டப அறை கண்ணாடியிலிருந்து வெளியில் பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த கார்களின் அணிவகுப்பை காட்டி வேகமாக, “நா மாப்பிள்ளை வீட்டு மக்களுக்கு கார் ஓட்டி வந்தேங்க..வெளியில் தான் எங்க கார் நிக்கிது” என்று பயத்தில் உளற ஆரம்பித்தேன்.
விசாரணை தொடங்கி முடிந்தது. நன்கு விசாரிக்கையில், ‘நான் கார் ஓட்டுனர் இல்லை’ என்று பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு தெரிய வந்து தீர்ப்பு வழங்கினார்கள் அந்த ஆறறிவு நீதிபதிகள்! அதிலும் மணப்பெண்ணின் தாயோ ஏதேதோ என்னைத் திட்ட, கூடியிருந்தவர்கள், “இதே பொழப்பா அலையிறானுங்க, கை கால் நல்லா தானே இருக்கு, ஒழைச்சு சாப்புட வேண்டியதுதானே” என்று அங்கு கூடியிருந்த அனைவரும் விடாமல் பேசிக்கொண்டே இருக்க அவமானமும், கோபமும்,அழுகையும், கண்ணீருமாய் மண்டபத்தை விட்டு பசிக்கொடுமையோடு வெளியேறினேன்.
“ நம்ம கிராமங்கள்ல காசே இல்லாதவன் கூட கண்ட கண்ட எடத்தில் எல்லாம் கடன் வாங்கி கல்யாணம் பண்ணி ஏழைபாழைக்கு சாப்பாடு போடுறான். எந்த கணக்கும் பார்க்கிறதில்ல! கல்யாணம் முடிஞ்சு மிச்சத்தை ஊர்மக்கள் சாப்பிட்டு,பறவை விலங்கு எல்லாம் சாப்பிட்டு, மிச்சமீதிய ஊர் கொளத்துல வெட்டி கொட்டுற மனுசங்க எங்கே? ஒரு ஆளு சாப்பிடுவதற்கு கணக்கு பாக்குற இந்த பணக்கார மனுஷங்க எங்கே? மக்களுக்குத் தேவை பணமா, குணமா, அந்த ஏழைகளின் வஞ்சமில்லா மனசு எங்கே? செல்வச் செழிப்பா கோபுரங்கள்ல வாழ்ந்துகி ட்டு அற்ப செலவுக்கும் கணக்கு பார்க்குற ஒரு சில பணக்காரர்கள் எங்கே?” என்று மனதில் பாரத்துடன் எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டே நடந்தேன்.
இப்பொழுது ஒரே தீர்க்க முடிவோடு இரண்டு கடைகளை தாண்டி ஒரு உணவகத்தின் வாசலை அடைந்தேன். கால்சட்டையைத் துலாவி கசங்கியிருந்த அந்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளைத் தொட பிள்ளைகள் இருவரின் முகமும் மாறி மாறி வந்து போனது.. ‘இருப்பினும் ஒரு டீ,ஒரு வடை சாப்பிட்டாவது ஊருக்கு போய்ச் சேர வேண்டும்’ என்று உறுதியாக நினைத்த உணவகத்தின் படியில் முன்னேறியவனை தடுத்து நிறுத்தியது கல்வி எனும் பேராயுதம். ஐந்தாம் வகுப்பில் நான் படித்த கல்வி அதிகாரத்தின் பொருளும் முக்கியத்துவமும் என் மனதிற்குள் ஓடியது.
அது மட்டுமல்லாமல் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பமே கல்வி கற்றது போன்றது, கல்வியால் மட்டுமே இந்த சமுதாயத்தில் முன்னேற்றம் இருக்கும், ஏழ்மை எனும் கொடிய நோயை விரட்டி அடிக்க கல்வி எனும் பேராயுதமே சரி, கல்வியை ஏற்று சமுதாயமே முன்னேறு, என்ற கல்வியின் மகத்தான தத்துவங்கள் ஏனோ என் மனதிற்கு என் ஏழ்மையை போக்க வந்ததாகவே தோன்றியது.
நான் படும் துயரம், என் ஏழ்மை என் பிள்ளைகளையும் துரத்தக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். உடனே வேகமாக என் கால்கள் நோட்டுப் புத்தக கடை வாசலில் நின்றது. எனது கைகளோ அந்த இரண்டு பத்து ரூபாய் நாணயங்களுக்கு பேனாக்களை வாங்கி எனது கால் சட்டை பைக்குள் போட்டது.
இப்பொழுது என் மனம் எந்த கனமும் இல்லாமல் மனம் நிறைந்த மகிழ்வோடும், மிகுந்த உற்சாகத்தோடும்,எனது கிராமத்தை நோக்கி, எனது பிள்ளைகளின் ஐஏஎஸ் கனவுகளில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
எதிர்காலத்தில் என் பிள்ளைகள் வாழ்க்கையில் வெளிச்சத்தை பரப்ப இருக்கும் வெயிலவனும், மேகத்திற்குள் சற்றே தன்னை மறைத்துக் கொண்டு வைத்த கண் வாங்காமல் எனைப் பார்த்து வெற்றிப் புன்னகை பூத்துக் கொண்டிருந்தான்!
மா.பாண்டிச்செல்வம் என்ற சங்கீதா,
MSc,MA,M.phil,B.ED,
பட்டதாரி ஆசிரியை (அறிவியல்),